மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை!

அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை!

அனுமதியின்றி சாலைகளில் கட்சி கொடிக்கம்பங்கள் வைப்பதும் ஆக்கிரமிப்புதான் எனவும், இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ”மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளைத் தோண்டி, அரசியல் கட்சியினர் கட்சி கொடிக்கம்பங்களை நாட்டுகின்றனர். இது தமிழ்நாடு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நாட்டுவது தொடர்பான விதிகளை, மாவட்ட நிர்வாகங்களும், மாநில நெடுஞ்சாலை துறையும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் அமல்படுத்துவதில்லை.

சாலைகளைத் தோண்டுவதைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. கொடிக்கம்பம் நடுவதால் கட்சியினர் இடையில் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி சாலைகளில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (ஏப்ரல் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுவது என்பது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாகும். இதன் மூலம் பொது சொத்துகள் சேதம் அடைந்தால் அந்தப் பாதிப்புகளை மதிப்பீடு செய்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இழப்பீடுகளை சட்டப்படி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பணியில் ஈடுபடும் களப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அவ்வப்பொழுது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆட்சியர் சம்பந்தப்பட்ட விதிமீறல் கொடிக் கம்பங்கள் அமைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணியில் உரிய முறையில் ஈடுபடாத களப்பணியாளர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், “இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் காவல் துறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாலைகளை ஆக்கிரமித்து கொடிக்கம்பங்கள் வைக்கப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனவும் கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் உரிய அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் நடப்படவில்லை என்பதை உறுதி செய்வதை நீதிமன்றமும் விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், “கொடிக்கம்பங்கள் நட யாரேனும் அனுமதி கேட்டால் அதைச் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து எந்த விதிமுறை மீறலும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த நீதிமன்ற உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உறுதி செய்ய வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon