மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

தென்மாவட்டங்களை அதிமுக தவிர்த்தது ஏன்? ஓபிஎஸ்

தென்மாவட்டங்களை அதிமுக தவிர்த்தது ஏன்?  ஓபிஎஸ்

தென்மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு, மற்ற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது. இதன் காரணம் என்ன என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுகவின் கோட்டையாக மேற்கு மண்டலமும், தென்மண்டலமும் கருதப்பட்டு வந்தன. வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் போட்டியிடும் அதிமுக, தென்மண்டலத்தில் சற்று அடக்கியே வாசிக்கிறது.

தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய மூன்றில் மட்டுமே அதிமுக நிற்கிறது. மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. தென்காசியில் புதிய தமிழகமும், விருதுநகர் தொகுதியில் தேமுதிகவும், திண்டுக்கல்லில் பாமகவும், மீதமுள்ள சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடுகின்றன.

தினகரனின் அமமுக தென்மாவட்டத்தில் வலுவாக இருப்பதால்தான் அதிமுக தென்மாவட்டங்களில் நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரை வார்த்துவிட்டது என்று தேர்தல் களத்தில் பேச்சு இருக்கிறது.

இந்த நிலையில் இதுபற்றி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவருமான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

“அதிமுக என்பது மாநிலத்தின் இரு மண்டலங்களில் மட்டுமே வலுவாக இருக்கிறது என்றும், மாநிலம் முழுவதும் வலுவாக இல்லை என்பதும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிவிடும் ப்ராபகண்டா. நாங்கள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான வலிமையோடுதான் இருக்கிறோம். மேலும், நாங்கள் நல்ல ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் சமமாக பாவிக்கிறோம். அவர்களுக்கும் சீட் ஒதுக்கிட வேண்டியிருக்கிறதே” என்று பதில் சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும் அதிமுக மீதான அமமுகவின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு,

“அதிமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் தினகரனோடு செல்லவில்லை. சில அதிருப்தியாளர்களே அவரோடு இருக்கிறார்கள். தினகரனுக்கு மக்களிடம் 1% கூட ஆதரவு கிடையாது. அவர் தனது சுயநலக் காரணங்களுக்காக அந்தக் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். 2017 பிப்ரவரி மாதம் அமைந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியோடு ஒரு மாதத்துக்கு மேல் அவரால் சேர்ந்து செயல்பட முடியவில்லை. இதற்கான காரணத்தை அவர் இன்னமும் விளக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் ஓ.பன்னீர்.

ஞாயிறு, 31 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon