மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

சங்கடமான விஷயங்களைக் கையாளும் பக்குவம்!

சங்கடமான விஷயங்களைக் கையாளும் பக்குவம்!

கேபிள் சங்கர்

உடலுறவுப் பிரச்சினை சார்ந்த கதைகளைப் பெரும்பாலும் நகைச்சுவையாகத்தான் சொல்ல விழைவார்கள். ஏனென்றால் கொஞ்சம் பிசகினாலும், அமெச்சூர்த்தனமாகவோ அல்லது வக்கிரமாகவோ மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் இம்மாதிரியான கதைக் களனில் அதிகம் உண்டு. அதிலும் ஜப்பானிய, கொரிய கதைகளில் என்னதான் மாடர்னாய் இருந்தாலும் சென்டிமென்ட் விஷயங்கள் நம்மூரைப் போல அதிகம். உடலுறவின் மிக முக்கிய பிரச்சினையை இந்த ஜப்பானிய சீரிஸ் பேசுகிறது. ஆம். பெண்ணின் பிறப்புறுப்புக்குள் ஆணின் உறுப்பு பொருந்தாமல் உள்ளே போகவில்லை. உடலுறவுக்கே ஆதாரமான இது எவ்வளவு முக்கியமான பிரச்சினை?

பெற்றோர்களால், முக்கியமாய் பெற்ற அம்மாவினால் ஒதுக்கப்பட்ட கமிகோ பள்ளி உயர் படிப்புக்கு பூண்டாக் யுனிவர்சிட்டியில் சேர்ந்து, அங்கே தனியே தங்கியிருக்க ஓர் அப்பார்ட்மென்ட்டில் வீடு பிடிக்கிறாள். அங்கே அவளது அடுத்த அறையில் தங்கியிருக்கிறவன் அவளது சீனியர் கெனிசி. இன்ட்ரோவர்ட்டான கமிகோவுக்கு அவனின் அதிரடிப் பழக்கம் பிடித்துப்போக, பார்த்த நாளிலிருந்து ஒன்றாய்த் தங்கிப் படிக்க ஆரம்பிக்கிறார்கள். முதன்முறை அவர்களுக்குள்ளான செக்ஸ் உறவின்போது ‘நடைமுறைச் சிக்கல்’ ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இம்முயற்சி தோல்வியுறுகிறது. இத்தனைக்கும் மீறி அவர்களிடையே உள்ள காதல் உறுதியாகிக்கொண்டே இருக்கிறது.

கெனிசி படித்து முடித்து வேலைக்குப் போகிறான். கமிகோ கடைசி வருடப் படிப்பு முடிந்து வேலை கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். இத்தனை சின்ன வயதில் திருமணம் வேண்டாம் என்று சொல்லியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். மீண்டும் அதே உடலுறவுப் பிரச்சினை. அதற்கான தீர்வைத் தேடி கமிகோ அலைகிறாள். தன்னால் கணவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துகிறாள். உடலுறவுக்கான முயற்சி ஒன்றின்போது அவளுக்கு ரத்தக் கசிவு ஏற்பட, உன்னைத் துன்புறுத்த விரும்பவில்லை என்று விலகுகிறான். அந்த விலகல் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களுள் ஒரு விரிசலை மெளனமாய் ஏற்படுத்துகிறது.

அவனது அறையைச் சுத்தம் செய்யும்போது பாலியல் தொழிலாளிகள் இருக்கும் இடத்துக்குத் தன் கணவன் வாரா வாரம் போவது அவளுக்குத் தெரிகிறது. அவனைப் பின்தொடர்ந்து செல்கிறாள். பணம் கையிருப்பும் குறைந்துகொண்டே இருக்கிறது. அவனுடைய பெரும்பாலான செலவு பாலியல் தொழிலாளிகளுக்காகக் கழிகிறது. அவனுடைய நேரமோ, மனைவி இல்லாத நேரத்தில் போர்ன் வீடியோ பார்ப்பதில் கழிகிறது.

எப்படியாவது இதற்கு ஒரு விடை தேடிவிட வேண்டுமென்று இணையத்தில் கேள்வி பதில் குழுவில் இணைந்து தன் பிரச்சினையை அவள் சொல்கிறாள். “நான் உதவுகிறேன் நான் உதவுகிறேன்” என்று ஆயிரம் உதவிகள். ஓர் உதவியைத் தேர்தெடுத்தபோதுதான் தெரிகிறது அது பெண் பெயரில் இருக்கும் ஆண் என்று. அவன் அவளுக்கு முன்வருகிறான். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு உறவில் முடிகிறது. என்ன ஆச்சரியம், உறவில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. தொடர்ந்து இப்படிப் பல ‘சந்திப்புகள்’, ‘உதவிகள்’. எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருநாள் குற்ற உணர்வு தாங்க முடியாமல் தான் செய்ததைக் கணவனிடம் சொல்லிவிடுகிறாள். அவனுடைய நடவடிக்கைகள் பற்றியும் கேட்கிறாள். விரிசல் பெரிதாகிறது…

மிகவும் நிதானமான கதை சொல்லல். எங்கேயும் எந்த இடத்திலும் பதற்றம் இல்லை. கேரக்டர்களைப் பற்றிச் சொல்லி முடிக்கவே இரண்டொரு எபிசோடுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அது பின்னால் வரும் காட்சிகளுக்கு உதவுகிறது. நிறைய வைட் ஷாட்கள். எபிசோடுகளை நீட்டிப்பதற்காக மட்டுமில்லாமல் கமிகோவின் இளம் பருவத்து வாழ்க்கையைச் சொல்ல விழையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் என ஆற அமரக் கதை சொல்லியிருக்கிறார்கள். இதற்கு மருத்துவத் தீர்வு இல்லையா என்ற கேள்வி ஒரு பக்கம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

கெனிசியாய் நடித்திருக்கும் நகமுராவின் நடிப்பும், கமிகோவாக நட்ஷுமி இஷிபாஷியின் நடிப்பும் தரம். இவர்களின் தரமான நடிப்பு மட்டுமில்லை என்றால் இந்த சீரிஸே நமக்கு ஃபிட்டாகியிருக்காது.

ஏனோ இக்கதை எனக்கு பெருமாள் முருகனின் “மாதொருபாகனை’ நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

இணைய வெளி தரும் சுதந்திரம் படைப்பாளிகளைப் பல விதமான பிரச்சினைகளைப் பற்றியும் படமெடுக்கும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் உதாரணமாக இதைச் சொல்லலாம். பாலுறவுப் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் அதை வெறும் பரபரப்புக்காகவோ, அதிர்ச்சி ஊட்டுவதற்காகவோ கையாளவில்லை. அதுவும் மனித உறவு சார்ந்த ஒரு பிரச்சினை என்னும் ஓர்மை தெரிகிறது.

நம்மூரில் இன்னும் அந்தப் பக்குவம் வரவில்லை. கெட்ட வார்த்தைகள், அப்பட்டமான வசனங்கள் ஆகியவற்றுடன் அமெச்சூர்த்தனமாகத்தான் பலரும் இங்கே பாலுறவு விஷயங்களைக் கையாளுகிறார்கள்.

எதைச் சொல்கிறோம் என்பதை விடவும் எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் திரைப் படைப்பில் முக்கியம். சுதந்திரம் கிடைத்துவிட்டால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் பார்வையும் படைப்புத் திறனும் தேவை என்பதை வெளியிலிருந்து வரும் பல சீரிஸ்கள் நிரூபிக்கின்றன.

இங்கே எப்போது அப்படி நடக்கும்?

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon