மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 7 ஏப் 2019

உடலின் வேட்கையைத் தூண்டும் பிட்னெஸ் பயிற்சிகள்!

உடலின் வேட்கையைத் தூண்டும் பிட்னெஸ் பயிற்சிகள்!

ஆலி வேலன்ஸ்கி

செக்ஸ் என்பதே ஒருவகை உடற்பயிற்சிதான்; ஆனால், சிறந்த முறையில் அந்த விஷயம் நடக்க வேண்டுமானால், அதற்குத் தூண்டுதலாக உடற்பயிற்சி அமையும். உடற்பயிற்சியானது நமக்கு சக்தியூட்டுகிறது, அழுத்தங்களை அகற்றுகிறது. உடலை இலகுவாக்கி, நமது நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. உடற்பயிற்சியானது நமது செக்ஸ் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தனைக்கும் செக்ஸ் நிகழும்போது ஆண் 90 முதல் 150 கலோரி வரையும், பெண் 50 முதல் 100 கலோரி வரையும் செலவிடுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதையும் மீறி உடலை வடிவமைப்பதிலும் வலுவாக்குவதிலும் உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

“உடற்பயிற்சியினால், பிறப்புறுப்புகள் உட்பட நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தம் பாய்கிறது. இதன் மூலமாக ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், உயவுக்குத் தயாராகும் விதமாகவும் உடல் மாறுகிறது” என்கிறார் மனநல நிபுணரும் செக்ஸ் பிரச்சினைகள் குறித்துத் தீர்வுகளை முன்வைப்பவருமான ஆண்டோனியா ஹால்.

ஒருவரது மனதில் செக்ஸ் எண்ணங்கள் உயர்ந்திருப்பது தொடர வேண்டுமானால், முறையான ரத்தவோட்டம் இருக்க வேண்டும். உடற்பயிற்சிக்குப் பிறகு உறவுக்குத் தேவையான மனநிலை உருவாவதாகத் தெரிவிக்கிறார் ஆண்டோனியா. அட்ரினலின், கார்ட்டிசோல் உட்பட உடலில் அழுத்தங்களை உருவாக்கும் ஹார்மோன்கள் குறைவதாகக் குறிப்பிடுகிறார்.

கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் நிலை அதிகமாகிறது. அதற்காக ஓவராக உடலை முறுக்கிப் பிழிவதும் வேலைக்கு ஆகாது. “வழக்கமான உடற்பயிற்சிகளை, நமக்கு வசதியானவற்றைச் செய்தாலே போதும். இதன் மூலமாக நீங்கள் களைய விரும்பும் அத்தனை அம்சங்களும் குறைந்துவிடும். மனதையும் உடலையும் அழுத்தங்களில் இருந்து விடுவித்து, உறவில் உச்சகட்டத்தை எளிதாகக் கொள்ள வழி வகுக்கும்” என்கிறார் ஆண்டோனியோ ஹால்.

உணர்வின் எழுச்சி

“செக்ஸ் கொள்வதற்கு முன்னதாக உடற்பயிற்சியை மேற்கொள்வதால், குறைவான செக்ஸ் உணர்வு இருப்பவர்கள்கூடத் தூண்டலைப் பெறுவர். பெண்களில் சிலர் இந்தக் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள்” என்கிறார் லாரல் ஹவுஸ் எனும் செக்ஸாலஜி நிபுணர்.

அதே நேரத்தில், தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டால் அந்த உணர்வு குறைந்துபோகும் என்றும் குறிப்பிடுகிறார். உடலைப் போன்றே மனதுக்குத் தேவையான பயிற்சிகளும் அவசியம். அவையும் நமது செக்ஸ் வாழ்க்கைக்கு நிறைய உதவிகளைச் செய்கின்றன.

பாயும் வேதிப்பொருள்

எண்டார்பினை இயற்கையாக உருவாக்க எளிய வழி உடற்பயிற்சி. “நமது மூளையில் இருந்து வெளிப்படும் நேர்மறையான விளைவுகளைத் தரும் வேதிப்போருட்களில் எண்டார்பினும் உண்டு. நாம் நல்ல மனநிலையை உணரும்போது, செக்ஸ் கொள்ளும் விருப்பமும் அதிகமாக இருக்கும்” என்கிறார் அலைஸ் கெல்லி ஜோன்ஸ்.

உடற்பயிற்சி நம் உடலின் வேகத்தை அதிகப்படுத்தி, உடலின் சில பாகங்களை விரிவாக்குகிறது. “உடற்பயிற்சியினால் நமது செயல்பாடு, தாங்கும் திறன், தன்னம்பிக்கை எல்லாமே கட்டமைக்கப்படுகின்றன. அதையும் தாண்டி உடற்பயிற்சியினால் நமது அந்தரங்க உறுப்புப் பகுதியில் ரத்தவோட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணர்வு நிலை உச்சம் பெறுகிறது” என்கிறார் டைஸா மார்கன் எனும் நீலப்பட நடிகை.

அழுத்தங்கள் நீங்கும்

நாம் சோர்வுற்று இருக்கும்போது, நம்மால் ஓய்வாகவோ, மகிழ்ச்சியாகவோ உணர முடியாது. “உடற்பயிற்சியானது மனஅழுத்தங்களை அகற்றும் அற்புதமான வடிகால். இதன் மூலமாக, செக்ஸ் செயல்பாடுகளில் பெரிய தாக்கம் உண்டாகும்” என்கிறார் டைஸா.

“உடலில் கொழுப்புகள் குறைந்து, உடலின் வடிவமைப்பு மேம்பட உடற்பயிற்சிகள் உதவும். இதுவே செக்ஸ் உந்துதலுக்கும் உதவும். யோகா போன்ற உடலை இலகுவாக்கும் பயிற்சிகளால் புதிதுபுதிதாக செக்ஸ் பொசிஷன்களை வடிவமைத்துக் கொள்ள முடியும். இது செக்ஸ் வாழ்க்கையை மேலும் உற்சாகமூட்டுவதாக அமையும்” என்கிறார் டாக்டர் கெல்லி ஜோன்ஸ்.

படுக்கையறையில் திருப்தி

“கால்கள், தொடைகள் மற்றும் இடுப்புப் பகுதியை வலுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளால் நமது தடைநார்கள் வலுவாகும். செக்ஸ் தூண்டுதல் அதிகமாகும்” என்கிறார் ஹாலிவுட் நட்சத்திரங்களின் பிட்னஸ் நிபுணரான இலாரியா கவாஞியா. பெண்கள் தங்களது தொடையிடுக்கிலுள்ள தசைகளை வலுப்படுத்தினால் பெண்ணுறுப்பு பலமானதாக மாறுமென்றும், இதன் மூலமாக உச்சகட்டம் வலுவானதாக அமைய உதவும் என்றும் தெரிவிக்கிறார். “ஆண்களைப் பொறுத்தவரை, இந்தப் பயிற்சிகள் விந்து வெளிப்படுத்தலைக் கட்டுப்படுத்தி தாமதப்படுத்தும்” என்று கூறுகிறார்.

இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதன் மூலமாக உள் தொடைப்பகுதிகள் வலுவாக மாறும் என்றும், இது அனைத்துமே உங்களது இணையுடன் இருக்கும் கணங்களைச் சிறப்பானதாக்கும் என்றும் கூறுகிறார் அமண்டா ப்ரீமேன்.

நன்றி: பாப் சுகர்

தமிழில்: உதய்

ஞாயிறு, 7 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon