மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

தேர்தல் பிரச்சாரம்: தி.மலையில் ஸ்டாலின் Vs எடப்பாடி

தேர்தல் பிரச்சாரம்: தி.மலையில் ஸ்டாலின் Vs எடப்பாடி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று திருவண்ணாமலையில் திமுக சார்பில் ஸ்டாலினும், அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மார்ச் 20ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின், தஞ்சை, பெரம்பலூர், சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்துள்ள நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் திருவண்ணாமலையில் தான் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற இருக்கிறோம். திருவாரூர் மட்டுமின்றி திருவண்ணாமலையும் திமுக கோட்டைதான். இங்கு அதிமுக வேட்பாளராக உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விலக்கிவைத்து கைது செய்யப்பட்டவர். அன்று சிறையிலிருந்தவரை எடப்பாடி இன்று வேட்பாளராக அறிவித்திருக்கிறார்” என்றார்.

வறுமையை ஒழிக்க நல்ல திட்டங்களை அதிமுக செய்து வருகிறது என்று பெரியய்யா கூறுகிறார் என ராமதாஸை விமர்சித்த ஸ்டாலின், “அதிமுக யாருடைய வறுமையை ஒழித்திருக்கிறது? வேண்டுமானால் பெரியய்யா, சின்னய்யா ஆகிய இருவருடைய வறுமையை ஒழித்திருக்கலாம். கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள முதல்வர்களையும், நம்பிக்கை இல்லாத முதல்வர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் நான்தான் கடவுள் என்று கூறும் முதல்வரை இங்கு தான் நாம் பார்க்கிறோம்” என்றார்.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “இந்தப் பொல்லாத ஆட்சிக்கு உதாரணம் பொள்ளாச்சி. பொள்ளாச்சியில் ஆளும்கட்சி மற்றும் காவல் துறை உதவியோடு கடந்த ஏழு ஆண்டுகாலமாக பாலியல் வன்முறை நடந்திருக்கிறது. இதை அதிமுக மூடி மறைக்கிறது. இந்த நிலையில் ஓர் ஆட்சி இருக்கிறதென்றால் அதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜெ மறைவுக்குப் பிறகு அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அந்தச் சமயத்தில் பிரதமர் வேலையை விட்டுவிட்டு மோடி கட்டப்பஞ்சாயத்து நடத்தி, பன்னீர்செல்வத்தைச் சமாதானம் செய்து சேர்த்து வைத்தார். அதன் பிறகு துணை முதல்வராக இந்தப் பதவியில் ஓபிஎஸ் உட்கார்ந்திருக்கிறார்.

நாட்டு மக்களை ஏமாற்ற ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை ஆணையம் அமைத்தது ஒரு நாடகம். திமுக ஆட்சிக்கு வந்தால், முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மறைவுக்குக் காரணமானவர்களைச் சிறையில் அடைப்பதுதான் எனது முதல் வேலை” என்றார்.

திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில், அன்றைய தமிழகத் தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சியைத் திருப்திபடுத்துவதற்காக ஊதுகுழலாகச் செயல்பட்டிருக்கிறார் என நீதிமன்றமே சொல்லியிருக்கிறது என்ற ஸ்டாலின், “எவ்வளவு பெரிய மோசடி இது. மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரோடுதான் இருந்தாரா?” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்

எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, அத்தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பிரச்சாரம் செய்தார்.

திறந்தவெளி வேன் மூலம், திருப்பத்தூர் பேருந்து நிலையம், ஆசிரியர் நகர் உள்ளிட்ட தொகுதிகளிலும் இதைத்தொடர்ந்து, வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து குடியாத்தத்திலும், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து சித்தூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “பிரியாணி, தேங்காய், பஜ்ஜி, புரோட்டா கடைகளில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இப்படி என்றால், ஆளும்கட்சியாக இருந்தால் என்னென்ன அராஜகம் செய்வார்கள்? திமுக அறிக்கை பொய்யானது. அக்கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. முத்தலாக் சட்டத்தை நிறைவேறவிடாமல் தடுத்தது திமுகதான்” என்றார்.

அதிமுக அரசு காவிரி பிரச்சினைக்காக 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது என்று குறிப்பிட்ட முதல்வர், “100 நாட்கள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அதிமுக உள்ளது. திமுகவினர் விஞ்ஞான மூளைபடைத்தவர்கள்; தேர்தலின்போது தில்லுமுல்லு செய்வார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

திமுக, அதிமுக மட்டுமின்றி மற்ற கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளதால், தமிழகத் தேர்தல் பிரச்சார களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon