மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

தொகுதிக்கு 40 கோடி: திருமாவளவன் எச்சரிக்கை!

தொகுதிக்கு 40 கோடி: திருமாவளவன் எச்சரிக்கை!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரான விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷ் ஆகியோரின் அறிமுகக் கூட்டம் நேற்று (மார்ச் 23) சிதம்பரம் நகரிலுள்ள கார்த்திகேயன் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமாவளவன் வருவதற்கு முன்பே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் வந்துவிட்டனர்.

முதலில் மைக் பிடித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், நமது கூட்டணியைச் சேர்ந்தவர்களாகவும் (சிபிஎம் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் அழகிரி, தவாக தலைவர் வேல்முருகன்) உள்ளனர். இவ்வளவு தலைவர்கள் இருந்தும், நமது வேட்பாளர்கள் தோற்றால் நமது சுயமரியாதை கேள்வி குறியாகிவிடும். அதனால் நாம் கடுமையாக உழைத்து சிதம்பரம் வேட்பாளர் திருமாவளவனையும், கடலூர் வேட்பாளர் ரமேஷையும் வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றவர்,

25ஆம் தேதி நமது வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர், அதற்கு மறுநாள் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துகிறோம். கூட்டத்தில் கலந்துகொள்ளும் வரும்போது பூத் விவரங்களை எடுத்துவர வேண்டும் என்று தெரிவித்தார்.

திருமாவளவனுக்குத் தேர்தல் ஆணையம் வழங்கிய பானை சின்னம் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலமாகப் பரவிவருகிறது என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச, திருமா தனது செல்போனிலிருந்து எங்கள் சின்னம், பானை சின்னம் என்ற பிரச்சாரப் பாடலை மைக்கின் மூலம் ஒலிக்கவிட்டார் .

இறுதியாகப் பேசிய திருமாவளவன், “தேர்தலில் போட்டியிட சின்னம் வாங்கவே 20 நாட்கள் தாமதமானது. வைரம், பலாப்பழம், டேபிள் சேர் சின்னத்தில் ஏதாவது ஒன்றைக் கேட்டோம். இருப்பினும் நமக்கு ஏழைகளின் சின்னமான பானை கிடைத்திருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, இந்தத் தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல், மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியையும் விரட்ட வேண்டும். பிரதமராக ராகுல் காந்தியை அமரவைக்க வேண்டும், தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். நமது கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி. அவர்கள் கூட்டணி, விலை கொடுத்து வாங்கிய கூட்டணி, வணிக ரீதியான கூட்டணி என்று விமர்சித்தவர், “திமுகவை அழிக்க தொகுதிக்கு 40 கோடி செலவு செய்கிறார்கள். திமுகவை அழிக்க முடியாது, அழிக்க நினைப்பவர்களை மக்கள் விரட்டி அடிப்பார்கள்” என்று அழுத்தமாகக் கூறினார்.

குறைந்த நாட்கள்தான் இருக்கிறது, ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியவர், நமது கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு பறக்கும் படையை உருவாக்க வேண்டும், எதிர்க்கட்சிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவோம், நாற்பதும் நமதே என்று பேசி முடித்தார் திருமாவளவன்.

திருமாவுக்கு சிதம்பரம் திருப்பம் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon