மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க முயற்சி: பிரேமலதா

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க முயற்சி: பிரேமலதா

எம்ஜிஆர் கனவுப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று திருச்சியில் பிரச்சாரம் செய்தபோது தெரிவித்தார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் சார்பாக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். திருச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 8) அத்தொகுதிக்குட்பட்ட டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம் மற்றும் பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

இதைத்தொடர்ந்து ஆண்டாள் தெரு சந்திப்பில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பிரேமலதா பேசுகையில், “உலக பொருளாதாரத்தால் நலிவடைந்த தனியார் நிறுவனங்களை மீட்டெடுக்க பாடுபடுவோம். தொழில்முனைவோர்களுக்கு இலவச பயிற்சி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்” என்றார். தேமுதிக வெற்றி பெற்றால் திருச்சிக்கு வேண்டிய அரசு கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளைக் கொண்டுவந்து இளைஞர்கள் மேற்படிப்பு படிக்கவும், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும் நடவடிக்கைகள் எடுப்போம் என்பதையும் வாக்குறுதியாகத் தருகிறோம் என்றும் பிரேமலதா பேசினார்.

எம்ஜிஆரின் கனவுப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராகக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சியும் எடுக்கப்படும் என்று கூறிய பிரேமலதா, “திருச்சியில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால் ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறினார். ஆனால், மக்களைவைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என பிரேமலதா வாக்குறுதி அளிக்கிறார் என்ற குரல்கள் அக்கூட்டத்திலேயே எழுந்தன. அதேபோல ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும்போது வேனுக்குள் இருந்தே பேசியது போல, இவரும் வேனுக்குள் அமர்ந்துகொண்டே பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon