மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

தூத்துக்குடி - திருச்செந்தூர் - நெல்லை இடையே மின்பாதை!

தூத்துக்குடி - திருச்செந்தூர் - நெல்லை இடையே மின்பாதை!

தூத்துக்குடி தொகுதிக்குத் தனி தேர்தல் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று (ஏப்ரல் 10) வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18இல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. தூத்துக்குடியில் திமுக எம்.பி கனிமொழியும், அவருக்கு எதிராக பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் களம் காண்கின்றனர். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் நேற்று கனிமொழிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை போட்டியிடலாமா? ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்சினைகள் கொண்ட தூத்துக்குடிக்குத் தோற்பதற்காக வந்தீர்களா? டெபாசிட் இழக்கப் போகும் தமிழிசைக்கு திமுகவின் அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மக்களைக் கவரும் விதமாக அம்மாவட்டத்துக்குத் தமிழிசை தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்.

* தூத்துக்குடி விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை

* தூத்துக்குடி - திருச்செந்தூர் - நெல்லை இடையே மின்பாதை அமைத்து மின்சார ரயில் செல்ல நடவடிக்கை

* தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட நடவடிக்கை

* திருச்செந்தூர் பாத யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்குத் தனி வழித்தடம் அமைக்க நடவடிக்கை

* மத்திய அரசிடம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்

* தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை

* பனைத் தொழில் உற்பத்தி பொருட்களுக்குத் தனி சந்தை அமைத்து தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு

ஆகியவை இடம் பெற்றுள்ளன.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon