மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

அதிமுக-பாஜக கூட்டணி வளர்ச்சிக்கு அடித்தளம்: ஜிகே.வாசன்

அதிமுக-பாஜக கூட்டணி வளர்ச்சிக்கு அடித்தளம்: ஜிகே.வாசன்

மத்திய, மாநில அரசுகளுடைய ஒத்த கருத்து என்பது தமிழகத்தின் வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளம் என்று கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

கோவை பாஜக வேட்பாளர் சிபி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் நேற்று (ஏப்ரல் 10) இரவு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஜி.கே.வாசன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “இந்தியத் திருநாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் இது. நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நல்லரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற பாஜக அரசு, வரும் ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசாக மாற்றக்கூடிய வல்லமை பெற்ற அரசு” என்றார்.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சாதாரண மக்களோடு பழகி, அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க கூடியவர்களாக இருப்பதாகக் கூறிய வாசன், “தமிழகத்தில் இருக்கிற அனைத்து துறைகளிலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுடைய ஒத்த கருத்து என்பது தமிழகத்தின் வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளம்” என்றார்.

”கோயம்புத்தூர் தொகுதியைப் பொறுத்தவரையில், மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.150 கோடியில் 3 மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. அதேபோல கவுண்டம்பாளையம் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. தாலிக்கு தங்கம், வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏதுவாக இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு. குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.2 லட்சம் மானியம் கொடுக்கப்படுகிறது” என்று மாநில அரசின் திட்டங்களை ஜி.கே.வாசன் பட்டியலிட்டுப் பேசினார்.

சிபி.ராதாகிருஷ்ணன் கோவை மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து செயல்படக்கூடியவர் என்று கூறிய வாசன், அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். முன்னதாக திருப்பூரில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்துப் பேசுகையில், நாடு பாதுகாப்பாக இருக்க மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon