மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

இளைய நிலா: பேசித்தான் ஆக வேண்டும்!

இளைய நிலா: பேசித்தான் ஆக வேண்டும்!

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி - 38

ஆசிஃபா

உரையாடல், பேசுவது பற்றி நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். இன்று பலருக்கும் இருக்கும் ஒரு முக்கியமான சிக்கல் unresolved issues. அதாவது, தீர்க்கப்படாத பிரச்சினைகள். அது பெற்றோருடன் இருக்கலாம், நண்பர்களுடன் இருக்கலாம், இணையுடன் இருக்கலாம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு யாரேனும் ஒருவருடனாவது இந்தப் பிரச்சினை இருக்கிறது. நமக்கு ஏற்படும் பிற உளவியல் சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் இது காரணமாக இருக்கிறது.

சண்டை போடுவது என்பது வேறு, பேசித் தீர்ப்பது என்பது வேறு. இவ்வகை தீர்க்கப்படாத பிரச்சினைகளைப் பொறுமையாகப் பேசித்தான் தீர்க்க வேண்டும். இதற்கு அதீதமான பொறுமையும், பக்குவமும், காலமும் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, பெற்றோருடன் நிலவும் குழந்தைப் பருவச் சிக்கல்கள். இதை எப்படி அணுகுவது என்பதே குழப்பமாக இருக்கும். நாம் பேச வருவதை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். புதிய பிரச்சினைகளை அது உருவாக்கிவிடக் கூடாது. எனவே, நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதில்தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது.

இணையுடன், காதலருடன் நிகழும் பிரச்சினைகள் சற்று வித்தியாசமானவை. நேரடியாக நிகழும் சண்டைகள் இவ்வகைச் சிக்கல்களில் பெரும்பாலும் விழாது. நாம் தெரியாமல், கண்டுகொள்ளாமல் செய்த விஷயம் அல்லது உதிர்த்த சொல் பல காலம் மனதிலேயே இருந்து நம் நிம்மதியைக் கெடுத்துக்கொண்டிருக்கும்.

இப்படி பேசித் தீர்ப்பதால் என்ன கிடைக்கும் என்பதும், ஏன் பேச வேண்டும் என்பதும் முக்கியமான கேள்விகள். முதலில், நீண்ட காலமாக நம் மனதில் கிடந்து நம்மைத் தவிக்கவைத்த விஷயம் இல்லாமல் போகிறது. இதுதான் மிகவும் முக்கியம். இந்தச் சிக்கல் சார்ந்து நம்மிடம் காணப்படும் பிற பிரச்சினைகளும் குறையத் தொடங்குகின்றன. அடுத்தது, அவ்விஷயத்தை / பிரச்சினையை நம்மால் மறக்க / கடக்க முடிவது எளிதாகிறது.

அனைத்தையும்விட முக்கியமானது, நமக்கே தெரியாமல், நம் மீதோ, நம்மைச் சார்ந்தவர்கள் மீதோ நாம் கோபத்தையும் எரிச்சலையும் காட்டிக்கொண்டு இருப்போம். அதுவே நமக்கு ஒரு பெரிய குற்றவுணர்வை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. நாம் அதைப் பகிர்ந்துகொண்டு, அப்பிரச்சினையைப் பற்றி தெளிவு கிடைத்தால், இந்த குற்றவுணர்வில் இருந்து எளிதில் வெளிவரலாம்.

நம் வாழ்க்கை என்பது இதோடு முடியப் போவதில்லை. நமக்கு நடந்த பல்வேறு விஷயங்கள், நாம் சந்தித்த பிரச்சனைகள், சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாமே நம் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கக்கூடியவை, வாழ்வை வடிவமைக்கக்கூடியவை. எனவே, நம் அடுத்தகட்ட வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை, இந்தத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பெருமளவு தீர்மானிக்கின்றன.

பேசுவது, குறிப்பாக நம்மை அதிகமாகப் பாதிக்கக் கூடிய விஷயங்களைப் பற்றி பேசுவது, அவ்வளவு எளிதல்ல. ஆனால், பேச வேண்டியது அவசியம்.

- ஆசிஃபா

அழுவது தவறில்லை

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon