மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஸ்டாலின் பேசுவது முறையல்ல: பொன் ராதா

ஸ்டாலின் பேசுவது முறையல்ல: பொன் ராதா

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, திமுகவை அடகு வைத்தாரா என பொன் ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுகவைக் கட்டாயப்படுத்தி பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூட்டணி வைத்துள்ளதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, திமுகவை அடகு வைத்தாரா எனக் கேள்வியெழுப்பியுள்ள பொன் ராதாகிருஷ்ணன், “பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது, இன்றைய திமுக தலைவர் முக.ஸ்டாலின் எதற்காக பாஜக வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்? திமுகவை அடமானம் வைத்ததற்கு உத்தரவாதம் கொடுக்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்தாரா? அரசியலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைப்பதும், மாற்றிக்கொள்வதும் சகஜமாக நடந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் ஸ்டாலினின் கருத்துகள் ஏற்புடையதல்ல” என்றார்.

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக மார்ச் 21ஆம் தேதி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த முடிவை விவசாயிகள் வாபஸ் பெற வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறை எனக் கூறி, கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்ததற்கான அடையாளச் சின்னத்தை இடித்து அகற்றிய அதிகாரிகள் மீது, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon