மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

நான் கடவுள் இல்லை: எடப்பாடி பழனிசாமி

நான் கடவுள் இல்லை: எடப்பாடி பழனிசாமி

தன்னைக் கடவுள் என்று நான் எப்போதும் கூறிக்கொண்டதில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான தமிழக அரசின் சாதனை விளம்பரத்தில், ஒரு பெண் கோயிலுக்கு வழிபடச் சென்றபோது நடக்கும் உரையாடல் காட்சி இடம் பெற்றிருந்தது. அதில் அர்ச்சனை யார் பேருக்கு என்று அர்ச்சகர் கேட்க, “அர்ச்சனை என் பேருக்கு இல்ல, சாமி பேருக்கு..நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு... அவர்தான் எனக்கு வேலை கொடுத்த சாமி...” என்று அந்தப் பெண் கூறுவார்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் மார்ச் 23ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, “கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள முதல்வர்களையும், நம்பிக்கை இல்லாத முதல்வர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் நான்தான் கடவுள் என்று கூறும் முதல்வரை இங்குதான் பார்க்கிறோம்” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, “நான் எப்போதும் கடவுள் என்று என்னை சொல்லிக்கொண்டதே இல்லை. அதிமுக மீது எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஸ்டாலின் கடவுளை வழிபடுவதில்லை, நம்பிக்கை இல்லை என்கிறார். ஆனால் அவர் வீட்டிலிருப்பவர்கள் விழுந்து விழுந்து கடவுளை வழிபடுகிறார்கள். ஆனால் நாங்கள் எல்லோருமே பக்தியுள்ளவர்கள். இது தனி மனித சுதந்திரம்” என்றார்.

வேலூர், சத்துவாச்சாரியில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது மேற்கொண்டு பேசிய அவர், “வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஏழை மக்கள் ஏ.சி.சண்முகத்தின் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 600 ஏழை மாணவர்கள் அவரது கல்லூரியில் இலவசக் கல்வி பயிலலாம்” என்றார்.

கொடநாடு கொள்ளையைக் கண்டுபிடித்தது அதிமுக அரசுதான் எனவும், பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு பார்த்தாலும் அதிமுக அரசு மீது குறை சொல்ல முடியாது என்ற பழனிசாமி, “கொடநாட்டில் நான் கொள்ளையடித்திருப்பதாகவும், கொலை செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள். அந்தக் கொள்ளையைக் கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான். ஆனால் சிறையிலடைக்கப்பட்ட அந்தக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்திருப்பது திமுக. அந்தக் கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். இல்லையென்றால் ஏன் அவர்களுக்கு ஜாமீன் பெற்றுத் தரப்போகிறார்கள்? அந்த சந்தேகத்துக்கும் அதிமுக அரசு விசாரணை நடத்தும்” என்றார்.

அதைத்தொடர்ந்து ஆற்காடு மற்றும் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாமக வேட்பாளர் ஏ.கே மூர்த்திக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், “பாஜகவை மதவாதக் கட்சி என்று ஸ்டாலின் கூறுகிறார். 1999ஆம் ஆண்டில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது மதவாதக் கட்சி தெரியவில்லையா? கொள்கை வேறு, கூட்டணி வேறு. முக.ஸ்டாலினை முதலமைச்சராக விட மாட்டேன் என்று கூறியவரை திமுக இன்று கூட்டணியில் வைத்திருக்கிறது” என்று சாடினார்.

தொடர்ந்து சோளிங்கரில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சம்பத் ஆகியோருக்கு வாக்கு சேகரித்துப் பேசிய முதல்வர், ”தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட சாலைகள் இல்லை. தன்னை ஒருநாளும் முதலமைச்சர் என தான் எண்ணியதில்லை. ஒவ்வொரு விவசாயியும் முதலமைச்சர்தான். படிக்கும் மாணவர்களுக்கு நோட், புத்தகம், லேப்டாப், சைக்கிள் என எல்லாம் இலவசமாகக் கொடுத்துப் படிக்க வைக்கிறோம். அதனால் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உயர் கல்விக்குப் போகிறார்கள். இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மத்தியில் உறுதியான, நிலையான ஆட்சி அமைய வேண்டும்” என்று பேசினார்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon