மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

ஃபேஸ்புக்கில் விரிக்கப்படும் வலை! - காம்கேர் கே. புவனேஸ்வரி

ஃபேஸ்புக்கில் விரிக்கப்படும் வலை! - காம்கேர் கே. புவனேஸ்வரி

கனவு மெய்ப்பட – 19

வீட்டில் அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ பாட்டியோ கரிசனமாக ‘என்னப்பா(ம்மா) உடம்பு சரியில்லையா…’ என்று உண்மையான பாசத்துடன் கேட்கும்போது வராத பாசமும் நேசமும் ஃபேஸ்புக்கில் நிஜமுகம் காட்டாத மனிதர்கள் சொல்லும் ‘டேக் கேர்’ என்ற ஒற்றை வார்த்தையில் எப்படிப் பொங்கிப் பொங்கி வழிகிறது?

உண்மையைப் போலிகள் முந்திச் செல்லும் காலம் இது.

பொதுவாகவே நம் சமூகத்தில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசவும், அந்நிய மனிதர்களிடம் அந்தரங்க விஷயங்களைப் பேசாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட நாம் இன்று முகமே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களுடன் நித்தம் பேசிப் பழகுகிறோம். அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறோம். மல்லுக்கு நிற்கிறோம்.

தகாத காரியத்தைச் செய்யுமாறு நமக்குத் தூண்டுதல் எழுவதாக வைத்துக்கொள்வோம். அவ்வாறான தூண்டுதலை எழுப்புவதுதான் உணர்வு. அந்தக் காரியத்தை மேற்கொள்வதால் வரக் கூடிய பின் விளைவுகளை நினைவூட்டி, வேண்டாம் அந்தக் காரியம் என்று தடுப்பதுதான் உள்ளுணர்வு.

அந்த உள்ளுணர்வையும் உணர்வின்றி அடங்கச் செய்யும் சர்வ வல்லமை பெற்றது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்.

விஸ்வரூபம் எடுக்கும் எழுத்துக்களும், பிக்ஸல்களும்!

மற்ற சமூக வலைதளங்களைவிட ‘ஃபேஸ்புக்’ அதிகம் படிக்காதவர்களையும் ஈர்த்துள்ளது. காரணம் அதன் எளிமையான வடிவமைப்பு. இதன் காரணமாய் இப்போதெல்லாம் யாருமே சும்மா உட்கார்ந்திருப்பதில்லை. தலையைக் குனிந்து மொபைல் திரையைத் தடவியபடியே இருக்கிறார்கள். இதில் ஐடி ஊழியர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் வரை அத்தனை பேரும் அடக்கம்.

இதனால் ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் தகவல்கள் அப்படியே அதே கோணத்தில் சென்றடைய வாய்ப்பில்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் புரிந்துகொள்வார்கள். நம் பதிவின் ஒவ்வொரு எழுத்தும், புகைப்படத்தின் ஒவ்வொரு பிக்ஸலும் எத்தனையோ கோணங்களில் புரிந்துகொள்ளப்பட்டு விஸ்வரூபம் எடுக்கும்.

யாருக்கும் அறிவுரை சொல்லி எதையும் மாற்றிவிட முடியாதுதான். நம்மைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களைப் பகிர்கிறேன். அந்த சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்படலாம். முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாமே!

வலைதளத்தில் வைக்கப்படும் பொறி!

ஃபேஸ்புக்கில் உலவும் நிஜமுகம் காட்டாத மனிதர்கள், இளம் பெண்களை மட்டுமில்லாமல் எல்லா வயதினரையும் ஈர்ப்பதற்குச் சில யுக்திகளை வைத்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் பொதுவான நட்புகள் தவிர பிரபலங்கள் பெரும்பாலானோரும் அதே வகையான யுக்திகளைப் பயன்படுத்துவதாக என்னிடம் வெவ்வேறு காரணங்களுக்காக கவுன்சிலிங்குக்கு வருபவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

தினமும் குட்மார்னிங், குட்நைட் தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். ரெஸ்பான்ஸ் கொடுக்கும்வரை தொடர்வார்கள். ரெஸ்பான்ஸ் கொடுத்துவிட்டால் அதுதான் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி.

வார்த்தைக்கு வார்த்தை சகோதரி சகோதரி என்ற வார்த்தையைப் போட்டு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்.

உங்கள் சொந்த ஊர்தான் என் சொந்த ஊர், நீங்கள் படித்த கல்லூரியில்தான் என் சகோதரியும் படித்தாள்… என்று சொந்த ஊர், கல்லூரி போன்ற சென்டிமென்ட்டுகளினால் நெருக்கமாகப் பார்ப்பார்கள்.

உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே தெரிகிறீர்கள்.

கைதேர்ந்த எழுத்தாளர் போன்று எழுதுகிறீர்கள்.

இன்னும் கொஞ்சம் எடிட் செய்து கவித்துவத்துடன் திருத்தம் செய்தால் எங்கோ சென்றுவிடுவீர்கள்.

உங்கள் திறமைகள் வெளி வரவேண்டும்… நான் எடிட் செய்து கொடுக்கிறேன். கதை, கட்டுரை எழுதுங்கள்… அதை நான் சொல்லும் பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்… எனக்குத் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள்… உங்களைப் பற்றி சொல்லி வைக்கிறேன்.

பிரபல பத்திரிகைகளின் பெயர்களைச் சொல்லி ‘உங்களை பற்றிய நேர்காணலுக்கு’ இந்தப் பத்திரிகைகளில் பணிபுரியும் என் நண்பர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன். தைரியமா பேட்டி கொடுங்கள்… உங்கள் திறமைக்கு நீங்கள் இருக்க வேண்டிய இடமே இது இல்லை.

உங்களைப் போன்ற தைரியமானவர்கள்தான் இந்த நாட்டுக்குத் தேவை.

இப்படியாகத் திறமையைத் தட்டிக்கொடுப்பதைப் போலவே நெருக்கமாவார்கள்.

உங்கள் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து உங்கள் குணநலன்களை புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல கமென்ட்டுகள் போடுவார்கள்.

நீங்கள் பாரதியை நேசிப்பவராக இருந்தால் பாரதியின் பாடல் வரிகளையோ, விவேகானந்தரைக் கொண்டாடுபவராக இருந்தால் விவேகானந்தரின் ஊக்க வரிகளையோ கூகுளில் தேடி எடுத்து நீங்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு ஏற்ப கமென்ட் செய்வார்கள். நீங்களும் ‘ஆஹா… எப்படியெல்லாம் நம்மைச் சரியாகப் புரிந்துகொள்கிறார்’ என அகமகிழ்வீர்கள்.

அவரவர் புரொஃபஷனுக்கு ஏற்ப, புகழ்மாலைகளை கமெண்டுகள் மூலமாகவும், இன்பாக்ஸ் மெசஞ்சரிலும் அள்ளி வீசுவார்கள்.

நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என தெரிந்துகொள்ள ‘சார் என்ன செய்யறார்’ என்று நாசூக்காகக் கேட்பார்கள்.

உங்கள் புகைப்படத்தை வைத்து வயதை நிர்ணயிக்க முடியாதவர்கள் உங்களை கல்லூரிப் பெண்ணாகவே நினைத்துக்கொண்டு மெசஞ்சரில் பேசுவார்கள். அங்கு நீங்கள் பேசும் தோரணையிலேயே அவர்கள் உங்களை இனம் கண்டுகொள்வார்கள்.

நான் உங்கள் ஊருக்கு வருகிறேன். உங்களைப் போன்ற ஆளுமைகளை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்கு சந்திக்கலாம் என்று கேட்கும்போது ‘ஆஹா… நம்மையும் ஒரு பெரிய ஆளுமையாகக் கருதி நம்மை சந்திக்க வருகிறார்’ என அகமகிழ்ந்து முகவரி கொடுத்து பிரச்சினையை வரவேற்கத் தயாராகிவிடுவீர்கள்.

நீங்கள் ஃபேஸ்புக்கில் எந்த ஊருக்குச் செல்கிறீர்கள் எனப் பதிவிட்டிருப்பீர்கள். அதைப் பார்த்து ‘எனக்கும் அந்த ஊர்தான்… என் வீட்டுக்கு வாருங்கள்… சாப்பிட்டுச் செல்லலாம்’ என அன்புடன் அழைப்பார்கள். உள்நோக்கம் புரியாமல் ‘ஆஹா… எவ்வளவு மரியாதை நம் மேல்…’ என்று அவர் வீட்டுக்குச் செல்லத் தயாராவதோடு ஃபேஸ்புக்கிலும் அந்தச் செய்தியை வெளியிட்டு உங்கள் பெருமையைச் சொல்லிக்கொள்வீர்கள்.

பிரபலங்கள் நம்மிடம் மட்டுமே அப்படி பாசத்துடன் மரியாதையுடன் பேசுவதாக நினைத்து பெருமை தாங்காமல் அவர்களுடன் பேசத் தொடங்கி பல பர்சனல் விஷயங்களை கொட்ட ஆரம்பித்து பாதி வழியில் அவர்கள் உண்மை முகம் தெரியத் தொடங்கும்போது உள்ளுக்குள் நொறுங்கிப்போவீர்கள்.

அவர்கள் எல்லோரிடமும் அப்படித்தான் பழகுவார்கள் என்ற சந்தேகம் துளியும் வராத அளவுக்கு உங்கள் மனதை அவர்கள் ஆள்வார்கள். அது அவர்களுக்குக் கைவந்த கலை.

பாதியில் தெரிந்தால் மீண்டுவிடலாம். இறுதிப் புள்ளிவரை தெரியவே இல்லை எனில் மீள்வது கடினம்தான்.

ஒருசில பிரபலங்கள் தங்களை கிருஷ்ண பரமாத்மாவாகவே நினைத்துக்கொண்டு உங்களுக்கு உதவுவதற்காக ரொம்பவே பிரயத்தனப்படுவார்கள்.

மனதளவில் உங்களைத் தங்கள் கட்டுக்குள் வரச் செய்வார்கள். அதுதான் பெரும்பாலானோரின் நோக்கமும். அவர் இல்லாமல், அவர் போஸ்ட்டை ஃபேஸ்புக்கில் பார்க்காமல், அவரது லைக்கும், கமென்ட்டும் கிடைக்காமல் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் நிலைக்கு வருவீர்கள்.

அப்புறம் என்ன… கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கும் நிலை உருவாவதுதானே இயற்கை.

கடைசியாக ஓர் எச்சரிக்கை

பிரபலங்கள் சிலர், பெண்களுக்கு சப்போர்ட் செய்வதாக காட்டிக்கொள்ள, ஆண்கள் அத்தனை பேருமே (தங்களைத் தவிர என்பதை எங்காவது மறைமுகமாகக் கோடிட்டுக் காட்டியிருப்பார்கள்) மோசமானவர்கள் என்பதுபோன்ற வார்த்தை அலங்காரங்களால் பெண்களைக் கவர்ந்திழுத்துப் பதிவிடுவார்கள். நல்ல பெயரை சம்பாதிப்பார்கள். நீங்களும் ‘ஒரு ஆணே ஆண்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறாரே…’ எனப் பாராட்டி அவரது போஸ்டை ஷேர் செய்து ஆதரவளிப்பீர்கள்.

மேலே சொன்ன அத்தனை யுக்திகளையும்விட இந்த யுக்தி பேராபத்தானது.

இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

எங்கு முற்றுப் புள்ளியிட வேண்டும். எங்கு மூன்று புள்ளிகள் போட்டு நட்பைத் தொடர வேண்டும் என்பதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும். அந்த உரிமையையும் பிறர் கைகளில் கொடுத்துவிட வேண்டாம்.

வாழ்க்கை குறுகிய காலம் மட்டுமே. கண்ணியத்துடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டுப் போவோமே.

யோசிப்போம்!

ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல!

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon