மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஏப் 2019

ஒரு சமயத்தில் ஒரு வேலை!

ஒரு சமயத்தில் ஒரு வேலை!

ஒரு கப் காபி!

“சாப்பிடறப்போ புக் படிக்காத” என்று அதட்டுவது 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல குடும்பங்களில் வழக்கத்திலிருந்தது. இப்போது புத்தகம் படிக்கும் வழக்கம் அருகி, அந்த இடத்தை செல்போன் நிரப்பியுள்ளது. பணியாற்றும் இடங்களில் செல்போனில் பேசிக்கொண்டே அல்லது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பவர்கள் பலரைக் கண்டிருக்கிறேன்.

ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்வதென்பது திறமைதான். ஆனால், அந்த வேலைகளில் எத்தனை வேலைகள் சரியாக நடக்கின்றன என்று யோசித்துப் பார்க்க வேண்டும். மொபைலில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், பக்கத்தில் இருப்பவருடன் எதையோ விவாதித்தபடி வேலை பார்த்தல் என்று பல விஷயங்களையும் செய்யலாம். ஆனால், ஒன்றால் இன்னொன்று பாதிக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் ஏதாவது இருக்கிறதா?

அஷ்டாவதானிகள், தசாவதானிகள் எல்லாம் ஒரே நேரத்தில் பலவிதமான செயல்களைச் செய்யும் திறமையைப் பயிற்சியால் வளர்த்துக்கொண்டவர்கள். சிலருக்கு இது இயல்பாகவும் வரக்கூடும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமா?

பேருந்து, ரயில் பயணத்தின்போது புத்தகம் படிப்பதை, பாடல் கேட்பதை விரும்புவோம். இந்தப் பயணத்தில் நாம் ‘செய்ய’ வேண்டியது எதுவும் இல்லை. அப்போது படிப்பது என்பது வேறு. அதையே எல்லா விஷயங்களிலும் பின்பற்ற முயற்சி செய்வது சரிதானா?

நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாக நம்மில் பலரைத் தொற்றிக்கொண்ட வழக்கங்களில் ஒன்று, கழிவறைக்குச் செல்லும்போது பத்திரிகைகளையோ, புத்தகங்களையோ எடுத்துச் செல்வது. செல்போனும் இந்தப் பட்டியலில் உண்டு. உடலில் நிகழும் வளர்சிதை மாற்றம்கூட, மிகுந்த கவனத்துடன் நிகழ வேண்டியதுதான். நமது உடல் அதற்கான முழு முயற்சியில் ஈடுபடும்போது, மனது அதனுடன் ஒன்றிணைவது அவசியம்.

மேலோட்டமாகச் செய்யும் வேலைகளில் இரண்டு அல்லது மூன்று வேலைகளை ஒன்றாகச் செய்வதால் என்ன பிரச்சினை என்று கேட்கலாம். பிரச்சினை இருக்கிறதா என்பதல்ல கேள்வி. நாம் செய்யும் செயல்களுடன் நமக்கு என்ன உறவு இருக்கிறது என்பதுதான் கேள்வி.

உணவு, பேச்சு, அலுவலக வேலை, குடும்பத்தினருடன் உரையாடுதல், வாகனம் ஓட்டுதல், மொபைலில் பேசுதல், செய்திகளைப் பார்த்தல், இசை கேட்டல், பாடுதல் எனப் பல்வேறு செயல்களுடன் வேறொரு செயலும் தொற்றிக்கொள்வதால் ஏதேனும் ஒரு செயல் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது என்பதை அடியோடு மறுக்கவே முடியாது. தவிர, இதனால் பிரச்சினை ஏற்படுகிறதா என்று யோசிப்பதைவிட, ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்வதால் கட்டாயமாக நன்மை ஏற்படுவதை யோசித்துப் பார்க்கலாம்.

நமது கவனம் அதிகமாகத் தேவைப்படும் தருணங்களில் நாம் ஒரே ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவிக்கிறோம். அப்போது அந்தச் செயலின் தரம் மேம்படுகிறது. பேச்சு, அலுவலக வேலை, பாட்டு, சண்டை, காதல் என்று பல செயல்களுக்கும் இதைப் பொருத்திப் பார்க்கலாம்.

கவனம் கூடினால் தரம் கூடும் என்றால், ஏன் எல்லாவற்றிலும் அந்தக் கவனத்தைக் குவிக்கக் கூடாது? அதுதானே அந்தச் செயலுக்கு நாம் தரக்கூடிய ஆகப் பெரிய மரியாதை?

‘ஒரு நேரத்துல ஒரு வேலைய பார்த்தா போதும்’ என்பது நமது திறமையின் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல. வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே என்னும் அக்கறை.

ஒரு சமயத்தில் ஒரு வேலை என்பது தவம் போன்றது. தியானம் போன்றது. இப்படிச் செயலாற்றத் தொடங்கினால் நம்முடைய ஒவ்வொரு கணமும் தரத்தால் மிளிரும் அல்லவா!

- பா.உதய்

வெள்ளி, 5 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon