மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

சிவகங்கையில் கார்த்தி: போராடி வென்ற சிதம்பரம்

சிவகங்கையில் கார்த்தி: போராடி வென்ற சிதம்பரம்

சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 24) காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிவகங்கை தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அழகிரி, “ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவது என தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 40 தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மட்டுமல்ல, இந்தியாவில் 40 தொகுதிகளுக்கும் இதே நிலைமைதான். அனேகமாக இன்று சிவகங்கை வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இதனிடையே கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமும், சோனியா காந்தியிடமும் ப.சிதம்பரம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். ஆனால் தனது மகனுக்கு சீட் உறுதி செய்யப்படாததையடுத்து, இதனால் தமிழ்நாட்டில் தனது இமேஜூ க்கு பாதிப்பு ஏற்படும் எனவும், எனவே கட்சியில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதாக சிதம்பரம் ராகுல் காந்தியிடமும், சோனியா காந்தியிடமும் சிதம்பரம் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் தலைமை சிதம்பரத்தின் வழிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பத்து வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று மாலை வெளியிட்டது. அதில் பீகார், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் சில வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிதம்பரத்தின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில் சிவகங்கையில் எச்.ராஜா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 மா 2019

அடுத்ததுchevronRight icon