மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

தேனி: சமுதாய வாக்குகளின் உண்மை நிலவரம்!

தேனி: சமுதாய வாக்குகளின்  உண்மை நிலவரம்!

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், இவர்களை எதிர்த்து அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் களம் காண்கிறார்கள். தொகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்குப் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வழக்கமாகக் கட்சி ரீதியாக வாக்குகள் பிரியும் என்ற நிலையில், தேனி தொகுதியில் சாதி ரீதியாகவே வாக்கு பிரியும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

தொகுதியின் கள நிலவரங்களையும், மக்களின் மனநிலையையும் அறிந்துகொள்ள தேனி தொகுதிக்குட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தோம். ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 57 திருநங்கைகள் உட்பட 11.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வேட்பாளர்களில் அமமுக தங்க தமிழ்ச்செல்வன் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள இளங்கோவன் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்.

தேனி தொகுதி முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகமுள்ள பகுதி என ஊடகங்களிலும், வெளியிலும் பேசிக்கொண்டிருக்க, தொகுதிக்குள் ஆராய்ந்து பார்த்தால் கள்ளர், மறவர், அகமுடையோர் என முக்குலத்தோர் வாக்குகளைவிட மொழிச் சிறுபான்மை மற்றும் மதச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதியில் நாயக்கர், நாடார், பிள்ளைமார், யாதவர் சமூக வாக்காளர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். அனைத்துத் தொகுதிகளிலும் அருந்ததியர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன.

சமூக அடிப்படையில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கீழ்வரும் அட்டவணையில் சதவிகிதம் வாரியாகக் காண்போம்.

மக்கள் மனநிலை

தேனியின் முக்கியப் பிரச்சினைகள், கள நிலவரம் குறித்து அறிந்துகொள்ள தொகுதியிலுள்ள கிராமப்புறப் பகுதிகளை வலம்வந்தோம்.

கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பூலனாந்தபுரம் விவசாயி ரத்தின பாண்டியனிடம் பேசினோம். “அரசியல்வாதிகள் விவசாயி, விவசாயி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். விவசாயத்தை வளம்பெற வழிசெய்யுங்கள் என்றால் என்று மோடி 6,000 ரூபாயும், ராகுல் 76,000 ரூபாயும் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தால் விவசாயம் வளர்ந்துவிடுமா?” என்று கேள்வி எழுப்பியவர் தொடர்ந்தார்...

“30 வருடத்திற்கு முன்பு 60 சென்ட் நிலத்தில் பயிர் செய்தோம், லாபத்தைப் பார்த்தோம். இன்றைய நிலை என்ன தெரியுமா? 60 சென்ட் நிலத்தை உழுவது முதல் அறுவடை செய்வது வரை ரூ.8,850 வரை செலவாகிறது. அதில் விளைவது என்னவோ 15 மூட்டைகள்தான் ஒரு மூட்டை விலை ரூ.1,100 என 15 மூட்டைக்கு 16,500 ரூபாய் கிடைக்கும். அதில் மூட்டை ஏற்றுவதற்கு ஆகும் செலவு, தண்ணீர் செலவு அது இது எனக் கொஞ்சமாகவே மிஞ்சும். பாசனத்துக்குக் கிடைக்க வேண்டிய முல்லைப் பெரியாறு தண்ணீரும் சரியாகக் கிடைக்கவில்லை. அதற்கு ஆட்சியாளர்கள் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் ஏக்கரில் வாழை வைத்தேன், விலை போகாமல் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்து கடனாளியாக இருக்கிறேன்” என்றார் வேதனையாக.

கம்பம், ஓலைப்பட்டி, சுருளிப்பட்டி, கே.கே.பட்டி, கே.ஜி பட்டி, குயிலாபுரம் பகுதிகளில் திராட்சை அதிகமாக விளைகிறது. பெரியகுளத்தில் மாம்பழம் அதிகமாக விளைகிறது. அந்தப் பகுதியில் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து ஜூஸ் தயாரிக்கலாம். இதனால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும். தேனி பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கலாம் என்ற தனது கோரிக்கையையும் முன்வைத்தார் ரத்தின பாண்டியன்.

கோட்டூர் மூதாட்டி பழனியம்மாள் சொல்கிறார், “எனக்கு நான்கு பிள்ளைகள். அனைவருக்கும் தலா மூன்று குழி நிலத்தை பிரித்துக் கொடுத்துவிட்டேன். பெரியாறு தண்ணீர் வராமல் பயிரிடாமல் இருக்கிறோம். கிணற்றுப் பாசனம் மூலமாக வெள்ளரி, வாழை, அகத்திக் கீரையைப் போட்டுள்ளோம். எங்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம். முல்லைப் பெரியாறு தண்ணீரை அனுப்பச் சொல்லுங்கள். உர மானியம் அளிக்கச் சொல்லுங்கள், அதுவே போதும்” என்கிறார்.

வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த வைரபெருமாள் சொல்கிறார், “தமிழகத்திலேயே நான்கு போகம் விளையக்கூடிய மாவட்டமாக தேனி இருந்தது. அப்படிப்பட்ட மாவட்டத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் குடிநீருக்கே பற்றாக்குறை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. யார் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள். நான் சுரைக்காய் போட்டுள்ளேன், அதை வளர்த்தால்தான் குடும்பச் செலவுக்குப் பணம் கிடைக்கும்” என்றார்.

வைகை அருகில் உள்ள நரசிங்கபுரம் முருகேசனிடம் பேசினோம், “வைகையில் தண்ணீர் போனால் நிலத்தடி நீர் உயரும். இப்பகுதி விவசாயமும் செழுமையாக இருக்கும். ஆனால் இப்போது முட்புதர்களும், தாமரைச் செடிகளும் மண்டிப்போய் கிடக்கிறது. இதெல்லாம் அரசியல்வாதிகள் பார்வைக்குத் தெரியாது. நாங்கள் காலம் காலமாக இரட்டை இலைக்குத்தான் வாக்களித்துவந்தோம் இந்தத் தேர்தலில் யாருக்குப் போடுவது என்று தெரியாமல் மௌனமாக இருக்கிறோம்” என்று கூறினார்.

தொகுதியிலுள்ள பல தரப்பு மக்களிடம் பேசியதிலிருந்து, அவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருப்பது முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதுதான். இது தவிர வைகை 18ஆம் கால்வாய் திட்டத்தைச் சீர் செய்வதும், வாழை, மா, திராட்சை ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து தொழிற்சாலை அமைத்து ஜூஸ் தயாரித்து ஏற்றுமதி செய்தால், அது விவசாயிகளுக்கும் அரசுக்கும் லாபகரமானதாக இருக்கும் என்ற கோரிக்கையையும் அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.

தேனி தொகுதியில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் அதிகளவில் பணத்தை வாரி இறைத்து ஓய்வு இல்லாமல் தேர்தல் பணியாற்றிவருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ தேனி என்.ஆர்.டி நகரில் இயக்குநர் பாரதிராஜா வீடு அருகில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பதற்றமில்லாமல் பிரச்சார வேலைகளைச் செய்துவருகிறார். அவரது மனைவி வரலட்சுமி, நாயக்கர் வாக்குகளை வளைக்கத் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்துவருகிறாராம்.

கள்ளர், மறவர் வாக்குகளை அதிமுக, அமமுக வேட்பாளர்கள் பலமாகப் பிரித்துவருவதால் சிறுபான்மையினர் வாக்குகளையும் நாயக்கர், பிள்ளை, நாடார், ரெட்டியார், செட்டியார், தலித் சமூகத்தின் வாக்குகளையும் பெற்று கையை உயர்த்திவிடலாம் என்ற தெம்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் இளங்கோவன்.

- எம்.பி.காசி

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon