மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

விவசாயிகளை மேலும் வஞ்சிக்க வேண்டாம்!

விவசாயிகளை மேலும் வஞ்சிக்க வேண்டாம்!

விவசாய நெருக்கடி என்பது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகள் என அனைவரையும் கடுமையாகப் பாதித்து இருக்கிறது.

பொருளாதாரம் தொடர்ந்து வளர வேண்டுமென்றால் வேளாண் துறை, தொழிற்சாலைகளுக்கு வழிவிட வேண்டும் எனும் கருத்து காலங்காலமாக இருந்து வருகிறது. ஒரு பொருளாதாரம் வேகமாக வளரும்போது, தேசத்தின் மொத்த உற்பத்தியில் (GDP எனப்படும் Gross Domestic Product) விவசாயத்தின் பங்கு குறைந்து நவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும் தொழில் துறை மற்றும் சேவைத் துறையின் பங்கு அதிகரிக்கும்.

இந்தப் போக்கைத் தமிழ்நாட்டிலேயே நாம் பார்க்க முடியும். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு 10 விழுக்காட்டுக்கும் குறைவு. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்களின் பங்கு வேகமாகக் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதற்காக அத்துறையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா? அத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியுமா?

தமிழ்நாட்டில் நிலம் வைத்திருப்பவர்களில் சிறு, குறு விவசாயிகளே (5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்) பெரும்பங்கு வகிக்கின்றனர். இவர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. இதைப்பற்றி வேளாண் கணக்கெடுப்பு (Agricultural Census) 2010-11, 2015-16 தரும் தகவல்களை அட்டவணையில் பார்ப்போம்.

விவசாய நெருக்கடி என்பது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகள் என அனைவரையும் கடுமையாகப் பாதித்து இருக்கிறது. விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை, விவசாயக் கடன் ரத்து முதலியவற்றைக் கோரி, தமிழ்நாட்டு விவசாயிகள் மட்டுமின்றி, மற்ற மாநில விவசாயிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியை நோக்கிப் புறப்பட்டு போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இது போதாதென்று, சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை போடுகிறோம் என்ற பெயரில் அரசே விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் நிவாரணம் கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்திலுள்ள சிங்கூர் மற்றும் நந்திகிராம் எனும் கிராமங்களில் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்த முயன்ற கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு 2011 சட்டசபைத் தேர்தலில் அம்மாநில மக்கள் கற்பித்த பாடம் நினைவிலிருந்தால் சரி.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon