மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

ஆயுஷ்மன் பாரத் திட்டம் பணக்காரர்களுக்கானது!

ஆயுஷ்மன் பாரத் திட்டம் பணக்காரர்களுக்கானது!

ஆயுஷ்மன் பாரத் காப்பீட்டுத் திட்டம் இந்தியாவிலுள்ள சில பணக்காரர்களின் நலனுக்கானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மோடி அரசின் மீதான பிரச்சாரத் தாக்குதல்களை ராகுல் காந்தி தீவிரப்படுத்தி வருகிறார். தன்னாட்சி அதிகாரங்கள் உடைய மத்திய நிறுவனங்களில் எழுந்த அண்மைக்கால சர்ச்சைகள், ரஃபேல் விவகாரம், வேலைவாய்ப்பின்மை, கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசின் மீது ராகுல் காந்தி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் என்று மத்திய அரசால் போற்றப்பட்டு வருகிற ஆயுஷ்மன் பாரத் திட்டத்தை ராகுல் காந்தி இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இத்திட்டம் இந்தியாவின் 15-20 பெரும் பணக்காரர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (மார்ச் 15) நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார பணியாளர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆயுஷ்மன் பாரத் திட்டம் தற்போது இயங்கும் வகையில் இயங்காது என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி பேசுகையில், “குறுகிய எண்ணிக்கையிலான சுகாதார பிரச்சினைகளை மட்டும் குறிவைக்கும் குறுகிய திட்டம்தான் ஆயுஷ்மன் பாரத். இந்தியாவிலுள்ள 15-20 பெரும் பணக்காரர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் ஆயுஷ்மன் பாரத். இத்திட்டத்தை இப்படியே நாம் தொடர்ந்து செயல்படுத்த முடியாது. ஆயுஷ்மன் பாரத் திட்டம் குறித்து எனது விமர்சனம் என்னவென்றால், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடமிருந்து முறையான ஆதரவு கட்டமைப்பு இல்லாமலேயே காப்பீடு வழங்கப்படுகிறது என்பதுதான்.

எங்களது தேர்தல் அறிக்கையில் சுகாதார உரிமைச் சட்டம் இயற்றுவதை சேர்க்க பரிசீலித்து வருகிறோம். இதன்படி அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்தபட்ச சுகாதார சேவை கிடைப்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். மேலும், சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, சுகாதாரத்திற்கான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடாக உயர்த்தப்படும். சுகாதாரம் என்பது அடித்தளம் போன்றது. வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்படும்” என்று உறுதியளித்தார்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon