மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: 40 பேர் பலி!

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: 40 பேர் பலி!

நியூசிலாந்தில் உள்ள 2 மசூதிகளில் மர்ம நபர்கள் சிலர் தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 40 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து நாட்டிலுள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் ஹேக்லே பார்க் பகுதியில் அல்நூர் மசூதி அமைந்துள்ளது. இன்று (மார்ச் 15) வெள்ளிக்கிழமை என்பதால், மதிய நேரத் தொழுகைக்காகப் பல முஸ்லிம் மக்கள் இங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்களை நோக்கிச் சுடத் தொடங்கினார். அவரது கையில் தானியங்கி துப்பாக்கி இருந்ததாக, சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். கறுப்பு நிற ஆடையும் ஹெல்மெட்டும் அணிந்திருந்தார் என்று கூறியுள்ளனர். மசூதிக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அவர் வெளியேறிவிட்டார். தொழுகைக்கு வந்த சிலர் மசூதியின் பின்புறத்தில் இருந்ததால் உயிர் பிழைத்துள்ளனர்.

இதேபோல, கிறிஸ்ட் சர்ச் தெற்கு தீவு நகர் அருகேயுள்ள லின்வுட் புறநகர்ப் பகுதி மசூதியொன்றிலும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீதிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டுமென்று அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் நியூசிலாந்திலுள்ள எந்த மசூதிக்கும் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது அரசு.

இது தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, கிறிஸ்ட்சர்ச் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் 4 பேரைக் கைது செய்துள்ளதாக, கிறிஸ்ட்சர்ச் காவல் ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார். இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.

பிரதமர் ஜெசிந்தா உருக்கம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்தன், தாக்குதல் நடத்திய நபரின் வாகனத்தில் இருந்து நவீன ரக வெடிபொருட்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளார். இது நியூசிலாந்து வரலாற்றில் கருப்பு தினம் என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். நியூசிலாந்து இனவெறிக்கு எதிரான நாடு என்றும், நடந்திருப்பது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எவரும் பயங்கரவாதிகள் பட்டியலிலோ, குற்றவாளிகள் பட்டியலிலோ இடம்பெறவில்லை.

அல்நூர் மசூதி தாக்குதலில் 30 பேரும், லின்வுட் மசூதித் தாக்குதலில் 10 பேரும் பலியானதாகத் தெரிவித்துள்ளார் ஜெசிந்தா.

இது தற்கொலைப்படை தாக்குதலா, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

வீடியோகேம் பாணி தாக்குதல்

லின்வுட் மசூதியில் தாக்குதல் நடத்தியவர் பெயர் ப்ரெண்டான் டாரண்ட் என்ற பெயரில் ட்விட்டரில் செயல்பட்டு வந்துள்ளார். வீடியோ கேம் பாணியில் அவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளார். இது தொடர்பாக, ஃபேஸ்புக்கில் லைவ்வில் இதனைப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவினை பகிர வேண்டாமென்று தெரிவித்துள்ளனர் நியூசிலாந்து போலீசார். அந்த நபர் காரில் வருவது, மசூதிக்குள் நுழைவது, அங்கிருந்தவர்களைத் தேடிச் செல்வது, பின்னர் அங்கிருந்து வெளியேறுவது உள்ளிட்ட காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நாளை டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கிறிஸ்ட்சர்ச் சென்ற வங்கதேச கிரிக்கெட் வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடந்த மசூதிக்குச் செல்லவிருந்தனர். ஆனால், துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அங்கிருந்து திரும்பியுள்ளனர். வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணியில் இருந்த அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மசூதிக்கு பஸ்ஸில் வந்ததாகத் தெரிவித்தார். “மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்று கூறினார். தற்போது, நியூசிலாந்து – வங்கதேச டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon