மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

பொள்ளாச்சியில் நடந்தது என்ன? – புலனாய்வு ரிப்போர்ட் - 9

பொள்ளாச்சியில் நடந்தது என்ன? – புலனாய்வு ரிப்போர்ட் - 9

நண்பர்களில் ஒருவர் அழைப்பு விடுத்தால், என்ன ஏது என்று கேட்காமலே அந்த ஸ்பாட்டுக்கு நிற்பது நட்பில் வழக்கம்தான். திருநாவுக்கரசு கும்பலின் பழக்க வழக்கங்கள் அதையும் தாண்டியிருந்ததால், சதீஷின் அழைப்புக்கு உடனே வசந்தகுமாரும் சபரிராஜனும் செவிசாய்த்தனர். சமத்தூர் தென்னந்தோப்பில் சதீஷைத் தேடி வந்தவர்கள், மாணவியின் சகோதரர் அழைத்து வந்திருந்த ஆட்களைக் கண்டதும் மிரண்டனர்.

இதன் பிறகு திருநாவுக்கரசுவை அந்த இடத்துக்கு வரவழைப்பதற்கு மட்டும், அவர்கள் கடுமையாகக் கஷ்டப்பட்டுள்ளனர். கொடுத்த கடனை வசூல் செய்ய வேண்டுமென்று கூறினால் மட்டுமே, தான் புழங்கும் இடத்தை விட்டு அவர் வெளியே வருவார் என்று தெரியும். இதற்காகத் தங்களுக்குத் தெரிந்த நபர்களில் திருநாவுக்கரசுவிடம் கடன் வாங்கியவர்களைச் சலித்துத் தேடி ஓர் ஆளைத் தேர்ந்தெடுத்தனர். வட்டிப் பணம் வாங்கிச் செல்லுமாறு அந்த நபர் அழைப்பு விடுக்க, அதை நம்பி திருநாவுக்கரசுவும் அங்கு வந்துள்ளார்.

நான்கு பேரையும் ஓரிடத்தில் சேர்த்த பிறகு, உண்மையை எப்படி வரவழைப்பது என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திருநாவுக்கரசு, சபரிராஜன் இருவரிடமும் ஒருசேர விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்று முடிவானது. இதற்காக இருவரையும் தனியே ஓரிடத்தில் வைத்துக் கேள்விகள் எழுப்பினார் மாணவியின் சகோதரர். பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தால், என்ன செய்வதென்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கேற்ப, அந்த நபர்கள் மாறி மாறிக் கேள்விகள் கேட்டனர். “எங்க வீட்டுப் பொண்ணை எதுக்குடா அசிங்கமா வீடியோ எடுத்த?” என்பதே அதன் சாராம்சமாக இருந்தது. இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அந்த நபர்கள் வீடியோ பதிவு செய்திருக்கின்றனர். அப்போது, தன்னுடைய செல்போனில் இருக்கும் வீடியோக்களை திருநாவுக்கரசு கும்பல் மிரட்டி வாங்கியதாகக் கூறியிருக்கிறார் சபரிராஜன். தான் ஒன்றுமே பண்ணவில்லை என்று அவர் கூற, தான் எதுவும் செய்யவில்லை என்று திருநாவுக்கரசு கூற... இருவரிடமும் இருந்த செல்போன்களை வாங்கிப் பார்த்தபோது அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தங்கள் வீட்டுப் பெண் சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்குவதற்காக அவர்களை வரவழைத்திருந்தாலும், அதில் வேறு சில பெண்களும் சிக்கியிருந்ததை அவர்களால் புறந்தள்ள முடியவில்லை. “இந்தப் புள்ளைங்கலாம் யாருடா, என்னடா பண்ணீங்க, இன்னும் எத்தனை பேரு வாழ்க்கையடா கெடுப்பீங்க?” என்று அவர்களது தொடர் கேள்விகள் எதற்குமே சபரிராஜனும் திருநாவுக்கரசுவும் நேரான பதிலை அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அந்த நபர்கள், இருவரையும் துவம்சம் செய்தனர். சுமார் 12 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ தான் சமீபகாலமாக வலைதளங்களில் உலவி வருகிறது. ஓர் இளம்பெண்ணை அசிங்கமாக வீடியோ எடுத்தவனின் கையையும் காலையும் உடைக்க வேண்டுமென்ற வெறி அவர்களிடம் இருந்தது.

நான்கு பேரின் செல்போன்களோடு அந்தப் பெண்ணின் சகோதரர் கிளம்பிச் செல்ல எத்தனிக்கும்போது தான், அந்த சம்பவம் நிகழ்ந்தது. அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த திருநாவுக்கரசு எழுந்திருக்கவில்லை. இதனால் பயந்துபோன அந்த கும்பல், அவரைக் கொண்டுசென்று கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தது. மற்ற மூவரும் அந்த தென்னந்தோப்பிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

திருநாவுக்கரசுவின் ஆட்கள் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்தது, அதற்காக மாணவியின் சகோதரர் ஆட்களைத் திரட்டி அடித்தது, வலி தாங்கமுடியாமல் திருநாவுக்கரசு மயங்கி விழுந்தது என்று அனைத்தும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியும். அடித்து உதைத்து மருத்துவமனையில் சேர்த்த கையோடு, அவரது வீட்டுக்கும் தகவல் சொல்லி அனுப்பப்பட்டது. மருத்துவமனையில் திருநாவுக்கரசுக்குக் காவல் இருந்த நபர்களிடம் கதறி அழுதுள்ளார் அவரது தாய் லதா. தனது மகன் இனிமேல் எந்த வம்புக்கும் போகமாட்டான் என்று கெஞ்சியுள்ளார்.

செல்போன்கள் அந்தப் பெண்ணின் சகோதரரிடம் பத்திரமாக இருக்க... மருத்துவமனையில் திருநாவுக்கரசு அவதிப்பட... அவரது நண்பர்கள் படை காணாமல்போனவர்களைத் தேடி அலைந்தது. இடைப்பட்ட காலத்தில் தனது நட்பு வட்டத்தைத் தொடர்புகொண்ட திருநாவுக்கரசு, உட்கார்ந்த இடத்திலேயே தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திட நினைக்கிறார்.

இதன் விளைவாக, மாணவியின் சகோதரர் தாக்கப்பட்டார். அதன்பிறகு, பெரிய தலைகள் தலையிட்டால் மட்டுமே நிலைமை சீராகும் எனும் அளவுக்குச் சூழ்நிலை மோசமடைந்தது.

(நாளை காலை 7 மணி பதிப்பில் தொடரும்..)

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon