மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

புதிய வாக்காளர்கள் தீர்மானிக்கிறார்களா?

புதிய வாக்காளர்கள் தீர்மானிக்கிறார்களா?

அ. குமரேசன்

ஜனநாயகத்தின் மிகப் பெரும் செயற்களம் தேர்தல். ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள இந்திய மக்களவைத் தேர்தலில் அடுத்த ஐந்தாண்டுக்கான ஆட்சிப் பொறுப்பைத் தீர்மானிக்கிற தகுதியைப் பெற்றிருக்கிற வாக்காளர்கள் எண்ணிக்கை 90 கோடி. இவர்களில் ஒன்றரைக் கோடிப் பேர் 18-19 வயதுப் பிரிவினர். இவர்கள் உட்பட 4 கோடியே 50 லட்சம் புதிய, இளம் வாக்காளர்கள் இணைகிறார்கள். இது மொத்த வாக்காளர்களில் 5 சதவிகிதம். பிஹார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து மட்டுமே 2,41,26,714 புதியவர்கள் வருகிறார்கள்.

இத்தனை கோடி புதியவர்கள் இந்தத் தேர்தலில் முக்கியத் தாக்கம் செலுத்துவார்கள், ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட தங்களின் தலையாய அக்கறைகளின் அடிப்படையில் இளம் வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளிலும் தலையாய பங்களிப்பார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

எனக்குத் தெரிந்து ஒவ்வொரு தேர்தலின்போதும் இவ்வாறே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. வாக்களிக்கும் வயது 21 என்று இருந்த காலத்திலும் இப்படிச் சொல்லப்பட்டது. 18 வயது என்று மாறிய பிறகும் சொல்லப்படுகிறது.

மாற்றி எழுதுகிறார்களா?

உண்மையிலேயே திட்டவட்டமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக, இளைஞர்கள் பங்கு இருக்கிறதா? புதிய இளம் வாக்காளர்கள் வாக்குப் பதிவு எந்திரத்தில் எந்த பட்டன்களை அழுத்தினார்கள் என்பதைப் பொறுத்துதான் முடிவுகள் எழுதப்படுகின்றனவா? அல்லது, ஒட்டுமொத்த வாக்காளர்கள் அரசியல் அடிப்படையிலும் (அதாவது கட்சி, கூட்டு என்ற அடிப்படையில்), சமூக அடிப்படையிலும் (அதாவது சாதி, மதம் என்ற அடிப்படையில்) அணி பிரிந்து நிற்பதுதான் புதியோர், இளையோரிடையேயும் பிரதிபலிக்கிறதா?

வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தொகுதி வாரியாக, வட்ட வாரியாகத்தான் கிடைக்கின்றனவேயன்றி வயது வாரியாக அல்ல. ஏன் – சமூக அடிப்படையிலோ, பாலின அடிப்படையிலோகூட வாக்குகள் கணக்கிடப்படுவதில்லை. அப்படிக் கணக்கிடுவது தேவையும் இல்லை, அது பாதுகாப்பானதும் இல்லை. ரகசியத் தேர்தல் என்ற ஏற்பாட்டுக்கு அது உகந்ததும் இல்லை. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நாமாகத்தான், சம்பந்தப்பட்ட தொகுதியின் நிலைமைகளைக் கொண்டு எந்தப் பிரிவினர் எந்த வேட்பாளருக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களித்திருப்பார்கள் என்ற கணிப்புக்கு வருகிறோம். அது போலவே வாக்குச் சாவடிக்கு வந்த புதிய, இளைய வாக்காளர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதையும் பொதுவான ஊகத்துக்குத்தான் விடுகிறோம்.

கடந்த தேர்தல்களிலும், ஆட்சியதிகாரத்திலிருந்த கட்சிகள் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன; எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியாக அமரவைக்கப்பட்டன; சில தொகுதிகளிலிருந்து சுயேச்சை வேட்பாளர்கள் நாடாளுமன்ற / சட்டமன்ற அவைகளுக்குள் நுழைந்தனர். இதிலெல்லாம் பழைய, மூத்த வாக்காளர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ, அதே பங்களிப்புகள்தான் புதிய, இளைய வாக்காளர்களிடமும் பெருமளவுக்குப் பிரதிபலித்திருக்கின்றன. அந்தப் புதிய, இளைய வாக்காளர்களால்தான் முடிவு மாறியது என்று சொல்லக்கூடிய வகையில் இதுவரையில் பொதுவான வாக்குப் பதிவுகள் அமையவில்லை என்றே கருதுகிறேன்.

ஒரு தொகுதியில் இளைய வாக்காளர்கள் எண்ணிக்கை கூடுதலாகியிருப்பதால் இளைய வேட்பாளர் அல்லது இளைஞர்களோடு கலந்து நின்ற வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார் என்ற செய்திகள் வந்திருக்கின்றனவா? மொத்த வாக்காளர்களில் 5 சதவிகிதத்தினர்தான் புதியவர்கள், இளைஞர்கள் என்பதாலும், வாக்களிக்க முன்வராதவர்களையும், வாக்குப் பதிவு எந்திரத்தின் கடைசி பட்டனில் விரல் வைக்காதவர்களையும் கழித்து மற்றவர்கள் கட்சி சார்ந்து அணி பிரிந்திருப்பார்கள் என்பதாலும், இளம் வயதினர் என்ற காரணத்தால் மட்டுமே முடிவை அடியோடு மாற்றுகிற இடத்தில் அவர்கள் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

பெண்கள், தொழிலாளர்கள் என்பதால்…

ஒரு தொகுதியின் வாக்காளர்களில் பெண்கள் அதிகமாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரு பெண் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். பெண் வாக்காளர்கள் அனைவரும் அல்லது அவர்களில் பெரும்பான்மையோர் அந்தப் பெண் வேட்பாளருக்கு வாக்களித்துவிடுவார்களா? அதே போல், ஒரு தொகுதி முழுக்கத் தொழிலாளர்கள் நிறைந்திருக்கக்கூடும். அவர்கள் அனைவரும் அல்லது அவர்களில் பெரும்பான்மையோர், அத்தொகுதியில் போட்டியிடக்கூடிய எளிமையானவரும் நேர்மையாளரும் போராளியுமான தொழிற்சங்கத் தலைவருக்கு ஆதரவாக வாக்களித்துவிடுவார்கள் என்று கூற முடியுமா? அப்படி எதிர்பார்க்கப்பட்டு அதற்கு நேர்மாறாக நடந்த கதைகள் நிறைய உண்டு.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், தலித்துகள், பழங்குடியினர் என்று இக்கேள்வியை விரிவுபடுத்திக் கேட்டாலும் இதே பதில்தான் வரும். நேர்மையாளர்களும் போராளிகளும் தேர்ந்தெடுக்கப்படாததில் எனது வருத்தத்தை வேண்டுமானால் வெளிப்படுத்தலாம். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்கலாம். அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் உங்களுக்கான குரல் நாடாளுமன்றம் / சட்டமன்றத்தில் வலுவாக ஒலிக்குமே என்று சுட்டிக்காட்டலாம். ஆனால், அவ்வாறு முடிவெடுக்கிற வாக்காளர்களது ஜனநாயக உரிமையை எப்படி மறுக்க முடியும்?

அதே போன்றதுதான், புதிய இளம் வாக்காளர்கள் எடுக்கிற முடிவும். இளைஞர்கள் ஆழமான புரிதலோடு அரசியலை அணுகுகிறார்களா? தங்கள் கையில் கிடைக்கும் ‘ஒரு நாள் ஒரு விரல்’ அதிகாரத்தை உண்மையான பொறுப்போடு கையாளுகிறார்களா? அதற்கான அக்கறையுள்ள விவாதங்களில் பங்கேற்கிறார்களா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. ஆனால், பழைய, மூத்த வாக்காளர்களுக்கும் இக்கேள்விகள் முழுமையாகப் பொருந்தும்.

அந்த அத்தியாயங்கள்

இந்திய விடுதலைப் போராட்டக் களம் அன்றைய மாணவர்கள், இளைஞர்கள் இறங்கியதால் வலுப்பெற்றது. தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள் தோள் சேர்ந்ததால் வெற்றி பெற்றது. ஆலய நுழைவுப் போராட்டம், சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம், இயற்கைச் சமநிலை பாதுகாப்புப் போராட்டம், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான போராட்டம்… இத்தகைய பல போராட்டங்களின் வெற்றிகரமான வரலாறுகளில், அவற்றில் புத்துணர்ச்சியோடு இள ரத்தம் பாய்ந்த அத்தியாயங்கள் உண்டு. அதேபோன்ற அத்தியாயங்களை, தேர்தல் வாக்குப் பதிவுகளில் தேட முடியாது.

புதிய, இளைய வாக்காளர்களில் கட்சி உறுப்பினர்களாகவோ, ஆதரவாளர்களாகவோ உள்ளவர்கள் நிச்சயமாகத் தேர்தலில் தங்களது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதில் அந்தக் கட்சிகளின் வழிகாட்டல்களைப் பெற்றுச் செயல்படுவார்கள். கட்சி சார்பு அல்லாதவர்கள் தேர்தல் நடைமுறையில் இணைந்துகொள்ள முன்வருவார்களானால், தங்களுக்கிடையே பேசிக்கொள்ளத்தான் செய்கிறார்கள். பெரும்பாலோர் தங்கள் குடும்பங்களில் பெற்றோர்களும் மற்ற பெரியவர்களும் எடுக்கிற முடிவோடு தங்களையும் பொருத்திக்கொள்கிறார்கள். ஒரு பகுதியினர் ஊரில் உள்ள தங்களது “சமூகத் தலைவர்கள்” காட்டுகிற வழியில் செல்கிறார்கள். சமூகக் கட்டுப்பாடு எனப்படும் சாதி, சமயக் கேடுகள் போலவே பணப்பட்டுவாடா போன்ற கேடுகளுக்குத் தங்கள் வாக்குரிமையைப் பண்டமாற்று விற்பனை செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.

மூத்தவர்களிடம் பரவலாக இருக்கிற இந்த நிலைமைகள் பெரிய சதவிகித வேறுபாடு இல்லாமல் இளையோரிடமும் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இளைய சக்திக்கே உரிய மாற்றுச் சிந்தனைகளை இவர்களிடையே கொண்டுசெல்லத்தான் முற்போக்கான, மாற்றத்துக்கான மாணவர், இளைஞர் இயக்கங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன என்ற காட்சி இதற்கு சாட்சி.

சந்திக்க வேண்டிய சவால்

இன்று கல்லூரி வளாகங்களில் அரசியல் உரையாடல்களுக்கான வெளி அடைக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் சமூகப் பிரச்சினைகளைப் பேசினால் தேசத்துரோக வழக்கு போடப்படுகிற அரசியல் அல்லவா கோலோச்சுகிறது! தமிழகத்தில், அரசியல் தலைவர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்றே கல்லூரி நிர்வாகங்களுக்கு உயர் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறதே! சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரோடு உரையாடல் நடத்தப்பட்டதற்கு விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆன்மிக குருமார்கள் வந்து அருளுரையாற்றவோ, தொழிலதிபர்கள் வந்து அறிவுரையாற்றவோ, திரைப்பட நட்சத்திரங்கள் வந்து தெளிவுரையாற்றவோ தடையில்லை. இதெல்லாம்கூட அரசியல்தான் என்ற பாடம் கல்வித் துறைக்குக் கிடைக்கவில்லை போலும்.

இத்தகைய தடை வேலிகளைத் தாண்டித்தான் மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் அரசியல் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. முற்போக்கான அரசியல் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்திற்கே இது பெரும் சவால். தட்டிக்கேட்கிற பொது அக்கறையும் ஈடுபாடும் முளையிலேயே பொசுக்கப்பட்டவர்களாகப் புதிய தலைமுறைகளை வார்க்க முயலும் வலதுசாரி / கார்ப்பரேட் அரசியலால் எழுந்த சவால்.

இது ஒருபுறமிருக்க, வயதுக்காக அல்லாமல் அனைவருக்குமான பொது அணுகுமுறையோடு அரசியலில் ஈடுபடுவதே ஆரோக்கியமானது. அந்தப் பொது அணுகுமுறை முற்போக்கானதாக, ஜனநாயக மாண்புக்கு இணக்கமானதாக, பரந்த கண்ணோட்டம் உள்ளதாக, பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

அப்படியானால், சமுதாயத்தில் கணிசமான சதவிகிதத்தினராகிய இளைஞர்களுக்கான குரல் சட்டமியற்றும் சபைகளில் ஒலிக்கச் செய்வது எப்படி? தேவைப்படுமானால் இளையோருக்கான தனித்தொகுதி போன்ற ஏற்பாடுகள் பற்றி எதிர்கால சமுதாயமும் மக்களவையும் ஆராயலாம். இதை ஆராயலாம் என்றால், தனிக் கவனம் தேவைப்படுகிற முதியவர்களுக்கும், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மாற்றுபாலினத்தவர்களுக்கும் இன்ன பிறருக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வருவது பற்றியும் ஆராயலாமே என்ற நியாயமான கோரிக்கைகள் எழவே செய்யும். மனித உரிமைகளோடு இணைந்த ஜனநாயகக் கடமைகளுக்கான வரலாற்றுப் பயணத்தில் இக்கோரிக்கைகளைச் சுண்டித்தள்ளிவிட முடியாது, கூடாது. பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடே இன்னும் சட்ட வடிவம் பெறவில்லை,

இந்த நிலையில் இத்தகைய கோரிக்கைகளோடு நாடாளுமன்றத் தூண்களைத் தாண்டி உள்ளே செல்வதற்கான நெடும்பயணங்கள் வருங்காலத்தில் புறப்படுமானால், யாரால் தடுக்க முடியும்? எதற்காகத் தடுக்க வேண்டும்?

அந்தரத்திலிருந்து வருமா தேர்தல் மாற்று?

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon