மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

நாமக்கல்: ஈஸ்வரன் -தங்கமணி நிழல் யுத்தம்!

நாமக்கல்: ஈஸ்வரன் -தங்கமணி நிழல் யுத்தம்!

பழைய ராசிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் என மூன்று தொகுதிகளும்,திருச்செங்கோடு நாடாளுன்றத் தொகுதியில் இருந்து சங்ககிரி, பரமத்தி வேலூர், திருச்செங்கோடு என மூன்று தொகுதிகளையும் கொண்டு 2009இல் புதிதாக அமைக்கப்பட்டது நாமக்கல் தொகுதி.

முதல் தேர்தலில் தி.மு.கவுக்கும், இரண்டாவது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும் வெற்றி வாய்ப்பைக் கொடுத்த இந்த தொகுதியில் தற்போது, அதிமுக வேட்பாளராக காளியப்பனும், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஏ.கே.பி.சின்ராஜூம் போட்டியிடுகின்றனர்.

முந்தைய இரண்டு தேர்தலிலுமே மக்கள் தொடர்புகள் அதிகம் உள்ள வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர் இந்த தேர்தலில், மீண்டும் பி.ஆர்.சுந்தரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என பெரும்பாலான அதிமுகவினர் எதிர்பார்த்த நேரத்தில், மா.செ, வும் அமைச்சருமான தங்கமணி தனது பழைய நண்பரும், மாவட்ட பொருளாளருமான காளியப்பனுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார்.

தி.மு.க,வில் மா.செ காந்தி செல்வனே சீட்டு வாங்குவார் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில், எதிர்பாராத வகையில் திமுக கூட்டணியில் கொ.ம.தே.க கூட்டணிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டதும், அந்த கட்சி தி.மு.க,வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதும் வேட்பாளரான ஏ.கே.பி.சின்ராஜூக்கு கூடுதல் சிறப்பு.

கோழிப் பண்ணை, சவ்வரிசி ஆலை, நகைக்கடை, உணவகம் என பல தொழில்களை செய்துவரும் ஏ .கே.பி.சின்ராஜூ திமுக கூட்டணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் களப் பணிக்கு சென்று விட்டார். கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எப்போதும் அவர் பின்னாலேயே போகாமல், தினமும் தேர்தல் பணிமனைக்கு வந்துவிடுகிறார். காலை முதல் மாலை ஏழு மணி வரை அனைத்து ஒன்றியப் பொறுப்பாளர்களோடு பேசுகிறார். இரவு 7மணி முதல் 10 மணி வரை அனைத்து சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர்களிடமும் பேசுகிறார். இரவு 10 மணி முதல் 12 மணி வரை வேட்பாளரோடு மட்டும் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

ஒவ்வொரு நாள் பரப்புரையில் எப்படி இருந்தது, கூட்டணிக் கட்சியினர் எத்தனை பேர் வந்தார்கள், அதில் திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு, காங்கிரஸ் நிர்வாகிகள் ஒத்துழைப்பு என்பன பற்றியெல்லாம் விவாதிக்கும் ஈஸ்வரன்,. அடுத்த நாள் காலையிலேயே திமுக தலைவர் ஸ்டாலினிடம் நாமக்கல் தொகுதியைப் பற்றிய அறிக்கையை போனிலேயே சொல்லிவிடுகிறார். இதனால் திமுகவினரின் ஒத்துழைப்பு கொமதேகவுக்கு சுறுசுறுப்பாக கிடைக்கிறது.

கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திசெல்வன் ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் காட்டுவது போல தெரிந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் திமுகவில் இருக்கும் காந்தி செல்வன் ஆதரவாளர்கள், அவரது எதிர்க்கோஷ்டியினர் என எல்லாருமே ஏகேபி சின்ராஜுக்கு ஆதரவாக வேகமாகக் களமிறங்கிவிட்டனர்.

ஏகேபி சின்ராஜ் கொமதேக கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் முழுக்க முழுக்க திமுக துண்டையே அணிந்துகொள்கிறார்கள். பிரசாரக் களத்தில் எங்கும் கொமதேகவின் வண்ணத்தையே பார்க்க முடியவில்லை. வேட்டிமட்டும் தங்கள் கரைவேட்டியை அணிந்திருக்கிறார்கள் கொமதேகவினர். மற்றபடி எங்கும் திமுக நிறம்தான். இதற்குக் காரணம், ‘கொங்கு சமுதாயத்தை திமுகவிடம் அடகு வைத்துவிட்டார்’ என்று ஆரம்பத்தில் நாமக்கல் அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கரன் வைத்த விமர்சனம்தான். தவிர திமுகவினரின் முழு ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டே தன் கட்சி வண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு திமுக வண்ணத்துக்கு மாறியிருக்கிறார் வேட்பாளர்.

அமைச்சர் தங்கமணியின் அஜெண்டா

நாமக்கல் தொகுதியில் அதிமுக பெறுகிற வெற்றி தனது வெற்றி என்பதை உணர்ந்துள்ள தங்கமணி தொகுதி முழுதும் சுற்றிச் சுழன்று வருகிறார். அதேநேரம் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதிமுக வேட்பாளரை பலப்படுத்துவதை விட திமுகவின் கொமதேக வேட்பாளரை பலவீனப்படுத்துவதே தங்கமணியின் நோக்கமா என்று அதிமுகவினரே கேட்கிறார்கள்.

ஏகேபி சின்ராஜ் பொறுப்பு வகிக்கும் கொங்கு திருமண மண்டபம் டிரஸ்டில் ஊழல் நடந்திருப்பதாக அந்த டிரஸ்டில் இருக்கும் ஒரு உறுப்பினர் மூலமாகவே புகார் கிளப்பி அதை தொகுதி முழுக்க பரவ வைத்தார் தங்கமணி. ஆனால் இதைத் திட்டவட்டமாக மறுத்த சின்ராஜ்,

“எனக்கு போதுமான அளவுக்கு சொத்து இருக்குது. அதை ஒழுங்கா பார்த்துக் கொண்டாலே போதும். என்னுடைய தொகுதியில் அரசு ஒதுக்கும் நிதியில் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய வேலைகளில் கமிசன் வாங்க மாட்டேன். என்னுடைய சம்பளத்தை கூட தொகுதி மக்களின் நலனுக்காகத்தான் செலவு செய்வேன். நான் பொது வாழ்க்கைக்கு வந்த போதே என்னுடைய அப்பா, நீ எனக்குப் பிறந்த பையனா இருந்தா உன்னுடைய காசைத் தவிர வேறு ஒரு பைசா வேற யார்கிட்டே இருந்தும் ஏமாற்றி வாங்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கார். நான் என்றைக்குமே எங்க அப்பாவுடைய மகனாகத் தான் இருப்பேன்.” என்று தொகுதி முழுவதும் பேசி வருகிறார். இதற்கு மக்களிடம் வரவேற்பும், நம்பிக்கையும் உள்ளது.

மேலும் கொங்கு டிரஸ்ட் பற்றிய புகார் பற்றி நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று அமைச்சர் தங்கமணிக்கு கொமதேக பொதுச் செயலாளர் சவால் விட்டார். ஆனால் இன்னமும் அதிமுக தரப்பு விவாதத்துக்கு வரவில்லை.

கொங்கு குழுவின் தீவிரம்

இதையெல்லாம் தாண்டி கொங்கு இளைஞர்கள் குழு ஏகேபி சின்ராஜுக்காக கடுமையான பணியாயாற்றுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்து நாமக்கல்லில் வீடு எடுத்து தங்கி சமைத்து சாப்பிட்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தீவிர டோர் கேன்வாஸ் செய்துவருகிறார்கள் இந்த இளைஞர்கள் குழுவினர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், தருமபுரி போன்ற சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து வந்த கொங்கு இளைஞர்கள் உள்ளூர் தி.மு.க, வினரின் அரவணைப்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தி.மு.க ஆதரவு வாக்குகளை கணக்கெடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு சற்றும் குறையாமல் வெயில் தாங்க முடியாவிட்டாலும் அவ்வப்போது சின்ராஜ் தனது கையில் குளுகோஸ் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்வது பார்ப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது.

அதிமுகவினர் நம்பும் பணம்

அ.தி.மு.க, வின் வேட்பாளரான காளியப்பன் சிறுவயது முதலே அதிமுகவில் இருப்பவர். ஒரு முறை நாமக்கல் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தவர். நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் பொறுப்பிலும் இருந்துள்ளார். 1991, முதல் மாவட்ட பொருளாளர் பொறுப்பில் இருக்கிறார். இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படியான மக்கள் தொடர்பு எதுவும் இவருக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக 72 வயது நிரம்பிய இவர் சுட்டெரிக்கும் வெயிலையும் சமாளித்து சுற்றி வருகிறார்.

நாமக்கல் தொகுதி தவிர மற்ற பகுதிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தேர்தல் வேலைகளை செய்யாமல் அ.தி.மு.க,வினர் மந்தமான நிலையிலேயே இருக்கிறார்கள். கடைசி இரண்டு நாளில் காந்தியை கொடுத்து தான் ஒட்டு வாங்கப் போகிறோம் என்ற நினைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக அருந்ததியர் பகுதிகளில் ஓட்டுக்கு 500 என்றும், மற்ற பகுதிகளில் ஓட்டுக்கு 300 என்றும் திட்டமிட்டிருக்கிறது அதிமுக. அவர்கள் எவ்வளவு கொடுக்கிறார்களோ அதை விட ஒரு ரூபாயாவது அதிகம் கொடுப்பது என்பதில் திமுக தரப்பும் முடிவோடு இருக்கிறது.

தொழில் சுணக்கம்

நாமக்கல், சங்ககிரி, திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்தி வேலூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும், பாதி நகரமும், பாதி கிராமமும் உள்ளடங்கிய கிராமப் பகுதியாக இருப்பதால், இங்குள்ள மக்கள் அனைவருக்கும் தேசிய அரசியல் நிலவரம் தெளிவாக தெரிகிறது.

சவ்வரிசி ஆலைகள், கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தி, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு, லாரி மற்றும் ரிக் வண்டிகள் என மோட்டார் தொழில் சார்ந்துள்ள மக்கள் இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிப்பதாலும், மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஜி.எஸ்.டி வரியின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரம், தொழில் நசிவு உள்ளிட்ட பாதிப்பை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். அரசியல் சாராத பொது மக்களிடம் மோடி எதிர்ப்பு அலை பலமாக வீசுகிறது.

தான் சார்ந்துள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசத்தை அதிகம் காட்டியாகவேண்டும்.அப்போதுதான் தனது செல்வாக்கை தக்கவைக்க முடியும் என்ற கணக்கில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஏ.கே.மூர்த்தி பம்பரமாக சுற்றி வருகிறார். கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திசெல்வனும் தன் மீது புகார்கள் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.காந்திசெல்வனின் ஆதரவாளர்களும் தீவிரப் பணிகளில் இருக்கிறார்கள்.

மற்ற வேட்பாளர்கள்

அ.ம.மு.க வேட்பாளர் சாமிநாதன், தனக்கு செல்வாக்குள்ள பரமத்தி வேலூர் பகுதியை விட்டு தினமும் கொஞ்சதூரம் தொகுதிக்குள் சுற்றி வருகிறார். இது தவிர மற்ற ஐந்து தொகுதியிலும் கூட இவருக்கு கொஞ்சம் ஓட்டுகள் கிடைக்கும். எந்த விதமான போட்டியும் இல்லாமல் மூன்றாம் இடம் இவருக்கு கிடைக்கும்.

சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் பாஸ்கர் தன் வீடுள்ள பொம்முகுட்டை மேட்டுக்கும், நாமக்கல் நகருக்கும் சென்று வந்து நாமக்கல் சட்டமன்றத் தொகுதியை கடந்து இவருடைய பிரச்சாரம் வெளியே செல்லவில்லை.

கமலஹாசனின் மக்கள் நீதி மையம் சார்பில், கோவை நகரிலுள்ள சுக்ரிவார் பேட்டையை சேர்ந்த தங்கவேல் என்பவரை நாமக்கல் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளார் கமலஹாசன் நற்பணி மன்றத்தில் 37, ஆண்டுகளாக இருந்த காரணத்தினால் இவருக்கு நாமக்கல் தொகுதியின் மக்களுக்கு எம்.பி,ஆகும் வாய்ப்பை கமல் கொடுத்துள்ளார். ஆனால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவையிலிருந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்து விட்டுப் போனவர் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்புத்தூரில் இருந்து, சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி வரையில் 150, கிலோ மீட்டர் தூரத்துக்கு பரந்து கிடக்கும் நாமக்கல் தொகுதியின் சுற்றளவை பார்த்ததும், மிரண்டு போய் படுத்துக் கொண்டார்.

ஆளும் கட்சியினர் அவர்களின் ஆதரவாளர்களுக்கு காந்தியை அனுப்பினால், நாமும் காந்தியை அனுப்பவேண்டும் என்பதில் ஈஸ்வரன் தரப்பினர் தெளிவாக இருக்கிறார்கள்.

களப்பணிக்கு களப்பணி கரன்சிக்கு கரன்சி என்று அதிமுகவுக்கு சகல விதத்திலும் ஈடு கொடுத்து அமைச்சர் தங்கமணி- கொமதேக ஈஸ்வரன் இடையே நடக்கும் நிழல் யுத்தத்தில் முன்னே ஓடிக் கொண்டிருக்கிறார் ஏகேபி சின்ராஜ்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon