மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

இளைய நிலா: அழுவது தவறில்லை

இளைய நிலா: அழுவது தவறில்லை

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 37

ஆசிஃபா

“எதுக்கெடுத்தாலும் அழுகை!” என்ற அங்கலாய்ப்பைப் பெரும்பான்மையானவர்கள் கேட்டிருப்பார்கள். அனேகமாக வீட்டில்தான் இதைச் சொல்வார்கள். அழுகை என்பதைச் சுற்றிப் பல கற்பிதங்கள் உள்ளன. Stigma என்றுகூடச் சொல்லலாம்.

ஆண்கள் அழக் கூடாது, அழுதால் பலவீனமாகிவிடுவோம், அழுகை எதற்கும் உதவாது, மிகவும் முடியாமல் போகும் தருணத்தில்தான் அழ வேண்டும், அழுதால் தைரியம் இல்லை என்று பொருள் என்றெல்லாம் சொல்லுவார்கள்.

குறிப்பாகப் போன தலைமுறையிலும் அதற்கு முந்தைய தலைமுறையிலும் இத்தகைய நம்பிக்கைகள் பரவலாக இருந்தன. இன்று மீண்டும் அழுகையைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது.

என் வயதை ஒத்த என் நண்பர்கள், முகநூல் நண்பர்கள் போன்றவர்களிடம் உளவியல் தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்துவருகின்றன. ஒரு வெளியை உருவாக்கி, நமக்கான புரிதல்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். இதில் குறிப்பாக ஒன்றை கவனிக்க முடிகிறது. பலரும் மிகவும் தைரியமானவர்கள், ஆனால் மனதளவில் சில பல பாதிப்புகளை அடைந்துள்ளோம். ஏதோ ஒரு பாதிப்பு அனைவருக்குமே இருக்கிறது. அதை அழுது தீர்க்க முற்படுகிறோம்.

அழுகை என்பது பலவீனம் என்ற நிலையிலிருந்து நம் மனம் சற்று விலகத் தொடங்கியிருக்கிறது. உண்மையில், அழுகை மனத் தெளிவைக் கொடுக்கிறது. இது நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தது. எதாவது பிரச்சினை, சிக்கலில் மாட்டிக்கொண்டு, யோசிக்கவே முடியாமல் இருக்கும்போது, தனியாகச் சென்று சிறிது நேரம் அழுதுவிட்டு வந்தால், தெளிவாக யோசிக்க முடியும். அதன் பின் ஒரு முடிவுக்கு வருவேன்.

இதில் ‘தனியாக’ என்ற சொல் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், யாராவது நாம் அழுவதைப் பார்த்தால், பயந்துவிட்டோம் என்றோ, நொறுங்கிப்போய்விட்டோம் என்றோ தவறாக எண்ணிப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடுவார்கள். எனவே, தனியாகப் போய் அழ வேண்டும் என்பது முதல் பாய்ண்ட்.

அடுத்தது, அழுவது ஒன்றும் தவறு இல்லை. ஒரு குறிப்பிட்ட சூழலில் அழுகை வருகிறது என்றால், அழுதுவிடுவது சிறப்பான செயல். அழுவது ஆணா, பெண்ணா, அழுவதைப் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை. அழுகை என்பது உணர்ச்சிகளுக்குச் சிறப்பான ஒரு வடிகால். மனதுக்குள் குமுறும் உணர்ச்சிகளை வெளியேற்றிவிட்ட பிறகு நிதானத்திற்கு வருகிறோம். எனவே நிதானமாகச் சிந்திக்க முடிகிறது.

அழக் கூடாது என்று இருப்பவர்களுக்கு இன்னொரு பிரச்சினை இருக்கிறது. அழக் கூடாது என்று நினைத்தும் அழுகை வருகிறதே என்று தன் மேல் தானே கோபப்பட்டு மேலும் அழுகை வரும். அதை மீண்டும் நினைத்து ஆற்றாமையாகிப்போகும். இருக்கும் பிரச்சினையோடு இதுவும் சேர்ந்துகொள்ளும். அனைத்தும் சேர்ந்து, நாம் அடுத்து என்ன செய்வது என்பதையே யோசிக்க முடியாமல் போய்விடும்.

என்ன செய்யலாம்? ரொம்பவே எளிது. அழுகையைச் சுற்றியுள்ள தேவையற்ற கருத்துக்களை மறந்துவிடுவோம். அழுகை என்பதும் ஒரு இயல்பான வெளிப்பாடுதான். அதைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. (ஆனால், சில வேளைகளில் அழுகையைக் கட்டுப்படுத்தித்தான் ஆக வேண்டும். குறிப்பாக மருத்துவமனை போன்ற சூழலில், நம் அழுகையைப் பார்த்து நோயாளிகளுக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே அதுபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர் முன்னால் அழாமல் இருப்பது நல்லது.)

அழுவதில் தவறில்லை; அழுதால் நம் தைரியம் குறையப்போவதில்லை; அழுகை நம்மை பலவீனமாக்காது! மாறாக, மனதை லேசாக்கும். தெளிவைத் தரும்.

தெளிந்த மனதில்தான் தீர்வு பிறக்கும்.

பலனற்ற கோபம், பாழாகும் உடல்!

சனி, 6 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon