மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

காசநோயை ஒழிக்க நேரம் வந்துவிட்டது!

காசநோயை ஒழிக்க நேரம் வந்துவிட்டது!

இன்று (மார்ச் 24) உலக காசநோய் தினம்

1882ஆம் ஆண்டில் டாக்டர் ராபர்ட் கோச் என்பவர் காசநோய்க்குக் காரணமான கிருமியைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்தார். அந்த நாளைத்தான், ஆண்டுதோறும் உலகக் காசநோய் தினமாக (World Tuberculosis (TB) Day) கொண்டாடுகிறோம். உலகம் முழுவதிலும் நிகழும் மரணங்களுக்குக் காரணமான டாப் 10 நோய்களில், காசநோயும் இடம்பெற்றிருக்கிறது. நாளொன்றுக்கு உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 4,500 பேர் இறந்து போகின்றனர்; 30,000 பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

காசநோயால் பாதிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு முறையான சுகாதாரமும் மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை. இந்நோய் தொற்றாக ஏற்பட்டவுடன் சிகிச்சை அளித்தால் உடனடியாகச் சரி செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அதுவும், HIV பாதிப்பினால் காசநோய் ஏற்பட்டவர்களில் 50% பேர் மருத்துவம் பெறுவதில்லை. 2017ஆம் ஆண்டில், காசநோய் காரணமாக இறந்து போனவர்களின் எண்ணிக்கை 1.6 மில்லியன். இவர்களில் 3,00,000 பேர் HIV நோயாளிகள்.

உலக மக்களில் கால்வாசிப் பேருக்கும் அதிகமானவர்களுக்கு டிபி தொற்று இருக்கும். அவர்களில், சிலருக்கே அது நோயாக மாறுகிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதாக பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், HIV உள்ளவர்களுக்குச் சாதாரண நபர்களைவிட காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 அல்லது 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறியும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும், 1 மில்லியன் குழந்தைகள் காசநோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2,30,000 இறந்துபோயினர் (HIV பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் உட்பட).

ஆண்டு ஒன்றுக்கு காசநோய் ஏற்படும் எண்ணிக்கை 2% குறைந்துவருகிறது. 2000-2017 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும், உலகளாவிய அளவில் 54 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தாண்டுக்கு இடையில், காசநோயால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் 42% குறைந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாகக் குறைய வேண்டும். காசநோய் சம்பந்தமான ஆய்வுகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறை இருப்பதால், ஆய்வுகளைத் துரிதப்படுத்த முடியவில்லை.

இந்த ஆண்டுக்கான உலகக் காசநோய் தினத்தின் கருப்பொருள்: ‘நேரம் வந்துவிட்டது’ (‘It’s time’). அதாவது, தலைவர்கள் வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் செய்வதாகச் சொன்ன கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்வதற்கு அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்:

· நோய் பாதிப்பைத் தடுக்கவும், மருத்துவத்துக்கும் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

· நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

· ஆய்வுகள் உட்பட, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

· ஒடுக்குமுறையையும் ஒதுக்கிவைத்தலையும் நிறுத்த வேண்டும்.

- ஆசிஃபா

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon