மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை!

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி முறையை மேலும் எளிமைப்படுத்துவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்துள்ளது.

45 பக்கங்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று (ஏப்ரல் 8) காலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவசாயம், தேசப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பொருளாதாரம் குறித்த பல்வேறு அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் செய்தியுடன் இந்தத் தேர்தல் அறிக்கை தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அதில் குறிப்பிட்டுள்ள செய்தியில், “அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியமானது. ஏனென்றால் 2022ஆம் ஆண்டில் இந்தியா 75ஆம் ஆண்டு சுதந்திர நாளைக் கொண்டாடுகிறது. 2047ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை எட்டிவிடும்.

2047ஆம் ஆண்டுக்குள் எந்தவகையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று எங்களுடன் இணைந்து கற்பனை செய்யுங்கள். அடுத்த ஐந்து ஆண்டில் அதற்கான அடித்தளத்தை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எல்லோரையும் உள்ளடக்கிய, வலிமையான, குடிமக்களுக்குப் பாதுகாப்பான, செழிப்பான, கண்ணியமான நாட்டை அமைப்போம் என உறுதி கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் யாரும் நம்ப முடியாத அளவுக்குச் சிறப்பான ஆட்சியை பாஜக அளித்துள்ளது என்ற அமித் ஷா, “வெளிப்படையான ஆட்சி முறை, பொருளாதார மேம்பாடுகளை நாடு அடைந்துள்ளது. உலக நாடுகளின் அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தத் தேர்தல் வெறும் அரசைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் தேர்தல். 50 கோடி ஏழை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படச் செய்யும் தேர்தல். எனவே இந்தத் தேர்தலில் பாஜக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளில் செய்தவை

பாரதிய ஜனதா அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலையான மேக்ரோ பொருளாதாரத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் எல்லாக் குடிமக்களுக்கும் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்குமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம். நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 91 விழுக்காடு கிராமங்களுக்குச் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 100 விழுக்காடு கிராமங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளன. 36 புதிய விமான நிலையங்கள் இயக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நகரங்களில் மெட்ரோ நெட்வொர்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 60,000 கிலோமீட்டருக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 400 ரயில் நிலையங்கள் நவீனமாக்கப்பட்டுள்ளன. 22 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 14 கோடி விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

துணிச்சலான முடிவுகளால் தேசப் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னுதாரணமான அரசாக மோடி அரசு உள்ளது என்றும் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத தேசத்தை உருவாக்குவதே எங்கள் கொள்கையாகும். தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட நமது பாதுகாப்புப் படைகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும். பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான உபகரணங்கள் கொள்முதல் துரிதப்படுத்தப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விவசாயத் துறைக்கான வாக்குறுதிகள்

பாஜக அரசு 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளது. அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

60 வயதைக் கடந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ரூ.25 லட்சம் கோடி முதலீடு.

ரூ.1 லட்சம் வரையிலான வேளாண் கடன்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான வட்டியில்லாக் கடன்.

எல்லா விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு.

வேளாண் ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையிலான கொள்கை.

உரிய நேரத்தில் தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்தல்.

வேளாண் பொருட்கள் சேமிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்.

மழைக்காடுகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் கூடுதலாக 20 லட்சம் ஹெக்டேர் ரசாயன பூச்சிக்கொல்லி இல்லா விவசாயத்தை ஊக்குவித்தல்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி விகிதங்கள் குறைந்துள்ளன என்றும், 2015-16ஆம் ஆண்டைக் காட்டிலும் அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்களின் ஒட்டுமொத்த வரி வருவாய் 50 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதம் தொடர்ந்து எளிமையாக்கப்படும் எனவும் பாஜக உறுதியளித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் வரி அமைப்பு முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக பாஜக அரசு கூறிவரும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி முறை எளிமையாக்கல் தொடரும் என தற்போது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.

மற்ற முக்கிய அம்சங்கள்

யோகாவை உலகளவில் பிரபலப்படுத்துவோம்.

2024ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புத் துறைக்கான மூலதன முதலீடு 100 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வரம்பை 2024ஆம் ஆண்டுக்குள் ரூ.1,00,000 கோடியாக உயர்த்த முயற்சி.

ஸ்டார்ட் அப் துறையை ஊக்குவிக்க சீடு ஸ்டார்ட் அப் திட்டத்துக்கு ரூ.20,000 கோடி நிதி.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 நகரங்களுக்கு வலுவான மெட்ரோ நெட்வொர்க்.

அனைத்து வீடுகளுக்கும் கழிவறைகள் ஏற்படுத்தி திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்க உறுதி.

2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் பைப் லைன் வசதி ஏற்படுத்த நல் சே ஜல் திட்டம்.

2022ஆம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் இரட்டிப்பாக்கப்படும்.

2022ஆம் ஆண்டுக்குள் ரயில்வே பாதைகள் முழுமையாக மின்மயமாக்கப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

காவல் துறை, நிதித் துறை சீர்திருத்தம்.

அனைவருக்கும் கல்வி.

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு ஒரு ரூபாய்க்கு நாப்கின்கள் வழங்கும் சுவிதா திட்டம் விரிவாக்கப்படும்.

சட்டமன்றம் மற்றும் மக்களவையில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்த உறுதி.

ஆட்சிக்கு வந்தவுடன் துரிதமாக ராமர் கோயில் கட்டப்படும்.

வீடில்லாதவர்களுக்கு மற்றும் குடிசையில் வாழ்பவர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்குள் வீடு.

ஒட்டுமொத்தத்தில் சிறந்த ஆட்சி, பாதுகாப்பான மற்றும் செழிப்பான தேசத்தை உருவாக்குவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon