மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: சுதீஷ்

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார், ஆனால் பேச மாட்டார்: சுதீஷ்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார், ஆனால் பேச மாட்டார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பிய விஜயகாந்த் கட்சி அலுவலகம் தாண்டி முதல் முறையாக கடந்த 10ஆம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்திருந்தார். அப்போது விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, தன்னால் பேச முடியாது என்று அவர் சைகை மூலமாக பதிலளித்தார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக துணைச் செயலாளருமான சுதீஷ், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு இன்று (மார்ச் 15) கூட்டணி தொடர்பாகவும், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாகவும் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

அப்போது, கேப்டன் உடல்நிலை எவ்வாறு உள்ளது? அவர் பிரச்சாரத்துக்கு வருவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுதீஷ், “விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் பிரச்சாரத்திலும் கலந்துகொள்வார். பிரச்சாரத்தில் கலந்துகொண்டாலும் அவர் பேசமாட்டார். ஆனால் அவர் வந்தாலே போதும் என்று ஆதரவாளர்களும் வாக்காளர்களும் நினைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, அது வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகராக இருந்தால் மகிழ்ச்சியடைவீர்களா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக மகிழ்சியடைவோம் என்று தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும், தான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று சுதீஷ் தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதை இணக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம். கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிலளித்துள்ளார்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon