மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

கூகுள்: உலகின் முதல் பறக்கும் டெலிவரி!

கூகுள்: உலகின் முதல் பறக்கும் டெலிவரி!

உலகின் முதல் பறக்கும் ட்ரோன் டெலிவரிக்கு, தேர்வுக்குப் பின் நேற்று (ஏப்ரல் 9) ஆஸ்திரேலியாவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் கீழ் செயல்படும் கூகுள் புராஜக்ட் விங்க் என்ற கிளை நிறுவனம், கடந்த 18 மாதங்களாக ட்ரோன் மூலம் ஆன்லைன் டெலிவரிக்கான சோதனையில் ஈடுபட்டுவந்தது. முதல்கட்டச் சோதனையில் உணவு மற்றும் குளிர்பானங்கள், மருந்துகள், உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் சாக்லேட் மற்றும் காபி ஆகியவற்றை டெலிவரி செய்ய சோதனை செய்து வந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகர விமானக் கண்காணிப்பாளர் இத்திட்டத்துக்குக் கையெழுத்திட்டுள்ளார். பீட்டர் கிப்ஸன் என்ற செய்தி தொடர்பாளர் “ட்ரோன்களின் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, பராமரிப்பு, ட்ரோன் பைலட் பயிற்சி மற்றும் செயல்பாட்டு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களும் மதிப்பீடு செய்யப்பட்ட பின்பே தேர்வானது. அதனால் தரையில் உள்ள மக்களுக்கு, பொது சொத்துக்கு மற்றும் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு ஆபத்தில்லை” என்று கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பகல் நேர இயக்கத்துக்குக் கடுமையான சோதனைக்குப் பின்னே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதான சாலைகள் வழியாக ட்ரோன்கள் செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் தரையிலிருக்கும் மக்களுக்கு மேலே ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலே பறக்க வேண்டும் எனக் கட்டுப்பாட்டின் அடிப்படையில்தான் ட்ரோன் செயல்பட முடியும் எனத் தெரிகிறது.

கூகுளின் இந்தப் புதுமையான யோசனை எதிர்காலத்தைக் கருதியும் தன்னுடைய தொழில் போட்டிக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்தும் வகையிலும், சக போட்டியாளர்களுக்கு மத்தியில் முன்னோடியாக நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon