மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: சன்டே ஸ்பெஷல் - சைதாப்பேட்டை வடகறி

கிச்சன் கீர்த்தனா: சன்டே ஸ்பெஷல் - சைதாப்பேட்டை வடகறி

சென்னையின் முத்திரை!

வடகறி... தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கே தெரியாத உணவு வகை. வடகறியைத் தவிர்த்துவிட்டுச் சென்னையின் சிறப்பு உணவு வகைகளைப் பட்டியலிட முடியாது. வடையின் மிச்சத்திலிருந்து செய்யப்படுவதுதானே வடகறி என்று நினைக்கப்பட்டாலும், இதற்கான செய்முறையே தனி.

65 ஆண்டுகாலமாக வடகறிக்குப் புகழ்பெற்ற சென்னை, சைதாப்பேட்டை ‘மாரி ஹோட்டல்’ உரிமையாளர் ‘வடகறி’ செய்முறையைப் பகிர்ந்துகொண்டார். தரமாகச் செய்யப்படும் இந்த வடகறி, மக்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்ததோடு திரைப்படப் பாடலிலும் இடம்பிடித்த பெருமையும் கொண்டது (சவாலங்கடி கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி…)!

இட்லி - வடகறி காம்பினேஷன் என்ற முந்தைய வழக்கம் மாறி, இப்போது தோசை - வடகறி, இடியாப்பம் - வடகறி, பூரி - வடகறி, செட் தோசை - வடகறி காம்பினேஷன் சென்னை நகரின் பல உணவகங்களில் வழக்கத்தில் வந்துவிட்டது.

என்ன தேவை?

ஐந்து பேருக்கு வடகறி செய்ய...

கடலைப் பருப்பு - அரை கிலோ

பெரிய வெங்காயம் - அரை கிலோ (நறுக்கிக்கொள்ளவும்)

புதினா - ஒரு கட்டு (சுத்தம் செய்து ஆய்ந்துகொள்ளவும்)

இஞ்சி - 50 கிராம்

பச்சை மிளகாய் - 50 கிராம்

பூண்டு - 100 கிராம்

ஏலக்காய் - 5

கிராம்பு - 5

பட்டை, லவங்கம் - 25 கிராம்

சோம்பு - 50 கிராம்

மஞ்சள் தூள் - 10 கிராம்

(மல்லி) தனியாத் தூள் - 50 கிராம்

மிளகாய்ப் பொடி - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு விழுதை பக்கோடா போலப் பொரித்து எடுங்கள். பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதிவந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப் பருப்பு பகோடாக்களை லேசாக உதிர்த்து சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள்.

இந்த வடகறியின் சுவைக்காகவே இன்னும் இரண்டு தோசை உள்ளே பூகும்!

உடலுக்கு என்ன நன்மை?

கடலைப் பருப்பு புரதச் சத்து கொண்டது. இது எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும்போது கொழுப்புச் சத்து சேர்ந்தாலும், இந்த வடகறியில் சேர்க்கப்படும் பிற பொருட்கள் செரிமானத்துக்குத் துணைசெய்கின்றன. உடனடி ஜீரணத்துக்கு உதவுகின்றன. காலை வேளையில் சாப்பிடும்போது அன்றைய நாள் முழுவதற்குமே எனர்ஜியைத் தருகிறது.

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon