மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

மோடிகளை உருவாக்கும் மோடி

மோடிகளை உருவாக்கும் மோடி

எஸ்.பிரசன்னா

“சிசிடிவி கேமராக்கள் திருடர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக நேர்மையானவர்களை நேர்மையானவர்களாக வைத்திருக்கவே பயன்படுகிறது” என்று ஒரு வாசகம் உண்டு. நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, சிசிடிவி இல்லாத கடையைப் போன்றது.

ஒரு குற்றத்தைச் செய்தவருக்கு அதே குற்றத்தைத் தண்டனையாக வழங்குவது ஆதிமனித இயல்பு. ஆனால், நமது நீதி பல ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து குற்றவாளி, பாதிக்கப்பட்டவர் இருவருக்குமே நியாயம் கிடைக்கும் வகையில் மாறியது மனிதத்தின் பரிசு.

இந்த அமைப்பு அவ்வப்போது சீர்குலையலாம். ஒரு சாமானிய நபர் அன்பையும், நம்பிக்கையையும் தேடுவதற்குப் பதிலாக, வெறுப்பையும், அவநம்பிக்கையையும் தேடக்கூடும். இதைத்தான் இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். மக்களிடையே மூலாதார பயத்தை விதைத்து, அனைவரும் ஆபத்தில் இருப்பது போல உணரவைத்து அச்சத்தையும், அவநம்பிக்கையையும் மக்களிடம் உருவாக்கியுள்ளார் நம் பிரதமர். இதன் ஒரு குறியீடுதான் சவுகிதார் (காவலாளி) பிரச்சாரம்.

எல்லோருமே சவுகிதாராக வேண்டுமென மோடி சொல்கிறார். சவுகிதார்கள் நிரம்பிய நாடு அச்சம், அவநம்பிக்கை போன்றவற்றால்தான் இயங்கும். சக மனிதர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரத்தையும் இந்த சவுகிதார் அமைப்பு வழங்கிவிடும். பசுப் பாதுகாவலர்களும் சவுகிதார்கள்தான். கும்பல் படுகொலை செய்பவர்களும் சவுகிதார்தான். தேசிய கீதத்துக்காக எழுந்து நிற்கும்படி கூச்சலிடுபவர்களும் சவுகிதார்தான்.

நீண்ட காலமாக நம்மிடையே ஆழமாக ஊடுருவியிருக்கும் நோயின் வெளிப்பாடுதான் மோடி. இந்துக்களுக்கு அபாயம் என்று சொல்லி இந்துக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கும் கட்சி பாஜக. தான் முன்னிறுத்தும் பாதிப்புக்குத் தீர்வாக மோடி முன்வைப்பது பழிவாங்குதலை. நாம் இழந்துவிட்ட மகோன்னதம், நமது எதிரிகள், நமது துரோகிகள், நமக்கான அபாயங்கள்… இவை அனைத்தையும் வரையறுப்பவர் மோடி. இந்த அபாயத்திலிருந்து வெற்றி தேடித் தரக்கூடியவர் மோடி. அவரே நம் மீட்பர். இதுதான் பாஜகவும் மோடியும் நம்மிடையே நாள்தோறும் முன்வைக்கும் கதையாடல். இதை ஆதரித்தோ, எதிர்த்தோ பேச வேண்டிய நிலைக்கு நாம் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இந்தக் கதையாடலைக் கேட்கும் சாமானிய இந்துக்கள் இதிலுள்ள உடனடி வசீகரத்தால், மேலோட்டமான கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். ‘பாதிக்கப்பட்டவர்’, ‘அபாயத்துக்கு உள்ளானவர்’ என்னும் படிமத்தைத் தங்களை அறியாமலேயே பலரும் தங்கள் மீது போர்த்திக்கொள்கின்றனர். அவர்கள் இந்தக் கதையாடலைக் கிளிப்பிள்ளைகள்போலத் திருப்பிச் சொல்கின்றனர். மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகள், துரோகிகள் என முத்திரை குத்துகின்றனர்.

நாடு, குடும்பங்கள், நண்பர்கள் ஆகியவற்றை அண்மைக் காலத்தில் மோடியைப் போல வேறு யாரும் பிளவுபடுத்தவில்லை. அரசியல், அரசியல்வாதிகள், தேர்தல் போன்றவை கல்விபெற்ற நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் ஆவலை இந்த அளவுக்குத் தூண்டியதே இல்லை. தேர்தலில் வாக்களிக்காமலே இருந்த சாரார்கூட இப்போது மோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கின்றனர். மக்களின் அரசியல் ஈடுபாடு என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதற்கான காரணம் வேதனையளிக்கிறது. அது சக மனிதர்கள் மீதான ஐயத்திலிருந்து பிறந்த அரசியல். மிகைப்படுத்தப்பட்ட அபாயம் குறித்த அச்சத்திலிருந்து பிறந்த ஈடுபாடு. வெறுப்பை விதைக்கும் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அரசியல் முனைப்பு.

இன்று சூழலே அப்படித்தான் மாறியிருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் கூச்சலும், குழப்பமும் விஷத்தனமாக உள்ளன. அரசின் செயல்பாடுகள் குறித்து தினசரி சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து விவாதிக்க வேண்டும் என்னும் நெருக்கடி ஒவ்வொருவருக்கும் உருவாகியுள்ளது. ஒருவர் வெளிப்படுத்தும் கருத்தை வைத்து அவர் மீது முத்திரை குத்தப்படுகிறது. பின்னர் அந்தக் கருத்துக்கு ஆதரவாக விவாதித்து, வாதிடும் அந்த நபர் தன்னை அறியாமலேயே இரண்டில் ஏதோ ஒரு பிரிவில் சேர்ந்துவிடுகிறார்.

இங்கு கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் இடமில்லை. ஐயங்களுக்கு இடமில்லை. இரண்டு பிரிவுகளில் ஏதோவொரு சார்பை நீங்கள் எடுத்தே ஆக வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு சமயத்தில் மோடிக்கு ஆதரவளித்தால் காலம் முழுவதும் மோடிக்கு ஆதரவளித்தாக வேண்டும். அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினம். இதேதான் எதிர்த் தரப்பின் நிலையும்.

குற்றம் புரியும் ஒருவரைத் தொடர்ந்து குற்றவாளி என அழைப்பதாலும், அவமானப்படுத்துவதாலும் அவர் மனம் வருந்தப்போவதில்லை. அவர் மேலும் மேலும் அதே செயலில் தொடர்ந்து ஈடுபடவே இதுபோன்ற அழுத்தங்கள் உதவும். மோடி ஆதரவாளர்கள் அனைவரும் மத வெறியர்களோ, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளோ அல்லர். ஆதரவு என்பது ஒரு சூழலில் பல காரணங்களால் உருவாவது. அது நிரந்தரமாக அப்படியே இருக்கும் என்பதில்லை. ஆனால், மோடிக்கு ஆதரவாக ஏதோ ஒரு வார்த்தையை ஒருவர் சொன்னதுமே அவரை பக்தர் என்றோ, சங்கி என்றோ அழைப்பது அவருக்கு மேலும் அழுத்தத்தைத்தான் கொடுக்கும். தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை அவருக்கு அது கொடுக்காது. அவருடன் உரையாடுவதற்கான வழியை இதுபோன்ற எதிர்வினைகள் அடைத்துவிடுகின்றன.

நாம் அனைவரிடமுமே அன்பும் வெறுப்பும் உள்ளன. சிறுபான்மையினருக்கும், இடதுசாரிகளுக்கும் எதிராக வெறுப்பைத் தூண்டியிருக்கும் மோடி, தனக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டியிருக்கிறார். இதனால்தான் மோடி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் எளிதாக இரு பிரிவுகளாக ஆகிவிட்டனர். வெறுப்புதான் மோடியின் மூலதனம்.

இந்த இடத்தில்தான் காந்தி இல்லாத குறையை நாம் உணர்கிறோம். மோசமான மனிதர்களிடம்கூட வெறுப்பின்றி மரியாதையாகப் பேசக்கூடியவர் காந்தி. மோடி வெறுப்பை விதைக்கிறார் என்றால் அவரை எதிர்ப்பவர்கள் அன்பின் மொழியில் பேசுவதுதான் சரியாக இருக்கும். ஆனால், பலரும் மோடியின் மொழியில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மோடி ஏற்படுத்திய தாக்கங்களிலேயே மோசமான தாக்கம் இதுதான். மோடியின் மீதும் மோடியை ஏதோ ஒரு காரணத்தால் ஆதரிப்பவர்கள் மீதும் வெறுப்பைக் கொட்டுவதன் மூலம் இந்தச் சூழலைப் பலரும் மேலும் மாசுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். மாற்றுக் கருத்தாளர்களுடனான உரையாடலுக்கான கதவை மூடுகிறார்கள். இப்படியே போனால், நம் நாட்டில் பல ‘மோடி’கள் உருவாகிவிடுவார்கள்.

சமூக ஊடகங்களில் நாம் ஒரு கருத்தைப் பதிவிடும்போது, எந்த அரசியல் அடையாளமும் நம் மீது விழுந்துவிடாமல் அந்தக் கருத்துக்கு ஆதரவாக வாதிடுவது மிகவும் கடினமானது. சமூக ஊடகங்களில் நடக்கும் விவாதம் இரு நபர்களுக்கு இடையே நடைபெறாமல் இரண்டு கட்சிகளுக்கும், இரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையிலான மோதலாகவே நடைபெறுகிறது. சாமானிய மக்கள் இப்படி அணிபிரிந்து நிற்காமலேயே தங்களுக்குள் உரையாடலாம். விவாதிக்கலாம். ஆனால், இன்று அது சாத்தியமில்லை.

இந்தத் தேர்தலில் பாஜக தோற்றால் அது அரசின் பொருளாதாரச் செயல்பாடுகளின் மீதான அதிருப்தியால் நடக்குமே தவிர, அரசியல் கொள்கைகளுக்காக அல்ல. ஒரு தேசமாக நாம் பாஜகவின் அரசியல் கொள்கைகளுக்கு மாற்றை முன்வைக்கத் தவறிவிட்டோம். அன்புடனும், சத்தியத்துடனும் செயல்படுவதற்கான ஆற்றலை இழந்துவிட்டோம். வெறுப்புக்குப் பதிலாக அன்பைத் தரும் பக்குவத்தை இழந்துவிட்டோம்.

ஜனநாயகம், அமைதி, நேர்மை ஆகியவற்றை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை நாம் பெற வேண்டும். வெறுப்பு, சண்டை, சந்தேகம், கவலை இல்லாமல் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். நமக்கு நண்பர்களும், உறவினர்களும் வேண்டும். நமது இயல்பு வாழ்க்கையும் வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய, அனைவருக்கும் மதிப்பளிக்கக்கூடிய ஒரு தலைவர் நமக்கு வேண்டும். இத்தகைய சூழலை உருவாக்க, முதலில் நாம் வெறுப்பின் மொழியிலிருந்து வெளியேற வேண்டும். நண்பன் – எதிரி என்னும் கற்பிதங்களை விட்டு விடுபட வேண்டும். இணக்கத்தை உருவாக்க யாரேனும் ஒரு தலைவர் வருவார் எனக் காத்திருக்காமல் நம்மிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும்.

இல்லாவிடில் நமக்கு எதிர்காலத்தில் இன்னொரு மோடிதான் கிடைப்பார்.

(கட்டுரையாளர் எஸ்.பிரசன்னா காந்தியச் சிந்தனையாளர், மனிதவள மேம்பாட்டுத் துறை பயிற்றுநர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon