மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

நாமக்கல்: பட்டும் படாமல் காந்தி செல்வன், சமுதாய வியூகத்தில் ஈஸ்வரன்

நாமக்கல்: பட்டும் படாமல் காந்தி செல்வன், சமுதாய வியூகத்தில் ஈஸ்வரன்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுகிறது ஈஸ்வரன் தலைமையிலான கொமதேக. இக்கட்சியின் சார்பில் ஏ.கே.பி. சின்ராஜ் வேட்பாளராக நிற்கிறார். கொமதேகவின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனே இத் தொகுதியில் நிற்பதாகக் கருதப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக இன்னொரு வேட்பாளர் நிறுத்தப்பட்டதால் திமுகவினர் கொஞ்சம் சுணக்கமாகத்தான் இருக்கிறார்கள்.

அதிலும் திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வனின் ஒத்துழைப்பு பட்டும் படாமலே இருக்கிறது என்கிறார்கள் கொமதேகவினர்.

இதுபற்றி நாமக்கல் அரசியல் வட்டாரத்தில் பேசியபோது,

“நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கொமதேக சார்பில் ஏ.கே.பி. சின்ராஜ் நிறுத்தப்பட்டதும் அவரை அறிவாலயம் அழைத்துச் சென்று திமுக தலைவரிடம் அறிமுகப்படுத்த விரும்பினார் ஈஸ்வரன். அதற்காக மாவட்டம் காந்திசெல்வனை அழைத்தார். ஆனால் காந்தியோ, ‘நீங்களும் வேட்பாளரும் மட்டும் போயிட்டு வந்துடுங்க’ என்று சொல்லிவிட்டார். ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று மாவட்டம் இல்லாமல் அறிவாலயம் சென்று ஸ்டாலினைப் பார்த்துவிட்டு வந்தார் ஈஸ்வரன்.

அதையடுத்து மார்ச் 22 ஆம் தேதி நாமக்கல்லில் திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் காந்தி செல்வன், மேற்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி கலந்துகொண்டனர். திமுக கூட்டணிக் கட்சியினர் திரண்டு வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் பேசுமாறு ஈஸ்வரன் கேட்டுக் கொண்டபோதும் காந்தி செல்வன் மறுத்துவிட்டார். ‘நீங்களும் வேட்பாளரும் பேசுங்க போதும்’ என்று சொல்லிவிட்டார். அதையடுத்து வேட்பாளர் ஏகேபி சின்ராஜும், ஈஸ்வரனும் மட்டுமே பேசினார்கள்.

அடுத்த அதிர்ச்சி ஈஸ்வரனுக்கு உடனடியாக காத்திருந்தது. அலுவலகம் திறந்துவிட்டு உடனடியாக நான்கு கிலோ மீட்டர் தூரமுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யத் தயாராகினர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக திறந்த ஜீப்பில் ஊர்வலமாக செல்வது என முடிவு செய்யப்பட்டது. அந்த திறந்த ஜீப்பில் வேட்பாளரோடு வருமாறு காந்தி செல்வனை அழைத்தார் ஈஸ்வரன். ஆனால் காந்திசெல்வனோ நீங்க போங்க, நான் என் கார்ல வர்றேன் என்று சொல்லிவிட்டார்.

அதன்படியே திறந்த ஜீப்பில் வேட்பாளர் சின்ராஜ், ஈஸ்வரன் மற்றும் கொமதேகவினர் மட்டுமே சென்றனர். ஜீப்பில் ஏறப் போன நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தியையும் கூப்பிட்டு தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டார் காந்திசெல்வன். இது கொமதேகவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால், நாமக்கல் தொகுதியில் அருந்ததியர்கள் ஓட்டுவங்கி வலுவாக உள்ளது. ராசிபுரம், சங்ககிரி, பரமத்திவேலூர், நாமக்கல் கிராமப்புற பகுதிகளில் அருந்ததியர் வாக்குகள் அதிகம் உள்ளது.

அதிமுகவினர் ஒவ்வொரு அருந்ததியர் பகுதியிலும் போய், ‘திமுகவில் சாதிக் கட்சிக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என சொல்லி வருகிறார்கள்.

இதையறிந்த ஈஸ்வரன் நேற்று (மார்ச் 23) ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வீட்டுக்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஏற்கனவே அருந்ததியர் மாநாட்டிலும் தான் கலந்துகொண்டவர் ஈஸ்வரன். அதைச் சொல்லி அருந்தியர் மக்களிடையே அதிமுக ஏற்படுத்தும் குழப்பத்தை முறியடிக்குமாறு அதியமானிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆதித் தமிழர் பேரவையினரும் ஈஸ்வரனுக்காக களமிறங்கிவிட்டார்கள்.

இந்த வியூகத்தைத் தாண்டி தொகுதியில் பரவலாக இருக்கும் நாட்டுக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர் சமுதாயப் பிரமுகர்களையும் சந்தித்து வருகிறார் ஈஸ்வரன். இதன்படி வேட்டுவக் கவுண்டர் சமூக பிரமுகரான மொளசி முத்துமணியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு வியூகத்தை அமைத்திருக்கிறார் ஈஸ்வரன். அது என்னவெனில் அதிமுகவின் சிட்டிங் எம்.பி. சுந்தரம் நாட்டுக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மீண்டும் எம்பி சீட் வழங்கப்படாமல் மாவட்டப் பொருளாளரான கொங்கு வேளாளரான காளியப்பனுக்கு வழங்கிவிட்டார் தங்கமணி. இதனால் அதிருப்தியில் இருக்கும் ராசிபுரம் வட்டார நாட்டுக் கவுண்டர் சமூகப் பிரமுகர்களை வளைத்து வருகிறார்கள் கொமதேகவினர்.

இப்படியான சமுதாயச் சக்கர வியூகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது நாமக்கல்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon