மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும், உயரும் கடனும்!

தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும், உயரும் கடனும்!

தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், திருப்பிச் செலுத்தப்படாத கல்விக்கடனும் இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை கிட்டத்தட்ட 100 விழுக்காடு. இவர்களில் பள்ளிக் கல்வியை எத்தனைபேர் முடித்து மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாட்டின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2016-17ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, தேசிய அளவில் 18-23 வயதில் உயர்கல்வியில் இருப்பவர்களின் பங்கு 25.2 விழுக்காடு. தமிழ்நாட்டில் 18-23 வயதில் உயர்கல்வியில் இருப்பவர்களின் பங்கு 47 விழுக்காடு; அதாவது தேசிய சராசரியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். இதில் தமிழ்நாடுதான் நாட்டில் முதன்மை மாநிலம்.

அதே வேளையில், திருப்பிச் செலுத்தப்படாத கல்விக் கடன்களில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 40 விழுக்காடு. தமிழகத்தை அடுத்து மற்ற தென்மாநிலங்கள் உள்ளன. இது நமக்கு சொல்லும் செய்தி என்ன? தென்மாநிலங்களில் மேற்படிப்பிற்கான தாகம் சமூகத்தில் எல்லா பிரிவைச் சேர்ந்த மக்களிடமும் அதிகரித்திருக்கிறது; ஆனால் அந்த படிப்பிற்கான செலவைச் சந்திக்கும் பொருளாதார நிலையில் அனைத்து குடும்பங்களும் இல்லாததால் கடன் வாங்க வேண்டியிருக்கிறது.

செலவு அதிகமாக இருப்பதற்குக் காரணம், தனியார் மயமாக்கப்பட்டுவரும் கல்வி. எப்படியோ படித்து முடித்து வேலை தேடுவோம் என்று கிளம்பினால், வேலைவாய்ப்புகள் பெரியளவில் பெருகவில்லை எனும் நிதர்சனத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்?

ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர வேண்டும் என்றால், அந்நாட்டின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். தென்மாநிலங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் (15 வயது-44 வயது) இருக்கும் பெண்களின் கருவுறுதல் விகிதம் (Fertility rate) 2.1க்கும் குறைவாக உள்ளது. இந்த விகிதம் 2.1 என்று இருந்தால்தான் ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை நிலையாக இருக்கும். தென்மாநிலங்களில் இது 2.1க்கும் குறைவாக இருப்பதால், வரும் காலங்களில் மக்கள் தொகை குறைவது மட்டுமின்றி, உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறையும்.

உழைக்கும் வயது மக்கள்தொகை குறையும்போது, உற்பத்தித் திறனை அதிகரித்தால் மட்டுமே ஒரு நாடோ அல்லது மாநிலமோ தொடர்ந்து வளர முடியும். உயர்கல்வி பயின்று வேலையில் அமர்வதே பெரும்பாடாக இருந்தால், பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை எப்படிப் பெருக்குவது? மேற்படிப்புக்கான சேர்க்கையில் நாட்டிலேயே முன்னிலையில் இருக்கும் தமிழகம், அந்த படிப்பை மாணவர்கள் தொடர்ந்து மேற்கொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தருவதிலும், படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon