மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்?

மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்?

கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. வனப்பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் சிரமப்படுகின்றன. அதனால், வனப்பகுதிகளை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (மார்ச் 23) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,

நடப்பட்ட மரங்களைக் காப்பாற்றுவதற்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா, போதுமான வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா, நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் எத்தனை,

கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க வேண்டும்.

தீ விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்நடவடிக்கைகள் என்னென்ன,

உலக வங்கி மூலம் பெறப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது. நிதிமூலம் நடப்பட்ட மரங்கள் எத்தனை உள்ளிட்ட கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon