மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

பாஜக வெல்லும்: கருத்துக் கணிப்புகளின் கணிப்பு!

பாஜக வெல்லும்: கருத்துக் கணிப்புகளின் கணிப்பு!

இதுவரை வெளியான 4 முக்கிய கருத்துக் கணிப்புகளின் சராசரியின்படி பாஜக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் ஒரு இடத்தைக் கூடுதலாகப் பெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டிப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரையில் வெளியானவற்றில் சில முக்கியக் கருத்துக் கணிப்புகளாக பார்க்கப்பட்ட சி வோட்டர், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு, சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் டைம்ஸ் நவ்-விம்ஆர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு ஆகியவற்றின் சராசரி அடிப்படையில் பார்த்தால் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கணித்துள்ளது.

சி வோட்டர் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 267 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 142 இடங்களையும், மற்ற கட்சிகள் 134 இடங்களையும் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 275 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 147 இடங்களையும், மற்ற கட்சிகள் 121 இடங்களையும் கைப்பற்றும் எனவும், சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 273 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களையும், மற்ற கட்சிகள் 145 இடங்களையும் கைப்பற்றும் எனவும், டைம்ஸ் நவ்-விம்ஆர் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 279 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 149 இடங்களையும், மற்ற கட்சிகள் 115 இடங்களையும் கைப்பற்றும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நான்கு கணிப்புகளின் அடிப்படையில், அதன் சராசரியைக் கணக்கிட்டு பாஜக 273 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 141 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 129 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் இந்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயத்தில் மீடியா நிறுவனங்கள் நடத்திய அத்தனை கருத்துக் கணிப்புகளும் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று இறுதி செய்யப்பட்ட பின்பே வெளியிடப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon