மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

சிவகங்கை கார்த்திக்கு கிடையாதா, காங்கிரசுக்கே கிடையாதா?

சிவகங்கை கார்த்திக்கு கிடையாதா, காங்கிரசுக்கே கிடையாதா?

ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் தேர்தலில் நிற்க அனுமதி என்று ராகுல் முடிவெடுத்திருக்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களோடு இன்று (மார்ச் 24) காலை திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார் கே.எஸ்.அழகிரி.

அறிவிக்கப்பட்ட ஒன்பது வேட்பாளர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாணிக் தாகூர் ஆகிய இருவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்றுவிட்டதால் ஸ்டாலினைச் சந்திக்க வரவில்லை.

சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவது என்று தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் சுமார் 40 தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுப்பது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை மட்டுமல்ல, இந்தியாவில் மொத்தம் 40 தொகுதிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இன்று அனேகமாக சிவகங்கை வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்று கூறினார்.

அதேநேரம் இன்னொரு தகவலும் உலா வருகிறது.

“தன் மகன் கார்த்திக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படாததால் கடும் கோபத்தில் இருக்கிறார் ப.சிதம்பரம். இதுகுறித்து சோனியாவிடமும், ராகுலிடமும் பேசியுள்ளார் சிதம்பரம். ‘எனக்கு ஷேம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் என் மதிப்பு என்ன ஆவது? கட்சியில் எனக்குக் கொடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கை பணி முடிவடைந்ததும் நான் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்று சோனியாவிடம் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் ராகுல் காதுக்குப் போக அவரும் சிதம்பரத்திடம் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால் சிதம்பரத்தின் கோபம் தணியவில்லை.

மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் கமல்நாத் கூட தன் மகனுக்கு சீட் கேட்டார். ஆனால் வழங்கப்படவில்லை. தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் கமல்நாத்தை மத்திய அமைச்சர் ஆக்கிவிட்டு ம.பி.யின் இளம் காங்கிரஸ் தலைவரான ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியாவை முதல்வராக்குவதுதான் ராகுலின் திட்டம். அதேபோல கார்த்தி சிதம்பரத்தையும் மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துமாறு கூறியிருக்கிறார் ராகுல்.

ஆனால் இதை ப.சி ஏற்கவில்லை. இதற்கிடையில் சிவகங்கை தொகுதியை திமுகவிடமே கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக திமுக போட்டியிடும் தென்காசி தொகுதியை காங்கிரசுக்குக் கேட்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஸ்டாலினிடமே டெல்லியில் இருந்து பேசிவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது” என்கிறார்கள் காங்கிரஸ் - திமுக வட்டாரத்தில்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon