மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

‘பிஎம் நரேந்திர மோடி’யும் அழுகுணி குமாரும்!

‘பிஎம் நரேந்திர மோடி’யும் அழுகுணி குமாரும்!

நெட்டிசம் - சரா சுப்ரமணியம்

இளம் சேவகராக ஆர்எஸ்எஸ் அமைப்பில் உருவெடுத்தது, குஜராத் முதல்வராக வீற்றிருந்தது, 2014 பொதுத் தேர்தலில் வெற்றி வாகை சூடிப் பிரதமரானது என நரேந்திர மோடியின் வாழ்க்கையில் பல்வேறு பருவங்களைச் சித்திரிக்கும் படத்தில் ஒன்பது கெட்டப்புகள் மூலம் விவேக் ஓபராய் ஆக்ரோஷம் காட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அதிவேகத்தில் எடுக்கப்பட்ட ‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

மோடி எத்தனை மோடியடி!

ரயிலில் தேநீர் விற்கும் சிறுவன் மோடியைப் பார்க்க முடிந்தது.

தேசப்பற்றுடன் துறவு மீதும் அதீத நாட்டம்கொண்ட இளம் மோடியையும் பார்க்க முடிந்தது.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் உத்வேகத்துடன் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர் மோடியையும் பார்க்க முடிந்தது.

குஜராத்தின் அக்‌ஷர்தாம் கோயில் தாக்குதலைக் கையாண்ட முதல்வராக மோடியின் செயல்பாட்டைப் பார்க்க முடிந்தது.

குஜராத் கலவரத்தின்போது மோடி தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், மக்களை நேரடியாகக் காப்பாற்றியதையும் பார்க்க முடிந்தது.

நானோ ஆலைக்காக ரத்தன் டாடாவை அழைத்துப் பேசும் மோடியைப் பார்க்க முடிந்தது.

மையப் பாத்திரமான மோடியைக் காட்டிலும், நம் தேசியக் கொடியையும், ‘ஹிந்துஸ்தான்’ எனும் முழக்கத்தையும் அதிகம் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.

ட்ரெய்லர் முடிவதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக மோடி இப்படி உக்கிரமாகப் பேசுகிறார்:

“நான் பாகிஸ்தானை எச்சரிக்கிறேன், எங்கள்மீது அவர்கள் மீண்டும் தாக்கினால், நான் அவர்களது கரங்களை முறிப்பேன். நீங்கள் எங்களது தியாகங்களைப் பார்த்திருக்கிறீர்கள். இப்போது எங்கள் பழிவாங்கலைப் பார்ப்பீர்கள்.”

தேசபக்தி மிக்கவர்களைச் சிலிர்ப்புக் கொள்ளச்செய்யும் இந்த ட்ரெய்லர், பாஜகவினரை புளகாங்கிதம் அடையச் செய்திருக்க வேண்டும்தானே? அதுதானே இயல்பு?

இணைய ஜெல்லட்டினில் சிக்கிய ட்ரெய்லரின் தலை

ஆனால், ‘பிஎம் நரேந்திர மோடி’ ட்ரெய்லர் வெளியான அன்றும் மறுதினமும் மோடி ஆதரவாளர்களும், பாஜகவினரும் சமூக வலைதளத்தில் அடக்கிவாசித்ததை அறிய முடிந்தது. ஓரிரு வார்த்தைகளிலான பாராட்டுகளையோ அல்லது எதுவும் இல்லாமலோ ட்ரெய்லரை பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்தனர்.

எனினும், ‪#‎PMNarendraModiTrailer எனும் ஹேஷ்டேக் தேச அளவில் ட்விட்டரில் சில மணி நேரங்கள் ட்ரெண்ட் ஆனது. ஆர்வத்துடன் உற்று நோக்கியபோதே தெரிந்தது, அவற்றில் பெரும்பாலானவை கலாய்ப்புப் பதிவுகளும் மீம்களும்தான் என்பது. அப்போது, விவேக் ஓபராயும் ட்ரெண்டில் வலம் வந்தார். அவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்து கிண்டல் செய்யப்பட்ட பதிவுகள் ஏராளம். ‘பிரதமர் மோடியே நடிகர் ஓபராயைவிடச் சிறப்பாக நடிப்பார்’ என்பது முத்தாய்ப்புகளுள் ஒன்று.

‘பயோ-பிக் என்ற போர்வையில், இஷ்டத்துக்கு அடித்து விட்டிருக்கிறார்கள். நமக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கு - மடையர்களுக்கு இது தெரியவா போகிறது? வரலாறு முக்கியம் அமைச்சரே...’ என்கிற ரீதியிலான ட்ரெய்லர் விமர்சனங்களைக் கவனிக்க முடிந்தது.

‘ஓவரா விடுற ஒம் பாட்டுக்கு’ என்பன போன்ற இணையச் சொற்றொடர்களால் கழுவியூற்றப்பட்ட இந்த ட்ரெய்லரை சீரியஸாகவும் பலர் விமர்சித்தனர்.

PMNarendraModi போன்ற பயோ-பிக் திரைப்பட இயக்குநர்களின் நேர்மையைக் கண்டு தன் மனம் கலக்கமடைவதாகக் கொந்தளித்த நடிகர் சித்தார்த், இதுவே இப்படி என்றால், நான்கைந்து பேர் எடுத்துவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகள் எப்படி இருக்கும் என்று நியாயமான வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

ட்ரெய்லர் வெளியான இரு தினங்கள் கழித்து, ‘இந்தப் படத்தின் போஸ்டரில் என் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இதில் ஒரு பாடலைக்கூட நான் எழுதவில்லை’ என்று பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் அலறி ஒரு ட்வீட் செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்கும்போது ட்ரெய்லர் மீதான கலாய்ப்புக் குவியல்களை அவரும் கவனித்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

நடப்பு ஆண்டு ஜனவரி இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பும், இதர பணிகளும் அதிவேகத்தில் நிறைவடைந்துள்ளன. இந்தப் படம் ஏப்ரல் 12இல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 17 முதல் மே 19 வரை பொதுத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததன் தொடர்ச்சியாக, நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் வெளியீடு அவசர அவசரமாக முன்தேதியிடப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 5ஆம் தேதியே இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் படம் வெளியாகிறது.

இந்தப் பின்னணியில், தேர்தலைக் கருத்தில்கொண்டு மோடியின் புகழை மிகையாகப் பாடும் இந்தப் படத்தை இப்போது வெளியிட அனுமதிக்கக் கூடாது என்கிற ரீதியில் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால், ட்ரெய்லரை மீண்டும் மீண்டும் பார்க்கும்போதும், ட்ரெய்லர் குறித்த விமர்சனப் பார்வைகளையும் கலாய்ப்புகளையும் கவனிக்கும்போதும், இந்த வலியுறுத்தலை பாஜகவினர்தான் முன்வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

நாட்டின் உண்மை நிலவரத்தைக் குடிமக்கள் அப்பட்டமாக அறிந்துவைத்திருந்த சூழலில், ‘இந்தியா ஒளிர்கிறது’ எனும் வாசகம் பாஜகவுக்கு வேட்டு வைத்ததை அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது. அதைப்போலவே, எல்லா மட்டத்திலும் இந்தியர்களுக்கு மோடியைப் பற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமின்றி, அதற்கு முந்தைய வரலாறும் வெகுவாக அறிவர். இந்தச் சூழலில், ‘பிஎம் நரேந்திர மோடி’யில் காட்டப்படும் மோடியை மக்கள் பார்க்க நேர்ந்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் அபாயமும் உண்டுதானே?

பிஎம் மோடியும் ஜிகர்தண்டாவும்

தங்களை பாஜகவின் எதிர்ப்பாளர்கள் என்று அறிவித்துக்கொள்ளும் சிலர், ‘இந்தப் படம் நிச்சயம் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியினருக்கு மேலும் சாதக நிலையைத் தரும்’ என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கும்போது, ‘ஜிகர்தண்டா’ படத்தின் ‘அழுகுணி குமார்’ கதாபாத்திரம்தான் நினைவில் நிழலாடுகிறது.

‘பிஎம் நரேந்திர மோடி’ படக்குழு மொத்தமும் ‘ஜிகர்தண்டா’வின் இயக்குநராக வரும் சித்தார்த் அண்டு டீம் போல உள்குத்து வேலையில் இறங்கி, நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை வேண்டுமென்றே காட்சி மொழிகளில் இப்படியெல்லாம் ‘செதுக்கி’ இருக்கிறதோ என்ற அச்சமும் எழுகிறது. இதன் பின்னணியிலும் காங்கிரஸின் வியூகம் இருக்குமோ என்னவோ?

இப்போதைக்கு ட்ரெய்லர்தான் பார்த்திருக்கிறோம். அது குறித்த நெட்டிசன்களின் பார்வைகளைத்தான் பார்த்து வருகிறோம். மெயின் பிக்சர் வந்தால்தான் பல உண்மைகள் இன்னும் பிடிபடக்கூடும்.

எனினும், எதிர்காலத்தில் வரலாற்று ஆவணங்களாக வருங்காலச் சந்ததியினர் பார்க்கக் கூடிய பயோ-பிக் திரைப்படங்களின் படைப்பாளிகள் குறைந்தபட்ச நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே இந்த ட்ரெய்லர் உணர்த்திக் காட்டுவது தெளிவு.

‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம் ட்ரெய்லர் குறித்து எத்தனையோ கருத்துகள் வெளிவந்தாலும், ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ட்வீட்தான் மற்ற அனைத்துப் பார்வைகளையும் சுருட்டிப் பரணில் போடவைத்து விட்டது.

தமிழ்ப் படம் தயாரிப்பாளரை டேக் செய்து, “இதைக் காட்டிலும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியாது, உங்களுக்கு ‘தமிழ்ப் படம் 3’ இயக்குநர் கிடைத்துவிட்டார். வாழ்த்துகள்” என்று கூறி, ‘பிஎம் நரேந்திர மோடி’ படத்தின் ட்ரெயரை இணைத்திருந்தார் அமுதன்.

ஆம், அவர் சொல்வது இதுதான்:

பிஎம் நரேந்திர மோடி... பயோ-பிக் அல்ல; ஸ்பூஃப் மூவி!

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon