பிகார் மக்களையும் கிச்சடியையும் பிரிக்க முடியாது. அரிசி, பருப்பு, கரம் மசாலா சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கிச்சடி, சில வகை பராத்தாக்களுமே அவர்களது தினசரி மதிய உணவு. குறிப்பாக, நமக்கு ‘சனி நீராடு’ என்பதுபோல, அவர்கள் சனிக்கிழமைதோறும் கிச்சடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சீனியர்களின் ஸ்பெஷல் கிச்சடியாக இந்த குதிரைவாலி கிச்சடியைச் செய்கிறார்கள்.
என்ன தேவை?
குதிரைவாலி - ஒரு கப்
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப்
வெங்காயம் - ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித் தழை - சிறிதளவு (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உளுந்து - ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
எண்ணெய், நெய் சேர்த்து வாணலியில் காயவைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டுத் தாளிக்கவும். இதனுடன், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கி... தொடர்ந்து, பொடியாக நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். தேவையான அளவு உப்பைப் போட்டு தக்காளி கரையும்வரை வதக்கி, அதனுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் குதிரைவாலியை அதில் கொட்டிக் கிளறி தண்ணீர் வற்றியதும், தீயைக் குறைத்து, 5 நிமிடங்கள் மூடி விடவும். இப்போது சூடான சுவையான குதிரைவாலி கிச்சடி தயார்.
என்ன பலன்?
புரதச் சத்து, கொழுப்புச் சத்து, நார்ச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரம் அடங்கிய குதிரைவாலி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து, செரிமானத்துக்கு உதவுவதால் பெரியவர்களின் சிறப்பு உணவாகக் கொண்டாடப்படுகிறது.