மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

ஐபிஎல்: வாணவேடிக்கையை அனுமதிக்காத பந்து வீச்சாளர்கள்!

ஐபிஎல்: வாணவேடிக்கையை அனுமதிக்காத பந்து வீச்சாளர்கள்!

12ஆவது ஐபிஎல் தொடர் நேற்று (மார்ச் 23) சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இனி சுமார் இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் பேச்சில் ஐபிஎல் தவிர்க்க முடியாததாக இருக்கப் போகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. சினிமாவில் எவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் இரு நடிகர்களை எதிரும் புதிருமாகக் கொண்டு நீயா, நானா எனப் போட்டியிட்டுக் கொள்வார்களோ, அதேபோல் கிரிக்கெட் ரசிகர்களின் இன்றைய பொழுதுபோக்கு யார் சிறந்த கேப்டன் தோனியா, கோலியா என சமூக வலைதளங்களில் போர் தொடுப்பது என்றாகிவிட்டது. அப்படியிருக்க ஐபிஎல்லின் தொடக்கப் போட்டியில் இவ்விரு வீரர்களின் தலைமையிலான அணிகள் மோதியதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.

நேற்றைய போட்டியில் சேப்பாக்கம் மைதானம் மஞ்சள்மயமாகவே காட்சியளித்தது. ஆங்காங்கே சில பெங்களூரு ரசிகர்களும் தங்கள் ஆதரவைத் தங்கள் அணிக்கு வழங்கிவந்தனர். ஆனால், அவர்கள் சத்தம் அந்த வீரர்களின் காதுகளை எட்டியிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு சென்னை அணி வீரர்களுக்கு இருந்தது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்ய, கோலியும் பார்திவ் படேலும் பெங்களூரு அணியின் ரன் வேட்டையைத் தொடங்க களத்துக்கு வந்தனர். ஆனால் அதற்கு ஹர்பஜன் தனது சுழல் மூலம் முட்டுக்கட்டை போட்டார். ஆட்டம் தொடங்கி பந்துகள் பவுண்டரி லைனை தொடுவதற்குள் கோலியின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. கோலியை 6 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்த ஹர்பஜன் அடுத்து வந்த மொயீன் அலியை 9 ரன்னில் பெவிலியன் அனுப்பினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸும் 9 ரன்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினார். ஹர்பஜன் சுழலில் ஆரம்பத்திலேயே வீழ்ந்த இந்த மூன்று விக்கெட்டுகளும் ஆட்டத்தின் போக்கையை மாற்றின.

அதன் பின்னர் வந்த வீரர்களாலும் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. பெங்களூரு அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க பார்திவ் படேல் மட்டும் 29 ரன்கள் என இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தார். அவரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமலும், ஷிவம் துபே 2 ரன்னுக்கும் வெளியேறியது அந்த அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இறுதியில் பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா மூன்று விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட்டிங்கைத் தொடங்கினாலும் சென்னை அணியாலும் அதிரடியாக ஆடி விரைவாக வெற்றியை ருசித்துவிட முடியவில்லை.

சென்னை அணியின் தொடக்க வீரரான வாட்சன் ரன் ஏதும் எடுக்கமல் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். அடுத்து வந்த ரெய்னா 19 ரன்களில் தனது கணக்கை முடித்துக்கொண்டார். அடுத்ததாக களம் இறங்கிய ஜாதவ், ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ராயுடு 28 ரன் எடுத்திருந்தபோது வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த ஜடேஜா ஜாதவ்வுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

கைவசம் விக்கெட் இருந்தாலும், சிறிய இலக்காக இருந்தாலும் எந்த வீரராலும் அதிரடி காட்ட முடியவில்லை. 17.4 ஓவரில் தான் சென்னை அணியால் 71 ரன்களை அடிக்க முடிந்தது. பெங்களூரு அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது; சென்னை அணியில் விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. இதைத் தவிர பெரியளவில் பேட்டிங்கில் சென்னை அணி வித்தியாசம் காட்டிவிடவில்லை. பெங்களூரு அணி இன்னும் முப்பது ரன்கள் அதிகம் அடித்திருந்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆட்டத்தின் போக்கை நிர்ணயித்த ஹர்பஜன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெறும் ஏழாவது தோல்வி இதுவாகும்.

பெரும்பாலும் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகள் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்க பேட்ஸ்மேன்களின் கட்டுப்பாட்டியிலேயே இருக்கும். ஆனால், நேற்றைய போட்டி முழுக்க பந்து வீச்சாளர்களின் கைகளிலேயே இருந்தது. இரு அணி வீரர்கள் சேர்ந்து மொத்தம் இரண்டு சிக்ஸர்களே அடித்தனர். இதனால் வாணவேடிக்கைகளை எதிர்பார்த்துவந்த ரசிகர்களுக்குச் சிறிது ஏமாற்றம் இருந்தாலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லாமல் இருந்தது.

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon