மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

3 தொகுதி இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

3 தொகுதி இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலையும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில், இடைத்தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்தது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வெற்றி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 18 தொகுதிகளோடு மற்ற 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டுமென திமுக தரப்பிலிருந்து மார்ச் 12 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி மார்ச் 15 (இன்று) இவ்வழக்கை விசாரிக்கலாம் என்று தெரிவித்தார்.

இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மூன்று தொகுதிகளில் வெற்றி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தேர்தல் நடத்தவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் தரப்பு தெரிவித்தது. மேலும் வழக்கு விசாரணையை 4 வாரகாலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை ஒத்திவைக்கக்கூடாது எனவும், விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் திமுக தரப்பு வலியுறுத்தியது. சிறிது நேரத்தில் அதிருப்தியடைந்த நீதிபதிகள், “எங்களை ஏன் நிர்ப்பந்திக்கிறீர்கள்? மூன்று தொகுதி இடைத்தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன பிரச்சினை? நாங்கள் விசாரணை நடத்த வேண்டாமா? எதிர்தரப்பு வாதத்தை கேட்க வேண்டாமா” என்று கேள்வியெழுப்பினர்.

18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த முடியும் எனவும், மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனவும், விசாரணையை 4 வாரகாலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதிட்டது. எனினும், திமுக தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon