மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள்: துரைமுருகன்

தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள்: துரைமுருகன்

கதிர் ஆனந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்கை சட்டரீதியாகச் சந்திப்போம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று (ஏப்ரல் 10) செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “திமுகவில் தலைவருக்கு அடுத்தபடியாக பேராசிரியருக்கு இணையான பதவியில் நான்தான் இருக்கிறேன். என்னை பயமுறுத்துவதால் திமுகவை பயமுறுத்திவிடலாம் என்று நினைத்து தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள். பணப் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம். வழக்கு இப்போது வராது, அது வருவதற்கு நீண்ட நாட்களாகும். அப்போது பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, “நீங்கள் யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்” என்று பதிலளித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கதிர் ஆனந்த் மீதான வழக்கை சட்டரீதியாகச் சந்திப்போம்” என்றும் தெரிவித்தார்.

வேலூர் தேர்தல் ரத்தா?

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, “இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுள்ளோம். இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவோம். தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon