மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

வீணையும் நானும்!

வீணையும் நானும்!

ஒரு கப் காபி

கடந்த வாரம் திருத்துறைப்பூண்டிக்கு இரு நாள் பயணம் மேற்கொள்ளும் அத்திப்பூ சந்தர்ப்பம் பூத்தது. வெப்ப விழா என்ற பதம் கிராமங்களுக்குதான் பொருத்தமாக இருக்கும். வெயில் என்பதை வெப்ப விழாவாகவே கொண்டாடும் மரபார்ந்த மனம் கிராமங்களுக்கே உண்டு.

பங்குனி முடிந்து சித்திரை பிறக்கப் போகும் இத்தருணத்தில் ஊரெங்கும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் துவங்கியிருக்கின்றன. மைக் செட் கட்டி அதில் அம்மன் பாடல்கள் ஓயாமல் ஒலிக்கின்றன.

இந்த வெப்ப விழாவிடையே நான் சென்றது ஒரு வளைகாப்பு சீமந்த விழாவுக்காக. என் உறவினர் பெண்ணின் சீமந்த விழா. கர்ப்பிணிப் பெண்ணை மனம் கோணாமல் கொண்டாடி அவளது பிறந்த வீட்டுக்குப் பிரசவத்துக்காக அனுப்பி வைக்கும் பெருவிழா.

பொதுவாகவே கர்ப்பிணிகள் இசை கேட்டால் அவர்களுக்கும், வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் நல்லது என்பார்கள். நகர்ப்புறங்களில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்காக தனி கோச்சிங் வகுப்புகள்கூட ஆரம்பித்துவிட்டதாகக் கேள்வி.

கிராமப்புறங்களில் இன்னும் நம் மரபு கைவிடாமல் வைத்திருக்கும் ஒரு நற்பண்பு கர்ப்பிணிகளை இசை கேட்க வைத்தல். வெப்பம் தணிந்து மாலையில் லேசான காற்று வீசிக்கொண்டிருக்கும் இன்ப நேரத்தில் வளைகாப்பு நாயகியை அமர வைத்து, சுற்றிலும் நாங்களும் அமர்ந்திருந்தோம்.

திருவையாறு இசைக் கல்லூரியில் தேர்ச்சி பெற்ற ஒரு பெண் இசைக் கலைஞர் வீணை வாசிக்க ஆரம்பித்தார். பக்திப் பாடல்களிலிருந்து, ரசிக சீமானேவுக்கு வந்து இப்போதைய ரவுடி பேபி வரை வீணையின் நரம்புகளை மீட்டியபோது ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு போதை.

எனக்கு ரொம்பகாலமாகவே வீணையின் இசையை அப்படியே கேட்க வேண்டும் என்று ஆசை. அதாவது வீணையை ஸ்பீக்கரில் கனெக்‌ஷன் கொடுத்து அதன் மூலம் வரும் மின் பெருக்கி இசையைத்தான் பெரும்பாலும் கேட்டிருக்கிறேன். ஆனால் இங்கே இசைக் கலைஞர், வீணை, வீணை மட்டுமே. எதிரில் நாங்கள்.

அவர் வீணையை இசைக்கிறார். அதிலிருந்து வருகிற நாதம் எந்த மின் ஒலிபெருக்கியிலும் சம்பந்தப்படாமல் நேரடியாகக் காற்று மூலம் எங்கள் காதுகளை அடைகிறது. மிகப் பரவசமான நேரம் அது. மாலை நேரம், பக்கத்தில் குளம், பந்தல் போட்டு அமர்ந்து அதில் வீணை இசைக் கச்சேரி கேட்பது என்பது எதிர்பாராத இன்பமாக அமைந்தது.

இப்போதைய நம் வீட்டுத் திருவிழாக்களில் இசைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் குறைத்துவிட்டோம். நாதஸ்வரத்தைக்கூடத் திருமண நிகழ்வுகளுக்கு மட்டுமே அழைக்கிறோம். அதுவும் நகர்ப்புறங்களில் லைட் மியூசிக் நிகச்சிகளில் செயற்கை இசையை ஏற்கனவே உருவாக்கிவைத்து அதன் இடையிடையே பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மரபுத் திரிபு காலத்தில் கர்ப்பிணிக்காகவும் கருவில் இருக்கும் குழந்தைக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட வீணை இசை கேட்ட அனைவரையுமே மயக்கியது.

திருவையாறு இசைக் கல்லூரி போன்று பல இசைக் கல்லூரிகளில் பயின்ற ஏராளமான இசைக் கலைஞர்கள் நம்மில் இருக்கிறார்கள். அவர்களை நாம் இதுபோன்ற விழாக்களில் அழைத்து இசைக்க வைத்து ஊக்குவிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

நிகழ்வு முடித்து பேருந்து ஏறி சென்னையில் இறங்கியபோது பின்னால் இருந்து பிடரியில் அடிப்பது போல கொடூர ஹாரன் தாக்கியது. நேற்று நெஞ்சில் பெய்த அந்த வீணையின் இசை இன்னும் தேங்கியிருந்ததால், அந்த ஹாரன் காரன் மீது கோபம் செலுத்தாமல் புன்னகைத்துக்கொண்டேன்.

நம் வீட்டு விழாக்களில் இசையை மீண்டும் பெரிய அளவில் புழங்கச் செய்ய வேண்டும். இசைக் கலைஞர்களின் வாழ்வுக்கும் நம் வாழ்வுக்கும் இது ஆகப் பெரிய ஆறுதலாக இருக்கும்.

- ஆரா

புதன், 10 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon