மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

வெற்றியும் தோல்வியும் பார்வையாளர்களுக்கு அல்ல!

இது தேர்தல் காலம் மட்டும் அல்ல; தேர்வு காலமும்கூட.

போட்டிகளும் அதன் மூலமாகக் கிடைக்கும் வெற்றி தோல்விகளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சலனத்தை ஏற்படுத்துகின்றன.

வெற்றியினால் பெரும் ஊக்கம் கிடைத்தாலும் தோல்வி சோர்வடையச் செய்கிறது. ஆனால், தோல்விகளே நம்மை முழுமையாக உணர, நாம் கவனிக்க மறந்த பக்கங்களைக் காண சொல்லிக்கொடுக்கின்றன.

அந்நியன் படத்தில் ஒரு பாடலில், ‘நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே என் தேர்வை எல்லாம் ஒத்திவைக்கிறேன்’ என்ற ஒரு வரியை வைரமுத்து எழுதியிருப்பார். தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தாலே போட்டியில் பங்கெடுக்காத பலர் உண்டு.

தோல்விகள் கண்டு துவண்டுவிடாமல் பலமுறை போராடி வெற்றி பெற்றவர்கள் வரலாறு முழுக்க நிறைந்துள்ளனர். இவர்களது கதைகளைக் கேட்கும்போது உருவாகும் வேகம் தோல்வியின் விளைவுகளை நினைத்துப் பார்க்கும்போது காணாமல் போய்விடுகிறது. அதற்காகவே எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று அமைதியாகிவிடுகிறோம். உண்மையில் வரலாறு வெற்றி பெற்றவர்களை மட்டுமல்ல, தோல்வியடைந்தவர்களையும் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் களத்தில் இறங்காதவர்களைக் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை.

கோடிக்கணக்கான விந்தணுக்களில் முதலாவதாகத் தாயின் கர்ப்பப்பையை அடையும் அணுவே குழந்தையாகப் பிறக்கிறது. அப்படியானால் நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே வெற்றியை ருசித்தவர்கள். அதனால் தோல்வியைப் பற்றிய பயம் அர்த்தமற்றது. அவ்வாறு வருகின்ற தோல்வியும் தோல்வியல்ல, வெற்றிக்கான பயணத்தின் மைல் கற்கள்.

கையில் இருக்கும் பந்தை விட்டெறிவோம். வானத்தை அடைகிறதா, மொட்டை மாடியில் விழுகிறதா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon