மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

கஜா இழப்பீடு: திருவாரூர் ஆட்சியருக்கு உத்தரவு!

கஜா இழப்பீடு: திருவாரூர் ஆட்சியருக்கு உத்தரவு!

கஜா புயலால் மரணமடைந்தவருக்கு அரசு அறிவித்த 10 லட்ச ரூபாய் நிதி வழங்கபடாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.இதில் ஒரு பெரிய மரம் தன்னுடைய வீட்டின் மேல் விழுந்ததில் தன் தந்தை மரணமடைந்தார். கிராம நிர்வாக அலுவலரும் தன்னுடைய தந்தை கஜா புயலால் மரணம் அடைந்ததாக உறுதி செய்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதையடுத்து, கஜா புயலால் மரணம் அடைந்தவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான இழப்பீடு குறித்து கேட்கும்போது, கஜா புயலால் மரணமடைந்தவர்கள் பெயர் பட்டியலில் என் தந்தை பெயர் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கஜா புயலினால் மரணமடைந்த தன்னுடைய தந்தையின் பெயரை மாவட்ட நிர்வாகம் பட்டியலில் சேர்க்காதது மாவட்ட நிர்வாகம் செய்த தவறு. அதனால், அரசு அறிவித்த நிதியான 10 லட்ச ரூபாயை தங்கள் குடும்பத்திற்கு தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 23) விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு, இந்த மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon