மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

மோடி: பதுங்குவது பாய்வதற்கா?

மோடி: பதுங்குவது பாய்வதற்கா?

பிரதமர் மோடியை பொதுக் கூட்ட மேடைகளில் நீங்கள் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிறது? தேர்தல் அனல் பறக்கும் இந்தியாவில் பாஜகவின் முக்கியப் பரப்புரையாளரான பிரதமர் மோடியை, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பொது மேடைகளில் பார்த்த ஞாபகம் இருக்கிறதா?

இல்லை என்றே பதில் வருகிறது.

மார்ச் 10 ஆம் தேதியன்று தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்புவரை விமானத்தில் ஒரே நாளில் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பாஜக பொதுக்கூட்டங்கள் பேசிவந்தார் மோடி. அப்போது மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பாஜகவின் தேர்தல் பரப்புரை விழா என இரண்டும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் வெவ்வேறு மேடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மத்திய அரசின் செலவில் பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு பிரசாரம் செய்கிறார் மோடி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை மோடி. ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என்று ஒரே பகலில் மூன்று மாநிலங்களை விமானத்தால் அளந்தார் மோடி.

ஆனால் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியை பொதுக்கூட்ட மேடைகளில் பார்க்கவே முடிவதில்லை. மோடியின் ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் அவரது நிகழ்ச்சிகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.

அதன்படி பார்த்தால் மார்ச் 9 ஆம் தேதி டெல்லி அருகே இருக்கும் நொய்டாவில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் மோடி. மறுநாள் 10 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அன்றே மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் விழாவில் பிரதமர் கலந்துகொண்டார்.

அதன் பின் மார்ச் 11 ஆம் தேதி பங்களாதேஷ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சந்திப்பு, பத்ம விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டார்.

மார்ச் 10 முதலே தனது ட்விட்டரில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார் மோடி. நாட்டின் பல்வேறு பிரபலங்களையும் ‘டேக்’செய்து, ‘வாக்களிக்க வருமாறு மக்களை அழையுங்கள்’ என்று பொதுவாக அழைப்பு விடுத்தார். இதில் நம்மூர் ஏ.ஆர். ரகுமான், தினத்தந்தி வரை உண்டு.

பின் தன் ஐந்தாண்டு அரசின் சாதனையை தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவு செய்தார்.

மார்ச் 14 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா, மார்ச் 18 மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு அஞ்சலி, 19 ஆம் தேதி மீண்டும் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது விழா, மார்ச் 20 ஆம் தேதி நாட்டில் உள்ள காவலாளிகளோடு உரையாடுதல் என்று மோடியின் நிகழ்ச்சிகள் மிக குறைந்த அளவிலானவையே.

மார்ச் 10 ஆம் தேதி முதல் இப்போது வரை மோடி அரசியல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் எதிலும் பேசவில்லை.

இதுபற்றி பாஜக தலைமை வட்டாரங்களில் விசாரித்தபோது,

“மோடி பிப்ரவரி, மார்ச் முதல் வாரங்களிலேயே நாட்டை ஓரளவுக்கு சுற்றி வந்து தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டார். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஏற்கனவே பாஜக இளைஞரணி நாடு முழுவதிலும் ஆய்வு நடத்தி தயாரித்துக் கொடுத்த அறிக்கையை அமித் ஷாவோடு சேர்ந்து ஆராய ஆரம்பித்தார் மோடி. ஆக பத்தாம் தேதிக்குப் பிறகு முழுக்க முழுக்க வேட்பாளர் தேர்வு, பிரச்சாரத்துக்கு எந்த மாநிலத்துக்கு எவ்வளவு நாட்கள் செலவிட வேண்டும், எங்கே பலமாக இருக்கிறோம், எங்கே பலவீனமாக இருக்கிறோம் என்பது பற்றி முழுக்க முழுக்க ஆய்வு நடத்தி வருகிறார் மோடி.

டெல்லி பாஜக அலுவலகத்துக்கு தினமும் வருகிறார். அமித் ஷாவோடு சேர்ந்து வேட்பாளர் பட்டியலை ஆராய்கிறார்,. அடுத்த கட்ட பிரசாரம் பற்றி துல்லியமாகத் திட்டமிடுகிறார். இத்தனை வேலைகளுக்காகத்தான் பொதுக்கூட்டங்களில் தலைகாட்டாமல் இருக்கிறார் மோடி.

இந்த இரண்டுவார பதுங்குதல் என்பது முழுக்க முழுக்க பாய்வதற்கான ஆயத்தமே” என்கிறார்கள் பாஜகவினர்.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon