மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

சாமானிய மக்களுக்கு ‘மதம் பிடித்தது’ எப்படி? - அ.குமரேசன்

சாமானிய மக்களுக்கு ‘மதம் பிடித்தது’ எப்படி? - அ.குமரேசன்

தேர்தல் நேரம் – மதவாதக் களம் – மக்கள் மனம்: 3

புகழ்பெற்ற அந்த இந்துக் கோயில் அருகே உள்ள ஒரு கடைத்தெரு. அதன் முனையில் ஒரு சந்தனக் கடை. சில வகை வாசனைத் திரவியங்களும் வாசனைத் தூள் உறைகளும் அங்கே கிடைக்கும் என்றாலும் மையமான விற்பனை சந்தனம்தான். சூட்டுக் கொப்புளங்களைத் தணிக்க உடலில் பூசிக்கொள்வதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் வரவேற்பில் வைப்பதற்கும், கோயிலில் அர்ச்சனை செய்யப்படுவதற்கும் என சந்தனம் வாங்கிச் செல்வார்கள். கடையை நடத்திக்கொண்டிருந்தது ஓர் இஸ்லாமியக் குடும்பம். அவர்கள் தங்கள் கைகளால் பிசைந்து உருட்டிக்கொடுக்கும் சந்தனத்தால் வழிபட்ட கோயிலோ, வரவேற்ற விழாவோ, பூசிக்கொண்ட உடலோ தீட்டுப்பட்டதாக யாரும் சொன்னதில்லை.

அந்தச் சந்தனக் கடையின் இன்னோர் ஈர்ப்பு – தினமும் மாலையில் அந்தக் குடும்பத்தின் பெரியவர் ஒருவர் நரைத்த தாடியும் வெளுத்த குல்லாவும் துவைத்துத் தேய்த்த நீண்ட அங்கியுமாய் வந்து அமர்ந்துவிடுவார். கடை முன்பாக வரிசையாகப் பலர் – குறிப்பாகப் பெண்கள் – திடீரென நோய்வாய்ப்பட்ட தங்களின் குழந்தைகளோடு வந்து நிற்பார்கள். குழந்தைகளுக்குப் பெரியவர் மந்திரித்துவிடுவார். சில நேரங்களில் அந்த அம்மாமார்களும் அப்பாமார்களுமேகூடத் தலைகுனிந்து, கைகூப்பி அந்த மந்திரிப்பைப் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் மருத்துவரிடமும் செல்வார்கள் என்றாலும், பெரியவர் இப்படி மந்திரித்தால் சிகிச்சை விரைவாகவும் முழுமையாகவும் பலனளிக்கும் என்று நம்புவார்கள். பல ஊர்களில் பல கோயில்களின் அருகில் இப்படிப்பட்ட கடைகள் இருக்கின்றன.

இங்கே சந்தனமாக மணப்பது “எம்மதமும் சம்மதமே” எனும் மக்களின் நல்லிணக்க மனநிலைதான். கிறிஸ்துவரான பாடகர் யேசுதாஸ் பாடிய ஐயப்பன் பாடலை அந்த ஐயப்பன் உண்மையிலேயே இருப்பாரானால், குத்தவைத்து அமர்ந்திருக்கும் நிலையிலிருந்து மாறி, மரத்தண்டில் வசதியாகக் சாய்ந்து உட்கார்ந்து ரசித்துக் கேட்பார் என்று உறுதிபடச் சொல்லலாம். அம்மன் உண்மையாக இருப்பாரானால் கிறிஸ்துவரான எல்.ஆர். ஈஸ்வரி பாடிய “செல்லாத்தா எங்க மாரியாத்தா” பாடலுக்கு ஒரு சாமியாட்டம் போடாமல் இருக்க மாட்டார் எனலாம். கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துப் பாடிய “அல்லா அல்லா, நீ இல்லாத இடமே இல்லை, நீதானே உலகின் எல்லை” பாடலில், அந்த அல்லா உண்மையாகவே இருப்பாரானால் மனம் லயித்துப் போவார். வேளாங்கண்ணி மாதா உண்மையிலேயே இருப்பாரானால் தனது கடலோர ஆலயத்தில் பி.சுசிலா பாடிய “எனையாளும் மேரி மாதா” உள்ளிட்ட பாடல்கள் ஒலிபரப்பக் கேட்டு, கரை தொடும் அலைகளைப் போலவே அமைதிகொள்வார்.

இப்படியான மனநிலை எல்லா மாநிலங்களிலும் எல்லா மொழி பேசும் மக்களிடமும் பரவியிருந்தது. நூற்றுக்கு நூறு இல்லாவிட்டாலும், ஆகப் பெருமளவுக்குப் பரவியிருந்தது. ஆகவேதான், வேத சமயம் போதித்த வேற்றுமைகளை எதிர்த்துச் சமத்துவம் பேசிய இயக்கமாகத்தான் புத்தம் தோன்றியது என்றபோதிலும், அந்த வரலாறு தெரியாததாலோ, அதன் கோட்பாடுகள் பிடித்துப்போனதாலோ, பல இந்துக் குடும்பங்களின் வரவேற்பறைகளில் புத்தரின் மோனச் சிற்பம் குடியேற முடிந்தது. இன்று சிரிக்கும் புத்தர் சிலைகளும் மேசைகளில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கின்றன.

இந்த நல்லிணக்க உணர்வு பற்றிய பேச்சு வருகிற நேரங்களில், “இதையெல்லாம் நீங்கள் இந்துக் குடும்பங்களில்தான் பார்க்க முடியும். முஸ்லிம், கிறிஸ்துவ, புத்தக் குடும்பங்களின் வீடுகளில் இந்துக் கடவுள் படங்களையோ சிற்பங்களையோ காட்ட முடியுமா” என்று இந்துமயமாக்கல்வாதிகள் எதிர்வாதம் செய்வார்கள். அந்த மதத்தின் பாகுபாடுகளை எதிர்த்து வேறு மதம் சென்றவர்கள் தங்களுடைய முந்தைய மதத்தின் வழிபாட்டு அடையாளங்களை எப்படி வைத்திருப்பார்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். (மதம் மாறியவர்களில் பலர் தங்களுடைய முந்தைய மதத்தின் சாதி, வரதட்சணை போன்றவற்றை விடாமல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விவாதம்).

சென்னையில் ‘தி இந்து’ பத்திரிகையும் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரும் ‘துக்ளக்’ ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி, “இங்கே பெரும்பான்மை மக்களாக இந்துக்கள்தான் இருக்கிறார்கள் என்பதால்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது” என்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “அப்படியானால் நீங்கள் ஏன் அந்தப் பெருமையைக் குலைக்க நினைக்கிறீர்கள்” என்று கேட்டார். பதில் வராத கேள்வியாகவே அது கடந்துபோனது.

மக்களின் இந்த மத நல்லிணக்க மனநிலை கதை, கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளிலும் நாடகம், திரைப்படம் போன்ற கலை ஆக்கங்களிலும் பிரதிபலித்தது. திரைப்படத்தின் மையக் கதைக்குத் தேவையில்லாமலே இந்து, முஸ்லிம், கிறிஸ்துவக் கதாபாத்திரங்கள் வந்துபோவார்கள். காட்டிக்கொள்வதற்காக அல்லாமல் இயல்பாகவே தங்களைத் தங்களது மத அடையாளத்துக்கு வெளியே நிறுத்திக்கொண்ட மக்களின் மனநிலை, முந்தைய கலவரக் காயங்களை ஆற்றியது. “நதிகள் பிறக்குமிடம் பலவாகும். எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்” என்பது போன்ற தத்துவச் சிந்தனைகள் அந்தக் காயங்களின் வடுக்களையும் மாற்றியது. இதில் குடிமக்கள் பெரும்பாலானோர் ஒரு பெருமித உணர்வையும் வளர்த்துக்கொண்டார்கள். மற்றவர்கள்?

மற்றவர்கள் அந்தப் பெருமித உணர்வை ஏற்காதவர்களாக இருந்தார்கள். இது வரலாற்று உண்மைகளை மறைத்துக் கட்டப்பட்ட போலிப் பெருமிதம் என்பதாகத் திட்டமிட்ட முறையில் புகுத்தப்பட்ட வேற்றுமைப் போதனைகளை உள்வாங்கிகொண்டவர்களாக இருந்தார்கள். ஒரு கையில் குல்லாவை வைத்துக்கொண்டு, இன்னொரு கையில் கொலைவாளைப் பிடித்துக்கொண்டு முஸ்லிம் மன்னர்கள் மிரட்டியதுதான் அன்று பலரும் குல்லாவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ற புனைவுகளை மனதில் பதித்துக்கொண்டவர்களாக இருந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ஊட்டப்பட்ட அரசாங்க வேலை அப்பத்தோடும் சில கவர்ச்சி ரத்தத்தோடும்தான் வீடுகளுக்குள் பைபிள் நுழைந்தது என்பதாக ஏற்றப்பட்ட மூளைக் கறைகளைச் சலவை செய்யாமல் விட்டவர்களாக இருந்தார்கள்.

மதப்பற்று, சாதிப் பெருமை, பாரம்பரிய கௌரவம் ஆகிய மூன்றும் இவ்வகையான மனநிலையை உருவாக்குவதில் மையமான பங்கு வகித்தன. அன்றாட வாழ்க்கையின் தேவைகள் இந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வைத்தன என்றபோதிலும், “நாம உழைச்சாதாம்பா சோறு, சாமியா வந்து கொடுக்கப்போகுது” என்று பேசிக்கொள்கிற அளவுக்குப் பகுத்தறிவால் இயக்கப்பட்டபோதிலும் இந்த மனநிலையைக் கைவிடாமல் வைத்திருந்தார்கள். தங்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கு, சுக துக்கங்களுக்கு, நல்லது கெட்டதுகளுக்கு தாங்கள் பிறக்கிறபோதே அவற்றைத் தீர்மானிக்கிற விதிதான் காரணம் என்ற நம்பிக்கையிலிருந்து விடுபட முடியாதவர்கள்தான் பெரும்பகுதி மக்கள். அந்த விதியைக் கட்டுப்படுத்தி மாற்றி எழுதுகிற ஆற்றல் சர்வ வல்லமை வாய்ந்த கடவுள்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறவர்கள். தங்கள் வாழ்க்கை நிலைமைகள் மாற வேண்டுமானால், அல்லது மாறாமல் தொடர வேண்டுமானால் கடவுள்களின் மனம் குளிர வேண்டும், அதற்குக் கடவுள்களை முறைப்படி வழிபட வேண்டும் என்று நம்புகிறவர்கள். அவ்வாறு “முறைப்படி வழிபடுவது” என்பதில் ஆகம வழி புரோகிதங்களைப் பின்பற்றுவது முதல், அவரவர் சாதி சார்ந்த சடங்குகளைக் கடைப்பிடிப்பது வரையில் கலந்திருக்கின்றன.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்த மனநிலை இரண்டு வகையாகப் பயன்படுத்தப்பட்டது. மக்களை ஒருங்கிணைப்பதில் “ரகுபதி ராகவ ராஜாராம்” என்று ராம பக்தியைக் கையாண்டார் காந்தி. அதே வேளையில் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்று அனைத்து நம்பிக்கையாளர்களையும் அவர் அரவணைத்தார். சுதந்திர இந்தியா மதச்சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கைத்தடியை ஊன்றி நின்றார். அவரோடு இணைந்து போராடியவர்களும் அதை உறுதியாகப் பற்றினார்கள்.

இன்னொரு பக்கம், வீடுகளுக்குள் நடந்துகொண்டிருந்த பிள்ளையார் வழிபாட்டை தெருவுக்கும் சாலைக்கும் விநாயகர் பூஜையாகக் கொண்டுவந்தார் திலகர். சுதந்திர இந்தியா மதச்சார்புள்ளதாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கம் ஒரு சிறு பொறியாக அதில் இருந்தது. அவரைப் பின்பற்றியவர்கள் அதில் எண்ணெயை ஊற்றிக்கொண்டே இருந்தார்கள். அப்பட்டமாகவே அந்த நோக்கத்தை அறிவித்த சாவர்க்கர், கோல்வல்கர் போன்றோரும் அவர்களது தலைமையை ஏற்றோரும் மக்களைத் திரட்டுகிற முயற்சிகளைச் செய்துகொண்டுதான் இருந்தார்கள். இந்துக்களின் தேசத்தை ஆக்கிரமித்து மாற்றியவர்கள் எனப் பிற மதத்தினருக்கு எதிரான, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ஆத்திரப் பயிரை வளர்த்தார்கள்.

மதவாத வெடிமருந்து ஏற்றப்பட்டுக் கெட்டிக்கப்பட்ட மதவாத அரசியல் வெடித்துப் பரவுவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. தங்களைத் தங்களது சாதியோடும் மதத்தோடும் அடையாளப்படுத்திப் பெருமைப்படுவதற்குக் கூச்சப்படாதவர்களாகப் புதிய தலைமுறைகள் உருவெடுத்தது, அந்த நேரத்தை நோக்கி நகர்வதை விரைவுபடுத்திக்கொண்டிருந்தது.

அப்படி விரைவுபடுத்திய சூழல்கள் என்னென்ன?

(தொடர்ந்து பயணிப்போம்...)

திங்கள், 8 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon