மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: பண விநியோகம்- ஸ்டாலின், எடப்பாடி வியூகத்தில் திடீர் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை:   பண விநியோகம்- ஸ்டாலின், எடப்பாடி வியூகத்தில் திடீர் மாற்றம்!

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்து சேர்ந்தது.

“மக்களவைத் தேர்தலின் பிரசாரக் களம் இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே இருக்கிறது. 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடக்க இருக்கும் நிலையில், 16 ஆம் தேதி மாலையோடு பிரச்சாரம் ஓய்கிறது. அதனால் முக்கிய அணிகளின் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு நிமிடத்தையும் கருத்தில் கொண்டு களத்தில் அலைகிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக அணிக்காக கடுமையான பிரசாரத்தில் இருக்கிறார். கடந்த சில நாட்களாக வெளிவரும் இந்திய அளவிலான முக்கியமான கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் தமிழகத்தில் திமுக அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கூட திமுகவே அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கின்றன.

இந்திய அளவில் பாஜகவுக்கு சாதமாக கருத்துக் கணிப்புகள் வந்தாலும் தமிழக அளவில் அவை அதிமுகவுக்கு எதிராகவே இருப்பதையும் முதல்வர் கவனித்து வருகிறார். இதுபற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தோடும் பேசியிருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் எடப்பாடியே 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடக்கும் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் போட்டிருக்கிறார்.

‘சட்டமன்ற இடைத்தேர்தல் பணி எப்படி நடக்கிறது?’ என்று கேட்டபடியே ஆரம்பித்தவர், ’நான் ஏற்கனவே தலைமைக் கழகத்துல நடந்த கூட்டத்துலயே வெளிப்படையா சொல்லியிருக்கேன். சட்டமன்ற இடைத்தேர்தல் நமக்கு ரொம்ப முக்கியமானது, அதனால யாரும் எந்த குறையும் வைக்காம வேலை பாக்கணும்னு சொல்லியிருக்கேன். ஆனால் கிடைக்கிற சேதிகள் நல்லா இல்ல. சில மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் பக்கமே வராம நம்ம கூட்டணிக் கட்சியின் எம்பி வேட்பாளர்களுக்கு வேலை செஞ்சுக்கிட்டிருக்கீங்க. அதெல்லாம் போதும் நிறுத்திக்கங்க.

இனிமே 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்குற தொகுதிகளோட மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் அந்த சட்டமன்றத்துல மட்டும் வேலைபார்த்தா போதும். எம்பி தொகுதி வேலையெல்லாம் பாக்க வேணாம். அதை மத்த நிர்வாகிகள் பாத்துப்பாங்க’ என்று உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி. கடந்த சனிக்கிழமை முதல் 18 தொகுதிக்கு உட்பட்ட மாசெக்கள் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல... அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணப்பட்டுவாடாவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அதிமுக டாப் சோர்ஸுகள். மக்களவைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தது அதிமுக. ஆனால் இப்போது தேவையில்லாமல் பணத்தை அங்கே கொட்ட வேண்டாம் என்று அதை 300 ரூபாயாக குறைக்க முடிவெடுத்துவிட்டார்களாம். அதேபோல இடைத்தேர்தல் தொகுதிகளில் ஓட்டுக்கு 2 ஆயிரம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அது இப்போது ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அதேநேரம் மக்களவைத் தேர்தலில் செலவைக் குறைத்து அந்த பணத்தை சட்டமன்ற இடைத்தேர்தலில் இறக்குவதாகவும் ஒரு திட்டம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அந்தத் திட்டம் உண்மையாக இருந்தால் சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட நிதி செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவின் பணம் ஆங்காங்கே தொகுதிகளில் ஏற்கனவே டெபாசிட் செய்யப்பட்டுவிட்ட நிலையில் டெலிவரி ஆரம்பித்துவிட்டதாம். எப்படியாவது 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஜெயித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது ஒன்றே எடப்பாடியின் லட்சியமாக இருக்கிறது.

அதிமுகவில் மக்களவைத் தேர்தலுக்கான பணத்தைக் குறைத்து சட்டமன்ற இடைத்தேர்தலில் இறக்கிவிடத் திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவிலோ ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்காக ஒரு ஓட்டுக்கு 300 என ஃபிக்ஸ் செய்து வைத்திருந்தவர்கள் இப்போது அதை 200 ரூபாயாக குறைத்துவிட்டார்கள். இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு மட்டும் ஓட்டுக்கு 500 என்று நிர்ணயித்திருக்கிறார்களாம். ஆனால் பல தொகுதிகளுக்கு இன்னும் பணம் சென்று சேரவில்லை. எப்படி யார் மூலமாக வரும் என்றும் தகவலும் வராததால், திமுக மாசெக்கள் பிரஷரில் இருக்கிறார்கள்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

இதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக், மெசெஞ்சர் மூலமாக இன்னொரு தகவலைப் பதிவிட்டது.

“தேர்தல் நேரங்களில் தலைவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் எந்த அளவுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். இந்த விஷயத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் எப்போதுமே நிர்வாகிகள் அணுகக் கூடிய வகையில்தான் இருப்பார். தேர்தல் நேரங்களில் இரவு 12 மணிக்கு கூட கலைஞரைப் பிடித்துப் பேச முடியும். சில தொகுதிகளில் உடனடியாக பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை என்றால் கீழ் மட்ட நிர்வாகியாக இருந்தால் கூட கலைஞரே பேசி உடனடியாக பிரச்சினையை சரி செய்துவிடுவார். ஜெயலலிதா எப்போதும் தன் கட்சி நிர்வாகிகளாலேயே அணுக முடியாத தலைவர் என்று பெயர் எடுத்தவர். அவர் கூட தேர்தல் சமயங்களில் பூங்குன்றன் மூலாக கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை, உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கிடுவார். பூங்குன்றன் சொன்னால் அம்மா சொன்ன மாதிரி என்று கருதி நிர்வாகிகளும் உத்தரவை நிறைவேற்றுவார்கள்.

இப்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடியும் ஒவ்வொரு நாள் இரவும் பிரச்சாரம் முடிந்த கையோடு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஏன் தேவைப்பட்டால் வேட்பாளர்களிடமே கூட பேசி சம்பந்தப்பட்ட இடங்களில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்துவிடுகிறார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசி தொகுதி நிலவரங்களை கேட்பதில்லை என்ற வருத்தப்படுகிறார்கள் திமுகவினர். குறிப்பிட்ட சில தொகுதிகளின் பிரச்சினைகள் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும் கூட அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குறையும் அவர்களுக்கு இருக்கிறது.

பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது கூட ஸ்டாலின் யாரிடமும் சிரித்துப் பேசி தொகுதியின் நிலைமை என்னவென்று அறிவதில்லை. அதற்கென்று சில ஆட்கள் வைத்திருக்கிறார். அவர்களிடம் மட்டும்தான் ஸ்டாலின் பேசுகிறார் என்ற புலம்பல் கடந்த சில வாரங்களாக திமுகவில் அதிகம் கேட்க ஆரம்பித்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 9 ஏப் 2019

அடுத்ததுchevronRight icon