மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

தேனி: ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கிக் கொள்ளுங்கள்!

தேனி: ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கிக் கொள்ளுங்கள்!

ஆளுங்கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என மதுரையில் நடந்த பிரச்சாரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்தும், அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வனும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால் இத்தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. மூவரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மக்களவைத் தொகுதிக்குள் வருகிற மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று (ஏப்ரல் 8) இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஆளுங்கட்சியினர் ஆளுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் 500 ரூபாய் கொடுத்தால் வாங்காதீர்கள். 5000 ரூபாய் கேளுங்கள்.

அவர்கள் கொடுக்கும் பணம் அவர்களே உழைத்தது அல்ல. உங்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணம்தான் அது. இத்தனை நாட்களாக உங்களை எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிட்டு, கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தையும் நான் உடனடியாக செய்து கொடுப்பேன்” என்றார்.

மற்ற தொகுதிகளில் பிரபலங்களை களமிறக்கி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தேனி தொகுதியில் 4 வேட்பாளர்களும் தங்களது குடும்பத்தினரை களமிறக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக ஓபிஎஸ் மட்டுமின்றி அவருடைய மொத்த குடும்பத்தினரும் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்குப் போட்டியாக ஈவிகேஎஸ் இளங்கோவனும் தனது மகன் திருமகனை சில நாட்களாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார். இதைப்பார்த்த தங்க தமிழ்ச்செல்வன் தனது மகன் நிஷாந்த் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon