மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

சிலைக்கு மாலை அணிவித்தால்கூட வழக்கா? சிபிஎம்

சிலைக்கு மாலை அணிவித்தால்கூட  வழக்கா? சிபிஎம்

“வேட்பு மனு தாக்கலின்போது மூத்த தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது எப்படி தேர்தல் வரம்பு மீறலாகும்?” என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து காவல் துறையினரிடம் முன் அனுமதி பெறாமல் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான வட்டாட்சியர் தங்கமீனா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (மார்ச் 23) செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “சிலைக்கு ஏன் மாலை அணிவித்தீர்கள் என்றெல்லாம் வழக்கு போடுகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்க விரும்புவது, வேட்பாளரின் அடிப்படை கடமையான மாலை அணிவிப்பதற்கெல்லாம் வழக்கு போடுவது என்ன நியாயம்? தேர்தல் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம். வேட்பு மனு தாக்கலின்போது மூத்த தலைவர்களான அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கெல்லாம் மாலை போடுவது எப்படி வறம்பு மீறலாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது