மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

திமுக - காங்கிரஸ் கையாளாகாத கூட்டணி: ஓபிஎஸ்

திமுக - காங்கிரஸ் கையாளாகாத கூட்டணி: ஓபிஎஸ்

காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக அரசால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத் தர இயலவில்லை என்றும், ஜெயலலிதாதான் பெற்றுக்கொடுத்தார் என்றும் ஓபிஎஸ் பேசியுள்ளார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஆறுமுகத்திற்குத் திருப்போரூரில் இன்று (மார்ச் 24) காலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா ஆன்மாவின் ஆசிபெற்ற வேட்பாளர்கள் இவர்கள் எனக்கூறிய ஓபிஎஸ், “மக்களவைத் தொகுதியிலும், சட்டமன்றத் தொகுதியிலும் இவர்கள் இருவரும் வெற்றிபெற்றால் இத்தொகுதிக்கு தேவையான குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நல்ல மக்களவை உறுப்பினராகவும், சட்ட உறுப்பினராகவும் இருப்பார்கள்” என்றார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு ஜெயலலிதா அரசுதான் அரசாணை பெற்றுத்தந்தது என்று கூறிய ஓபிஎஸ், “காவிரி பிரச்சினை தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினை. 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தபோது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்தார். இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அப்போது அவரால் பெற்றுத் தர இயலவில்லை. அப்போது திமுக - காங்கிரஸ் கையாளாகாத கூட்டணி அரசாக இருந்தது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று 2013ஆம் ஆண்டில்தான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத்தந்தார்” என்றார்.

இப்போது அதே காங்கிரஸ் திமுகதான் மீண்டும் கூட்டணியமைத்து வந்திருக்கிறார்கள் என்று கூறிய ஓபிஎஸ், “இலங்கைத் தமிழர்கள் மீது 2009ஆம் ஆண்டில் ராஜபக்சே அரசு மிகப்பெரிய போர் தொடுக்கப்போகிறது என்ற தகவல் உளவுத் துறை மூலமாக டெல்லி வந்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. 4 லட்சம் இலங்கைத் தமிழர்கள் அந்தப் போரில் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கைக்கு ஒரேயொரு எச்சரிக்கை மட்டும் விடுத்திருந்தால் அந்தப் போர் அன்றைக்கு நடந்திருக்காது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ராஜபக்சே போர்க்குற்றவாளி, சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஆனால் இலங்கைத் தமிழர்களைக் கொல்ல காங்கிரஸ் அரசு ஆயுதங்களை அனுப்பி வைத்தது. அந்த காங்கிரஸுடன்தான் திமுக மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறது” என்றார்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon