மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஈரோடு: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக?

ஈரோடு: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக?

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, கூட்டணிக் கட்சியான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக ஈரோடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் மதிமுக எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்ந்து இழுபறியில் நீடித்து வருகிறது. திமுக தரப்பிலிருந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு மதிமுகவுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தனிச்சின்னத்தில் போட்டியிடவே மதிமுக விரும்புவதாகக் கூறப்பட்டது. மதிமுக கடந்த காலங்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் தற்போது அச்சின்னம் மதிமுகவுக்கு இல்லை. தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என்று மார்ச் 21ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருந்தார்.

ஆனால் புதிய சின்னம் இன்னமும் ஒதுக்கப்படாத நிலையில், தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால், புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமானது எனவும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் எனவும் திமுக தரப்பிலிருந்து மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுகவின் இந்தக் கோரிக்கையை ஏற்று உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான விசிக ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon