மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

நக்கீரன் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

நக்கீரன் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநர் அலுவலகத்துக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குறித்துத் தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்தி, கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் தொடர்பாக, ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவால் அன்று மாலையே விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நக்கீரன் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நக்கீரன் ஊழியர்கள் பொன்னுசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் தங்களுக்கும், கட்டுரைகள் வெளியானதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon